Thursday, June 30, 2016

என் கால் பதித்த தடங்கள் - 3

டெல்லியில் மாமா வீட்டில் இருந்த பொழுது, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு சிறிய பொதுக்கூட்டமே வீட்டில் நடக்கும். தமிழ்நாட்டை விட்டு தூரம் நகர, நகர தமிழர்கள் மனம் மட்டும் இணைந்து கொண்டே வருவதை கண் கூடாக கண்டேன்.

பலர் வருவார்கள். நிறைய பேசுவார்கள். நிறைய விவாதிப்பார்கள். தோழர் ஆறுமுகம் என்பவர் வருவார். அக்கு வேறு, ஆணி வேறாக கம்யூனிசத்தை அலசுவார். பெர்முடா ட்ரையாங்கிள், எரிக் வான் டேனிகன், டைம் போன்றவைகள் காதில் விழும்.

பெங்காலி காரர் ஒருவர் வந்து, ஹிந்துஸ்தானிக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடுகளை பேசி அல்ல, பாடியே காண்பிப்பார்.

நான் அதற்கு முன் இளையராஜாவைத் தாண்டி போனதில்லை.

என் மனமும், அறிவும் திறந்தது அங்குதான்.

டெல்லியில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். மரபுக் கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் உள்ள வித்தியாசங்களை அலசுவார்கள்.

க்ரிஷி பவனில் இருந்து ஒரு கையெழுத்து பத்திரிகை மாதம் தோறும் வரும். அதில் என் மாமாவின் கவிதைகள் சில வந்ததை பார்த்திருக்கிறேன்.

எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற கல்லூரி இறுமாப்பு நிறைய குறைந்தது. நிறைய கேட்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் ஆதவன் போன்றவர்களின் படைப்புகள் கண்ணில் பட்டது.

நான் முழு மனதாய், படிக்க ஆரம்பித்தேன்.

இவ்வாறு ஒரு நாளில், பேச்சின் இடையில்தான் நாடி ஜோதிடம் பற்றி கேள்விப் பட்டேன்.

உன் கைவிரல் ரேகையை கொடுத்தால், உன் பெயர் மற்றும் விவரங்கள் சொல்லிவிடுவார்கள் என்றார்கள்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஒரு முறை என் கைவிரல் ரேகையை பார்த்துக் கொண்டேன். 


என் இரண்டாவது ஆன்மிக  இன்னிங்ஸ் தொடங்கியது.

Tuesday, June 28, 2016

என் கால் பதித்த தடங்கள் - 2

பதினைந்து வயது வரை ஆன்மீகம் என்றால் சங்கர மடம் மட்டும்தான் ஞாபகத்திற்கு வரும். பூணூல் பண்டிகை என்று மற்றவர்கள் அழைக்கும் ஆவணி அவிட்டம் தாண்டி, பல்வேறு பண்டிகைகள் மட்டுமே நினைவிற்கு வரும். எத்தனையோ பண்டிகைகள். வரலக்ஷ்மி  நோன்பு,காரடையான் நோன்பு, நவராத்திரி கொலு, பீஷ்ம ரத சாந்தி. பெரும்பாலும் எல்லாம் பெண்களின் பண்டிகைகள். மினிமம் ஒரு பாயசமும், வடையும், அவியலும் உண்டு.
என் ஆன்மீக அனுபவம் எல்லாமே, பண்டிகைகள் சார்ந்ததே. எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு, ஸ்பீக்கரில் வீரமணி பாட்டு, எல் ஆர் ஈஸ்வரி பாட்டு வைப்பார்கள். கடைசி நாளன்று வெண் திரையில், ஆயிரத்தில் ஒருவன்.
எல்லா பரிட்சைக்கு முன்னும்  எதற்கும் இருக்கட்டும் என்று பிள்ளையார் கோவில் சென்று வருவேன். பரீட்சையை பிள்ளையார் சமாளித்து விடுவார் என்று.
பெரியாரா? நாத்திகமா? மூச்...என் காதில் விழுந்ததே இல்லை. இப்படி போய்க் கொண்டிருந்த நாட்களில், நான் ஒருவரை சந்தித்தேன். ரமேஷ் என்று பெயர். என் நண்பரின் நண்பர்.  என்னை  விட இரண்டு வயது மூத்தவர்.
அவர்தான் என்னை ராமச்சந்திரா மிஷனிற்கு அழைத்து சென்றார். வலசையூர் தாண்டி ஆசிரமம் .இருந்தது. காலையில் எல்லாரும் த்யானம் செய்தார்கள். நான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். குரு மாதிரி இருந்தவர், மேடையில் பேசினார். எல்லாரும் கைதட்டினார்கள். மதியம் சாப்பாட்டிற்கு வரிசையில் நின்று சாப்பிட்டேன்.
மதியம் இருங்கள், இன்னொரு குரு பேசுகிறார் என்றார்கள்.
நான் யாரிடமும் சொல்லாமல் வாசலில் இருந்த சைக்கிளை மிதித்து, வீட்டிற்கு வந்து, கேப்டன் பிரபாகரன் பார்க்க தொடங்கினேன். இதுதான் என் முதல் ஆன்மீக அனுபவம்.

ஒரே ஒரு க்ளிக்

நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். நீண்ட நாள் என்னுடன் பரிச்சயம் உள்ளவர்.  நான் எழுதுவதை தொடர்ந்து ஓரளவிற்கு படித்து வருகிறார்.
"உனக்கு மனசுல பெரிய சுஜாதா, பாலகுமாரன்னு நினைப்பா?"
நான் என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
"அதாவது நீயும் ஒரு சுஜாதா....அவரை மாதிரியே நீயும் கம்ப்யூட்டர்ல இருக்கே...கதை எல்லாம் எழுதுவ....நீ ஏன் கவிதை எல்லாம் எழுதக் கூடாது"
அவரின் எள்ளல் தொனி எனக்கு புதிதல்ல என்றாலும், அவர் என் எழுத்தை நக்கல் அடிக்கிறாரா , அல்லது என்னையா என்கிற சந்தேகம் மட்டும் நீங்கவில்லை.
இந்த மாதிரியான மனிதர்களை மிக அரிதாக சந்தித்து இருக்கிறேன்.
இவர்கள் எல்லாம் கீழே இருந்த கொண்டு, மேடையைப் பார்த்து பரிகாசம் செய்கிறவர்கள்.
உனக்கு திறமை இருந்தா, நீயும் எழுது....யார் தடுத்தா? என்றெல்லாம் கேள்விகள் பிறந்தன. ஆனால், கேட்கவில்லை.
இலக்கியத்தில்  உங்களுக்கு தேவையானதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பும் சேனல் போல, நொடிக்கொரு முறை உங்களால் எதையும் படிக்கும் சுதந்திரம் உங்களிடம் உள்ளது. இதில் படைப்பாளியின் பங்கு ஒன்றுமே இல்லை.
நான் எழுத வந்த காரணம், எழுதவதற்கு நிறைய இருப்பதாகப் பட்டதால். நான் கொஞ்ச நாள் பாட முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், அதனை முழுவதுமாக பின் தொடரவில்லை. காரணம், அதற்க்கான மெனக்கெடல் என்னிடம் இல்லாததால்.
எனவே, என் எழுத்தை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. என் எழுத்தை காரி உமிழ உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், என்னைப் பற்றி?
அடுத்த முறை, நீங்கள் என் எழுத்துகளை படிப்பதற்கு பிளாகைத் திறக்கும் முன் யோசியுங்கள்.

Monday, June 27, 2016

சேலத்து கதைகள் - 389

சேலத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில், பெரிதாக எந்த கவலையும் எழுந்ததில்லை. எஸ் எஸ் எல் சி நுழைந்ததிலிருந்து, எப்போதும் ஒரு பயம் சூழ்ந்து கொண்டே இருந்தது.
ஊருக்கு வரும் மாமாவிற்கெல்லாம் இது ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
வாடா! இந்த வருஷம் எஸ் எஸ் எல் சி யா? இதுதான் உன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போறது....நன்னா படி
போதும் போதாதற்கு டியூஷன் வேறு சேர்த்து விட்டார்கள். காலையிலும், மாலையிலும் இரண்டு பேட்ச்கள். தெரு முழுவதும் சைக்கிள்கள் நிறைந்திருக்கும்.
இந்த அவஸ்தையிலும், எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது சிவாவை விட மார்க் எடுத்து விட வேண்டும்.
சிவாவுக்கும் எனக்குமான நட்பு சங்ககால நட்பு. ஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரை ஒரே வகுப்பில் படித்தோம். சேர்ந்து நிறைய சினிமா பார்த்திருக்கிறோம்.
எங்களுக்குள் மற்றதில் அத்தனை நட்பு இருந்தாலும், படிப்பு விஷயத்தில் நாங்கள் என்றும் நேர்மையாக இருந்து கொண்டது இல்லை. இது இருவருக்கும் தெரியும். வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
மிக நன்றாக பரிட்சை எழுதி விட்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவான்.
எப்படிடா எழுதின?
ச்
ஏண்டா?
ஐந்து மார்க் கணக்கு ஒண்ணு விட்டுட்டேண்டா....நீ?
மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், அதே சோக பாவத்தோடு
நான் க்ராப் சரியா போடலடா...
எங்களுக்கு போட்டியாக நாங்கள் வேறு யாரையும் வைத்துக் கொண்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், போட்டியே எங்களுக்குள்தான். இருப்பினும் எங்கள் நட்பு வேறு பல நல்ல காரணங்களால் தொடர்ந்தது.
ஒவ்வொரு முறை மார்க் ஷீட் கொடுக்கும் பொழுது, சதியாக அவன் மார்க்கை முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன். அவனும் லேசுப்பட்டவன் இல்லை. சாதாரணத்தில் சொல்லி விட மாட்டான். அவனை கொஞ்சம் தாஜா செய்து, கரெக்ட் பண்ணி மார்க் தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் ஆகி விடும்.
 இதற்கு நடுவில் எங்களின் எஸ் எஸ் எல் சீ பரிட்சையும் நடந்து முடிந்தது.
லீவில் நான் தினமும் சிவாவின் கடைக்கு செல்வேன். அது ஒரு உலர்சலவையகம். நாங்கள் பாட்டிற்கு ஏதோ பேசிக்கொண்டிருப்போம். யாரோ வந்து பில்லைத் தருவார்கள். இவன் நம்பரை பார்த்து, துணி எடுத்துக் கொடுப்பான். மீண்டும் பேச்சைத் தொடருவோம். எங்களுக்கு விஷயமா இல்லை?
அப்போது ரிலீஸ் ஆன புது சினிமா, கிரிக்கெட் மேட்ச், ஸ்கூல், கடைசியாக எங்களின் வரப் போகும் எஸ் எஸ் எல் சீ ரிசல்ட்.
ரிசல்ட்டை நினைக்க நினைக்க எங்களுக்கு திகில் ஆக இருந்தது. தினமும் கேட்பான்.
"எவ்வளவுடா வரும்? ஒரு முந்நூற்று ஐம்பது?"
"சே சே...அவ்வளவு கம்மியா வராது...மினிமம் நானூறுக்கு குறையாது "
"எப்படி சொல்றே?"
"தமிழ் எடுத்துக்கோ ......முதல் தாள்...ஒரு தொன்னூறு வை..."
"நான்லாம் அவ்வளவு நல்லா எழுதலப்பா...ஒரு எண்பது வை...."
"சரி...எண்பது .....அப்புறம், ரெண்டாவது தாள், ஒரு எண்பது வை..."
"ரெண்டாவது தாள் ரொம்ப கஷ்டம்......இலக்கணக்குறிப்பிலேயே எட்டு மார்க் போயிடிச்சு...அறுபது வை"
அவன் இப்படி சொல்லி, சொல்லியே முன்னூற்றி ஐம்பதுக்கு கொண்டு வந்து விடுவான்.
அவனே முன்னூற்றி ஐம்பது என்றால்? என் கதியை நினைத்து எங்கேயாவது அழ வேண்டும் போலிருந்தது. இத்தனைக்கும் அவனுக்கு மேத்ஸ் தண்ணி பட்ட பாடு. நான் எப்போதும் சொதப்புவேன்.
இப்படி ஒருவாறு எங்கள் நட்பு சென்று கொண்டிருந்த தினங்களில், அஷோக் ரகசியமாக வந்து சொன்னான்.
"வெங்கட்...உனக்கு விஷயம் தெரியுமா? சிவாவோட எஸ் எஸ் எல் சீ ரிசல்ட் தெரிஞ்சிடிச்சி"
நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் ரிசல்ட் வரும்? எப்படிடா அவன் மார்க் மட்டும் தெரிஞ்சது ? எவ்வளவுடா?
"எப்படின்னு தெரியல....ஏதோ தெரிஞ்சவங்க மெட்ராஸ்ல இருக்காங்களாம்...அவங்க மூலமா வாங்கி இருக்காங்க... ஆனா, மார்க் எவ்வளவுன்னு சொல்ல மாட்டேங்கறான்"
நான் உடனே விரைந்தேன்.
என்னைப் பார்த்ததும் சிவாவிற்கு அதிர்ச்சி.
வாடா!
அவன் சிரித்த சிரிப்பில் மிகுந்த முன்னெச்சரிக்கை மணி தெரிந்தது.
என்னடா? ஏதோ அஷோக் சொன்னான்.....மார்க் வந்துடுச்சா? எவ்வளவுடா?
அவன் ஏதோ உளர்றாண்டா...அவன் கிட்ட சும்மாங்காட்டி ஜோக்குக்கு சொன்னேன்...அதை போய் நிஜம்னு நினைச்சிகிட்டான்....அதுக்குத்தான் நீ வந்தியா?
அவன் சொல்லும் விதத்திலேயே மார்க் வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கெல்லாம் அவன் அப்பாதான் அபயம் தருபவர் என்று தெரியும். அவன் அப்பா என்னையும், அவனையும் ஒரே மாதிரி பார்ப்பவர். அவர்  வரக் காத்திருந்தேன்.
அன்றைக்கென்று என்னை விரட்டிக் கொண்டிருந்தான்.
ஏண்டா....சின்னத்தம்பி போகல..பேலஸ்ல....காத்து வாங்குதாம்.....போலாமா?
இல்லடா...எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல
ஏண்டா?
ஒரு வேலை இருக்கு...
அவன் அப்பா அதற்குள் சைக்கிளில் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் இவன் குடு குடு வென்று ஓடி , கண் ஜாடை காட்டியதெல்லாம் நான் கண்டு கொள்ளவில்லை.
வா கண்ணு...
எப்போதும் போல் அழைக்கும் எங்கள் ஊர் அழைப்பு.
இவன் கண் ஜாடை காட்டியதை மறுத்து, அட விடு சிவா....நம்ம வெங்கட்தானே... சொன்னா என்ன தப்பு?...கண்ணு சிவாவோட மார்க் பாரு
சட்டைப் பையில் இருந்து, துண்டு சீட்டில் பேனாவில் எழுதி இருந்த மார்க் விவரத்தை கொடுத்தார்.
மொத்தம்  388.
எனக்கு உலகே ஸ்தம்பித்தது விடும் போல் இருந்தது. இவனே இவ்வளவுதான் என்றால்? என் கதி. இவன் மேத்ஸில் புலி. நான் முந்நூற்றைம்பது கூட தாண்ட மாட்டேனோ?
அந்த ரெண்டு நாட்களும் நான் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை. அவனைப் பார்க்க கடைக்கும் செல்லவில்லை.
தினத்தந்தி காலைப்பதிப்பில் என் நம்பர் பாஸ் என்று சொன்னபோது கூட, அரைக்கிணறு தாண்டிய அவஸ்தைதான் நீடித்தது.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, தம்பி புயல் போல வந்து,
"நீ சாப்பிட்டு இருக்கியா? உன் மார்க் எல்லாம் வந்திடுச்சாம்...."
"எவ்வளவு"
"எனக்கு தெரியல ...ஸ்கூல்லதான் தெரியும் "
அந்த ஒரு வருஷத்தின் அவஸ்தையை விழுங்க முடியாமல், அவசர, அவசரமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளி விட்டு, பள்ளியை நோக்கி விரைந்தேன்.
ஸ்கூலில் ஒரே கூட்டம். நிறைய பேரின் பெற்றோர்கள் தெரிந்தார்கள். சிலர் ஸ்வீட் ஊட்டிக்கு கொண்டிருந்தார்கள். அத்தனைக்கு கூட்டத்திலும், சிவா என்னைக் கண்டுபிடித்து விட்டான்.
"வாடா...ஏண்டா ரெண்டு நாளா வரல?"
புளுகினேன்...
"தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல....அவரை பார்க்க ஊருக்கு போய் இருந்தேன்...சரி, உன் மார்க் அதேதான?"
"அதே 388 தான்.....உன்னோடது?
"இன்னும் தெரியல....காலையிலே பாஸுன்னு வந்திடுச்சு...சரி...வா உள்ளே போய் கேட்கலாம் "
ஆபிஸ் ரூமில் இருந்த க்ளெர்க் நிறைய பேருக்கு பதில் சொல்லி கோபத்தில் இருந்தார்.
"யோவ்! போயிட்டு அப்புறமா வாங்க....காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கல "
சார்...சார்...ப்ளீஸ் சார்...இவன் மார்க் மட்டும் சொல்லிடுங்க.....
சிவா என்னை விட ஆர்வத்தில் இருந்தான்.
ரோல் நம்பர்?
176174
இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் ரோல் நம்பரை தட்டி விட்டு, கம்ப்யூட்டர் பிராசஸ் செய்யும் நேரத்தில் நாம் அடையும் அதே பீதியை உணர்ந்தேன்.
ஒவ்வொரு பேப்பர் ஆக தேடினவர், கடைசித் தாளில், எண் கிடைத்து,
"பேர் வெங்கட்ராமனா?"
"ஆமாம் சார்"
"389"
அந்த நொடியில் நான் அடைந்த துல்லியமான சந்தோஷத்தை பிற்பாடு மீண்டும் என்றும் அடையவே இல்லை.

Sunday, June 26, 2016

எழுத்தாளன் ஆவது எப்படி? - சிறுகதை

மோகனசுந்தரம் (புனைப் பெயர் எழிலரசன்) அந்த வீட்டின் எண்ணை ஒரு முறை சரி பார்த்து விட்டு, காலிங் பெல்லில் கை வைத்தான்.
மோகனசுந்தரம் ஒரு வளரும் எழுத்தாளன். இது வரை மூன்று இதழ்களில் அவன் எழுத்து அச்சுக்கு வந்திருக்கிறது.
மாலைமுரசில் ஒரு ஹைகூ, மாம்பலம் டைம்ஸில்
 (மொத்தம் ஐம்பது பிரதிகள்) ஒரு சிறுகதை, அல்லி பதில்களில் ஒரு கேள்வி (நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலியில் அதிக சம்பளம் வாங்குவது யார்?)
கதவைத் திறந்ததும், பனியனோடு எழுத்துப் புயல் மதியை எதிர்பார்க்கவில்லை.
மதி போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருந்தார். காதோரம் மட்டும் விட்டு, மற்ற இடங்களில் கோத்ரெஜ் டை  தெரிந்தது.
எஸ்......
அய்யா....என் பெயர் மோகனசுந்தரம்....உங்க வாசகன்.....போன்ல கூட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்.
மதி யோசிப்பதாக தெரிந்தது.
போன வெள்ளி கால் பண்ணி இருந்தீங்களா? வாங்க.....
உள்ளே நுழைந்ததும், அந்த சிறிய ஹாலில் முக்கால்வாசிக்கு புத்தகங்களே தெரிந்தது. டேபிளில் அபிதான சிந்தாமணி.
இங்க மனிதர்களுக்கு இடம் இல்லை..எல்லாம் புத்தங்களுக்குத்தான்....தரையிலதான் உட்கார்ந்தாகணும்....
கீழே உட்காரும் போது, அலமாரியிலிருந்து விழ இருந்த, புத்தகத்தை கேட்ச் பிடித்து நிற்கவைக்க வேண்டியதாக இருந்தது.
சொல்லுங்க...என்ன விஷயமா வந்திருக்கீங்க...ரொம்ப நேரம் என்னால பேச முடியாது...நிறைய எழுத வேண்டி இருக்கு...
மோகனசுந்தரம் ஒரு முறை மென்று விழுங்கினான்.
அய்யா...நான் உங்களுடைய தீவிர வாசகன்...
இதெல்லாம் எல்லாரும் சொல்றது....ஒரே எழுத்தாளனை படிச்சிட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா, நீங்க முன்னேறலன்னு அர்த்தம். இதை சொல்றதுக்கு நேர்ல வரணும்கறது இல்ல. ஒரு சின்ன கடிதம் போதும்..
அது இல்லைங்கயா...நானும் உங்களை மாதிரி ஒரு எழுத்தாளன் ஆகணும்னு நினைக்கிறேன்...
சரி....அதுக்கு நான் என்ன செய்யணும்..
உங்க கதைகள் ஒவ்வொண்ணையும் அணு அணுவா ரசிச்சிருக்கேன்....உதாரணத்துக்கு கோதையின் கனவு....அதன் முடிவு, யாருமே எதிர்பார்க்காதது....உங்களால எப்படி அந்த மாதிரி யோசிக்க முடியுது...
மதியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
திடீர்னு ஒரு பக்கம் க்ரைம் கதை, இன்னொரு பக்கம் ஆன்மீக கதை...குறு நாவல், சிறுகதை...உங்களுடைய படைப்புகள் எல்லாமே ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.....
மதி இப்போது வாயில் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்தார்.
அய்யா, ஒரு கதையின் ஆரம்பம்தான் எனக்கு ரொம்ப சவால். ஆனா , உங்க கதைகள்ல ஆரம்பமே ஒரு கிக்கா இருக்கு...அந்த  மாதிரி உங்களால் எப்படி முடிகிறது......ஏதாவது டிப்ஸ் கொடுங்களேன்...
மதி பல்லிடுக்கிற்குள் மாட்டி இருந்த பாக்குத் துகளை முயற்சி செய்து எடுத்துக் கொண்டிருந்தார்.
"சில கதைகள்ல நிறைய அறிவியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்திருக்கீங்க..."
மதி முயற்சியில் வெற்றி பெற்று, பாக்கை வெளியே எடுத்து முடித்திருந்தார்.
தம்பி....
அவர் சொல்ல ஆரம்பிக்கும் போது, செல்போன் அழைக்கும் சத்தம் கேட்டது.
ஹலோ? நீங்களா? பாதி எழுதி முடிச்சிட்டேன்...இந்த வாரத்துக்குள்ள அனுப்பிடறேன்....ஓ...தாராளமா விளம்பரம் கொடுத்துடுங்க...
போனை வைத்து விட்டு, பார்த்தீங்களா? ஒரு நிமிஷம் கூட, என்னால் வீண் பண்ண முடியாது....இந்த வாரத்துக்குள்ள கதை கேட்குறாங்க....உடனே அனுப்பி ஆகணும்.....பொதுவா நான்  எந்த வாசகர்களையும் சந்திக்க விரும்புவது இல்லை...அவங்க உலகம் வேற...என் உலகம் வேற...இருந்தாலும், உங்களை சந்திக்க அனுமதிச்சதுக்கு காரணம், நீங்க ஒரு வளரும் எழுத்தாளர் அப்படிங்கற தகுதியில....ஒரு நிமிஷம்.....
உள்ளே போய்விட்டு, பாத்ரூமில் வெற்றிலை சாற்றை துப்பி விட்டு வந்தார்....
"இனிமே, எந்த எழுத்தாளரையும் பார்த்து, எப்படி எழுதறீங்கன்னு மட்டும் கேட்காதீங்க...உங்களுக்கு, ரெகுயம் பார் ட்ரீம் தெரியுமா?"
தெரியாது
அன்ட் தேர் வேர் நன்
 தெரியாது
மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
 தெரியாது
உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு நிச்சயமா தெரியும். உங்க லட்சியம் என்ன?
உங்களை மாதிரி ஒரு பெரிய எழுத்தாளன் ஆகணும்.
அதுக்கு ஒரு வழி இருக்கு தம்பி.
மோகனசுந்தரம் உடம்பு முழுவதும் காதாகி கேட்டான்.
சிம்பிள்.....சுயமா எந்த கதையையும் நீங்களா
 புதுசா  யோசிக்காதீங்க...மற்ற கதைகளிலிருந்து சுட்டுடுங்க...
சார்....அது தப்பு இல்லையா?
இல்லப்பா...இலக்கியம்னா சும்மாவா? அவ்வளவு ஈஸி கிடையாது
உங்க கதைகள் எல்லாம்?
நிறைய சுட்ட பழம்தான்  சொல்ல மறந்துட்டேன்...
சொல்லுங்க சார்....
எழுத்தாளர் ஆவதற்கு ஒரு சின்ன ரூல் இருக்கு
என்ன சார்
நீ எங்கேயிருந்து காபி அடிக்கறேன்னு யாருக்கும் கடைசி வரைக்கும் தெரியக்கூடாது...
நன்றி சார்













Saturday, June 25, 2016

இன்னொருவன் - சிறுகதை

முதலிலேயே ஒன்றை விடுவது உத்தமம். இது என்னைப் பற்றிய கதை அல்ல.
நான் பாட்டுக்கு கதை சொல்லிக் கொண்டே இருப்பேன்....நீங்கள் பாட்டுக்கு ம் கொட்டிக் கொண்டே இருக்க  வேண்டும்.
மேலும், இந்த கதையில் திடீர் திருப்பங்களோ, சிலைத் திருட்டோ,  பெண்களின் மன நிலையோ கிடையாது.
நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், இப்போது என் ஜன்னலின் வழியே அடுத்த அறை தெரிகிறதா?
கொஞ்சம் நாசுக்குக்காக குனிந்து பாருங்கள்.  இந்த அறையிலிருந்து ஒரு மாதிரியாக அவனைப் பார்க்க முடிகிறதா?
எப்படி இருக்கிறான்?
பரட்டை தலை, நீண்ட நாள் தாடி, கிழிந்த உடை, எங்கேயோ வெறித்த பார்வை.
நான் வந்ததிலிருந்து அவன் அப்படித்தான் இருக்கிறான்.  ராத்திரியில் அவன் கத்தும் சத்தம் கேட்க வேண்டுமே? ஒரு விசித்தரமான சத்தம். மயில் அகவும் சத்தம். எல்லாம் ஒரு துளி விஸ்கிக்காக.
மன்னிக்கவும். இந்த இடத்தில் கொஞ்சம் சுயபிரதாபம் தேவைப்படுகிறது.
என் பெயர் இப்போதைக்கு ராமன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  டெலிபோன் டைரக்டரியில் எத்தனையோ ராமன்கள் , நரசிம்மன்கள், சுரேஷ்கள்....எனக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும். வாலிபம் முறுக்கேறிய வயது. என் வகுப்புத் தோழன், மணிவண்ணன்தான், எனக்கு குடியை அறிமுகப் படுத்தினான். இப்போதெல்லாம் சீமை சரக்கு மலிவாக கிடைக்கிறது....அப்போதெல்லாம் கள்ளுதான்...காலையில் சீக்கிரம் கிளம்பி, ஊருக்கு வெளியே வயக்காட்டில் அங்கங்கு பையர்களை மிதிக்காமல், பனைமரத்தடியில், இறக்கக் காத்திருந்து, சொம்பில், ஒரு ரவுண்ட் விட்டால், குனிந்தால் முதுகு தெரியும்.  அப்படியே பள்ளிக்கு செல்வோம்.
மீண்டும் இப்போது நிகழ்காலத்திற்கு வர வேண்டி இருக்கிறது.
அவன் இப்போது என்னைப் பார்க்கிறான்.
பிரதர்....
குரலா அது?
சொல்லுங்க....
ஒரே ஒரு க்ளாஸ் விஸ்கி கிடைக்குமா?
மீண்டும் ஞாபகப் படுத்துகிறான். அதற்க்காகவா இத்தனை செலவு செய்து இங்கே வந்தோம்?
கோபத்தில் ஜன்னலை சாத்துகிறேன். ஒரு வேளை அப்படி பண்ணி இருக்கக் கூடாதோ?
மார்னிங் அசெம்பிளிங்கிற்கு கதவைத் தட்டுகிறார்கள். தெரிந்த விஷயம்தான்.
இன்றைக்கு யாரோ ஒரு புண்ணியவான், வந்து கீதையையோ, குரானையோ மேற்கோள் காட்டி, ஒரு மணிநேரம் பேசப் போகிறான்.
முதல் சில நாட்களில், அத்தனை கஷ்டமாக இருந்தது. ஓடி விடலாமா என்று இருந்தது.
தினமும் இதே மாதிரி லெக்ச்சர்கள். கொஞ்சம் தியானம். நிறைய உறக்கம். இவர்கள் கொடுக்கும் மருந்திற்கு பகல் முழுவதும் தூக்கம் வருகிறது. சாயந்திரம் கொஞ்சம் தோட்டத்தில் வேலை. டி வி கிடையாது. செல்போன் கிடையாது. இன்டர்நெட் இ மெயில்  கிடையாது. முற்றிலும் புதிய வாழ்க்கை.
இந்த பதினைந்து நாட்களில், முகத்தில் நிறம் கொஞ்சம் கூடி இருக்கிறது. நன்றாக பசிக்கிறது.
"உங்களை பழைய மாதிரி பார்க்கறதுக்கு அத்தனை சந்தோஷமாக இருக்கு "
கௌரியின் முகத்தில் போன வாரம் ஞாயிறு அன்று அத்தனை சந்தோஷம்.
இவளை எப்படி எல்லாம் இம்சித்தோம்? சரி வேண்டாம். பழைய கதை.
இப்போது சர்விஸ் அஸிஸ்டண்ட்கள் அவனை அழைக்கிறார்கள்.
கீழே வா
ஒரே ஒரு முறைப் பார்க்கிறான்.
நான் கீழ வரணும்னா, கொஞ்சம் விஸ்கி வேணும்...
சரி கொடுக்கிறோம்
பொய்
நிஜமாப்பா...வேணும்னா, டாக்டர் கிட்ட வந்து கேளு....
இல்லை..உங்களை நம்ப மாட்டேன்....
இல்லப்பா....நம்பு...
இல்லை...
இப்போ என்ன செய்யலாம்?
வேற வழி இல்லை.....
இங்கு சேரும் போதே, பார்மில் கையெழுத்து வாங்கி விடுவார்கள். இங்கு நடக்கும் சிகிச்சைப் பற்றி, எந்த விதமான சட்ட ரீதியான வழக்குகளும் தொடுக்க முடியாது அவன் கீழே வரும் போது, கண்கள் சிவந்திருந்தன. அநேகமாய் அழுதிருக்க வேண்டும். நான் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி, வந்திருந்த கெஸ்ட்டைப் பார்க்கிறேன்.
லெக்ச்சர் மிக சீரியஸ் ஆக, பகவத் கீதையைப் பற்றி, பேசிக் கொண்டிருந்தார்.
"மூன்று குணங்களால் ஆன வஸ்துக்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய் உள்ளதால், இவைகளுக்கு மேலாகிய என்னை அறிகிறதில்லை."
நான் மீண்டும் பார்க்கிறேன். அவன் அழுது கொண்டிருக்கிறான்.
அன்றைய மாலை வரை தூக்கம். வேறு எதுவும் நினைவில் இல்லை. விசிட்டர் ஹவரில் கௌரி வந்திருந்தாள்.
எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கேன்
இன்னும் பத்து நாள்தான்...நீங்க முழுசா குணமான உடனே வீட்டிற்கு போயிடலாம்
எப்படியோ இந்த குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்தா போதும்....
எல்லாம் கெட்ட நேரம்தான்....
உனக்குத்தான் நன்றி சொல்லணும் கௌரி...நீ இல்லேன்னா நான் இங்க வந்திருக்க மாட்டேன்....அதுலயே மூழ்கி இருப்பேன்
சரி விடுங்க...
நான் இங்கு வந்தது தனிக்கதை. சிறு வயதில் பழக்கமான குடி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து, தினமும் ஒரு ஆப் இல்லெயென்றால், என்னால் தூங்க முடியாது சார்.
பணம் இல்லாத காலங்களில், கடையில் எச்சைக் குடியெல்லாம் குடித்திருக்கிறேன்..
சரி விடுங்கள். அதெல்லாம் கடந்த காலம். இந்த மறுவாழ்வு மையத்தில் என்னை சேர்த்தது என் மனைவி. யார் மூலமோ கேள்விப்பட்டு, முப்பது நாட்கள் ப்ரோக்ராமில் வந்திருக்கிறோம்.
பத்து நாட்களிலேயே நிறைய முன்னேற்றங்கள். கை நடுக்கம் குறைந்திருக்கிறது.
கௌரி கிளம்பியதும், நான் அறைக்கு வந்து தூங்க ஆரம்பித்து விட்டேன்.  நடு இரவில் அறை கதவை யாரோ தட்டினார்கள்.
கதவைத் திறந்தால், போலீஸ்.
என்னப்பா இப்படி ஒரு தூக்கம்? இங்க வந்து பாரு....
அடுத்த அறைக்கு அழைத்து செல்கிறார். முதல் முறையாக உள்ளே நுழைகிறேன்.
அவன் உத்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறான்.
"கீழே வந்து ஸ்டேட்மெண்ட்ல கையெழுத்து போட்டு கொடுங்க....மாசத்துக்கு ஒரு தற்கொலை கேசு...."
நாக்கு தொங்கி, கண்கள் பாதி திறந்த நிலையில்.....
நினைக்க பயந்து, கையெழுத்து போட்டு விட்டு, மீண்டும் ரூமிற்க்கு வந்து தூங்கினேன். ஆனால், தூக்கம் வரவில்லை. ஏதேதோ நினைவுகள். பக்கத்து ரூமில் போலீசின் பேச்சு குரல்கள். விடிகாலையில் தான் தூக்கம் வந்தது.
விடிந்து விட்டது. ஒன்பது மணி இருக்கும். இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்? நேற்றைய சம்பவங்கள் எல்லாம் மறந்து விட்டு, ஒரு புதிய நாளை தொடங்க வேண்டும்.
குளித்தேன். மார்னிங் அசெம்பிலி முடிந்திருக்கும்.
ஒரு முறை ஜன்னலை திறந்து பார்த்தேன்.
பரட்டை தலை, நீண்ட நாள் தாடி, கிழிந்த உடை, எங்கேயோ வெறித்த பார்வை.......இன்னொருவன்

Thursday, June 16, 2016

ஒரே ஒரு பொய் - சிறுகதை

உலகத்திலேயே மிக கடினமான வேலை பொய் சொல்வது என்றுதான் ராம்பிரசாத் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அதை விட கடினமானது அதை சதா நினைவில் வைத்துக் கொள்வதுதான் என்பது ராம்பிரசாத்தின் சமீபத்திய அனுபவம். இத்தனைக்கும் அவன் சொன்ன பொய் மிக மிக அற்பமானது. சொல்கிறேன்.

முதலில் ராம்பிரசாத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

ராம்பிரசாத் ஒரு எம் பி ஏ  பட்டதாரி. வேலை சென்னை வேளச்சேரியில் பேபி நகரில் பிரபலாமான இன்சாப்ட் நிறுவனத்தில் தலைமை கணக்காளன். அவன் உலகம் சுலபமானது. எண்களால் நிரம்பியது. வரவு, செலவு, பற்று. இதர செலவீனங்கள். வருடாந்தர டாக்ஸ் கட்டும் உலகம்.

அவன் பி காம் படித்து முடியும் போது, அப்பா ரிடையர் ஆகும் தருவாயில் இருந்தார். பெண் பார்க்கிறேன் என்கிற போது, எனக்கு என்னப்பா அவசியம்...வைதேகிதான் இருக்காளே? அதற்கப்புறம் பார்த்துக்கலாம்...என்றான். வைதேகி தங்கை.

எப்படியோ  இங்கு அலைந்து, அங்கு அலைந்து மாம்பலத்திலேயே வரன் அமைந்தது.

மாப்பிள்ளை நேவியில் இருக்கிறார். வருடத்துக்கு  ஒரு முறை லீவில் வந்து விட்டு, வைதேகியை அம்மா ஆக்கி விட்டு, மீண்டும் கடலுக்கு சென்று விடுவார். அங்கு எல்லாம் வைதேகி ராஜ்ஜியம்தான்.

அடுத்த வருடம் ராம்பிரசாத்திற்கு பெண் பார்க்கலாம் என்கிற போது, கார்டியாக் அரெஸ்டில் அப்பா தவறிவிட்டார்.

அம்மா அப்புறம் மெதுவாக வருஷாப்திகங்கள் முடிந்த பிறகு, ஜோசியரிடம் ஜாதகம் காண்பித்ததில் அடுத்த தைக்குள் திருமணம் நிச்சயம் ஆகி விடும் என்றார்.

இதற்குள் ராம்பிரசாத் சம்பள ஏணியில் கொஞ்ச,கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தான்.

இருபத்தி எட்டு வயது. அடுத்த வருடத்திற்குள் ஆகி விடும் என்று ராம் பிரசாத்தின் அம்மா ஒவ்வொரு கல்யாணத்திலும் ஜாதகம் பத்து காப்பி ஜெராக்ஸ் போட்டு வினியோகம் செய்து கொண்டிருந்தாள்.
உங்களுக்கு தெரிஞ்சு யாராவது பொண்ணு இருக்கா மாமி?
சுலோச்சனா பொண்ணு இருந்தாளே? அவ என்னமோ சாப்ட்வேர் மாப்பிளைதான் கேட்டா...உங்க பையன் சாப்ட்வேர்ல இருக்காரா?

சாப்டவேர்தான்...அதுல அக்கவுண்ட்ஸ் வேலை...

அது ஒத்துப்பாளான்னு தெரியலையே மாமி...அவ எவ்வளவோ சம்பாதிக்கிறாளாமே...ஒரு லட்சமோ, என்னமோ சொன்னா...உங்க

பையனுக்கு சம்பளம் எவ்வளவு

தெரியல மாமி....அறுபதினாயிரம் இருக்கும் மாமி...

பொண்ண விட கம்மியா இருந்தா அவாத்துல ஒத்துப்பாளா தெரியலயே

ஜாதகம் பொருந்தாத இடத்தில் சம்பளம் மற்ற விவரங்கள் பொருந்தி வந்தும், ஜாதகம் பொருந்திய இடத்தில் சம்பளம் பொருந்தாமல் போனது.

இப்போது மேட்ரிமோனியலில் பணம் கட்டி விளம்பரம் கொடுத்தார்கள். எல்லா பெண்களும் சகட்டு மேனிக்கு சாப்ட்வேர் மாப்பிளைக்கு தவம் கிடந்தார்கள்.


பெண் வீட்டில் பிடி கொடுக்காமல் பேசினார்கள்.

ஜாதகமா? அனுப்பியிருக்கேளா? இருங்கோ மாமி....நிறைய வரது....நாங்க சாப்ட்வேர்லதான் பார்க்கிறோம்...
போனை பட்டென்று மரியாதை இன்றி வைத்தார்கள். ஒரு மாமி, எல்லாம் சரி....நீங்க எம் பி ஏ ன்னு போட்டு இருக்கேளே...அது ரெகுலரா அல்லது கரெஸ்பாண்ட்னஸா என்றாள் ....

ராம்பிரசாத் கோபத்தில், மாமி நீங்க மாப்பிள்ளை தேடறேளா  அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறேளா என்று கத்திவிட்டு வந்து விட்டான்.

அவன் அம்மாவிற்கு சதா இதே கவலை தான்.

ஜோசியரிடம் காண்பித்ததில் ஒரு முறை திருமணஞ்சேரி சென்று விட்டு வர சொன்னார்.

அதற்கப்புறம் தான் மைதிலியின் ஜாதகம் கிடைத்தது. மைதிலியின் அப்பா குரோம்பேட்டை ராதா நகரில் பிரபலமான சாஸ்திரிகள். நல்லா சாப்ட்வரேல இருக்கிற பையனா இருந்தா சொல்லுங்கோ என்று சொல்லி, குரோம்பேட்டை மண மாலையில் பதிவு செய்ய, அத்தை ஆத்திற்கு  செல்லும் பொழுது, ராம்பிரசாத் கையில் கிடைத்தது. பொருத்தங்கள் பார்த்ததில், மைதிலியின் ஜாதகம் பத்திற்கு ஒன்பது பொருத்தம். ஒரே ஒரு சிக்கல். பையன் சாப்ட்வேரில் இருக்க வேண்டும். 

இந்த இடத்தில்தான் ராம்பிரசாத் துணிந்து, தான் ஒரு ஜாவா
 டெவலப்பர் என்று பொய் சொன்னான்.

பெண்ணுடைய வேலையைப் பற்றி கேட்டதற்கு, அவள் சிறுசேரியில் ஏதோ ஒரு ஐ டி கம்பெனியில் டெஸ்டர் ஆக இருக்கிறாள் என்று தெரிந்தது.

டெஸ்டர் என்றதும் ராம் பிரசாத் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. டெஸ்டர் என்றால், கண்டிப்பாக ப்ரோக்ராம் தெரிந்திருக்காது. நாம் என்ன வேண்டுமென்றாலும், புருடா விடலாம் என்று நினைத்துக் கொண்டான்.

தாலி கழுத்தில் கட்டும் வரை, எப்படியாவது ஓட்டி விட்டால், பிற்பாடு எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று கணக்கிட்டுக் கொண்டான்.


மேலும், கல்யாணம் ஆன பின், குட்டு உடைந்தாலும், ஒன்றும் செய்ய முடியாது என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
ஆனால் மைதிலி அவனை கல்யாணத்திற்கு முன் கேள்வி கேட்டே சாகடித்தாள்.
"என்ன பிளேட்பார்ம்ல இருக்கேள்?"
"ஐந்தாவது பிளாட்பார்ம்...."
"ஜோக் அடிக்காதீங்கோ.....ஜாவாவிலயா அல்லது நெட்லயா?"
"ரெண்டிலயும்"
லஞ்சிற்குள் பிளாட்பார்ம் பற்றி நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
"காலையில கேட்ட இல்ல? நான் ஜாவாலதான் இருக்கேன்"
"அதை ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு சொல்றேள்?"
"அப்ப வேற ஏதோ ஞாபகத்தில இருந்தேன்....இப்பதான் ஞாபகம் வந்தது..."
"நல்லா ஞாபக சக்தி....உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்....இந்த வாரம் என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து டிரீட் தரா ...நீங்களும் கண்டிப்பா வரணும்..."

ராம்பிரசாத்திற்கு அப்பொழுதே வயிறு கலங்கியது. என்ன ஆகுமோ?

அவன் நினைத்தவாறே, பார்ட்டியில் மைதிலியின் நண்பிகள் இருவர், ராம்ப்ரசாத்திடம் பேச்சு கொடுத்தே, அவனைப் பற்றிய சந்தேகத்தை கிளப்பி விட்டார்கள்.

என்னடி....ஜாவாங்கற....சுத்தமா ஒண்ணுமே தெரியல...நல்லா விசாரிச்சுக்கோடி...எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு....

அதற்குள் சமர்த்தாக ராம்பிரசாத் மைதிலியை வெற்றி தியேட்டருக்கு கூட்டி சென்று விட்டான். இளமையும், சந்தேகமும் போட்டி போட...இளமையே
வென்றது.

போனில் குழைவாக, யோவ்! பிராடு...நீ என்னதான்யா வேலை பார்க்குற...என்ன ஏமாத்தறாயா? என்பாள்.
அப்பாவியாக, நீ வேணும்னா...வந்து ஆபிஸ்ல விசாரி என்பான்

எப்படியோ கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மோகம் முப்பது நாளா? இவர்கள் விஷயத்தில் பதினேழாவது நாளில் கொடைக்கானலில் ஹனிமூனில் இருக்கும் போது, சம்பளம் பே ஸ்லிப்பில் அழகாக டெஸிக்நேஷனில் சீப் அக்கவுண்ட் ஆஃபீசர் என்று இ மெயிலில் வந்தது.

மைதிலி பண்ணிய ஆர்ப்பாட்டத்திற்கு, லாட்ஜே திரண்டு வந்து விட்டது.

ராம்பிரசாத் கத்தி பார்த்தான். கோபித்துக் கொண்டு பார்த்தான். கையில் கிடைத்ததெல்லாம் எடுத்து விசிறிப் பார்த்தான்.

உங்களை மாதிரி பொண்ணுங்கக்கெல்லாம் சாப்ட்வேர் வெறி.....பையன் நல்லவனா இருக்கணும்னு ஒருத்தியும் கேட்கறது இல்ல...பையன் சாப்ட்வேர்ல இருக்கணும்...கை நிறைய சம்பாதிக்கணும்...உடனே தனிக்குடித்தனம் போயிடனும்...மாமனார், மாமியாரை போய் எங்கேயாவது கடாசிட்டு வந்திடனும்....சே....இவ்வளவு பேசிறியே....உங்க அப்பா என்ன சாப்ட்வேர்லயா வேலைப் பார்த்தாரு?  நான் நல்ல வேலைலதான் இருக்கேன்...கை நிறைய சம்பாதிக்கிறேன்...இன்னும் என்ன வேணும்?

அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள்

சே ...என்ன எழவுடா இது? பேசாம கல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்?

அவன் கத்துவதை பொருட்படுத்தாமல் அழுது கொண்டே இருந்தாள்.

சனியனே...இப்ப அழுகையை நிறுத்த போறயா இல்லையா?

அழுகையை நிறுத்திக் கொண்டே, விம்மினாள்...மெதுவான குரலில் கேட்டாள்...

"இத என் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல?"

"சொன்னா...எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடந்திருக்காது....வேணும்னுதான் பொய் சொன்னேன்...வேற வழி இல்ல...எனக்கு மட்டும் இல்ல...இந்த காலத்தில இருக்கிற பசங்க அத்தனை பேருக்கும் ...."
"நீங்களாச்சும் ப்ரோக்ராமரா இருக்கக்கூடாது...சே"
"என்ன சொல்றே....புரியல...."
"நானும் டெஸ்டர் இல்ல....அக்கவுண்ட்ஸ்தான் "



















என் கால் பதித்த தடங்கள் - 1

நேற்று இரவு சென்னையிலிருந்து அன்பர் ஒருவர் அழைத்திருந்தார். நான் ப்ளாகில் கிறுக்குவதைப் பற்றி பேசத்தான். நல்ல வேளையாக, நீங்கள் எல்லாம் ஏன் எழுத வந்தீர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? ஒரு வேளை, வேலையை விட்டு விட்டாயா? என்கிற ரீதியில் தொடங்கினார். பெரும்பாலனவர்கள் போல, எனக்கு பேஷனும், ப்ரோபஷனும் வேறு. வயிறு நிறைவதற்க்கும், மனது நிறைவதற்க்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன. என் தொழிலில் நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். நிறைய ஊர்களுக்கு பிரயாணிக்கிறேன். பலர் என்னிடம் தனிமையில் அழுதிருக்கிறார்கள். நிறைய காதல் தோல்வி கதைகள் கேட்டிருக்கிறேன். தற்கொலை வரை சென்றவரை சந்தித்திருக்கிறேன்.  நான் மட்டும் அல்ல. நாம் எல்லாரும்தான். நாம் எல்லாருமே நிறைய அனுபவங்களோடுதான்  வாழ்கிறோம். இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தும், இன்னும் மனிதன் பல குறைகளோடுதான் வாழ்கிறான். அதுவும் இயற்கைதானே? நம்மில் குறைகள் இல்லாதார் யார்? நான் படித்த இலக்கியங்கள் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்னை மேம்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக, ஓயாமல் உங்களைத் தொடர்பு கொள்வதே என் எழுத்தின் நோக்கம். நல்லதோ, தீயதோ யாரோ ஒருவர் நம் எழுத்துக்களைப் பற்றி பேசுவதே, ஒரு நல்ல ஆரம்பம்தான். தொடங்கி விட்டேன். தொடருங்கள்.

Wednesday, June 15, 2016

சீனிவாசன் - சிறுகதை

டிசம்பர் இருபத்து நான்கு, எண்பத்து ஏழாம் வருடம் எனக்கு பரீட்சை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. காரணம் அன்று விடியற்காலையில் எம் ஜி ஆர் இறந்து விட்டார்.

ஐய்யா ..ஜாலி என்றேன்.

ரேடியோவும், டி வி  யும் யாழ் மீட்டியது. எதிர் வீட்டு மாமா, உன் பாடு கொண்டாட்டம்தான். இனி, கிரேகியம் முடிக்கும் ஸ்கூல் திறக்காது என்றார்.






சொன்ன மாதிரியே நடந்தது. அடுத்த நாளைக்கும், அதற்கடுத்த நாளைக்கும் பள்ளி விடுமுறை என அறிவித்தது.

அப்போதுதான் பள்ளி பேஸ்கட் பால்  மைதானத்தில் சீனிவாசனை முதலில்
கவனித்தேன்.




சீனிவாசன் என் வகுப்பு. கடைசி வரிசையிலும் இல்லாமல், முதல் வரிசையிலும் இல்லாமல் நடுவில் பாதுகாப்பாய் அமர்பவன்.

யாருக்கும் அவனைப் பற்றிய அபிப்ராயமே இருந்ததில்லை. 

திடீரென்று கிளாஸ் டீச்சரிடம் சீனிவாசனைப் பற்றிய அபிப்ராயத்தை கேட்டால் நிச்சயம் தடுமாறியிருப்பார். வாத்தியார்களை பொருத்தவரை, அவர்கள் கவனத்தில் இருப்பது, நன்றாக படிப்பவர்களோ, அல்லது சுத்தமாய் படிப்பு வராதவர்களோ.

என்ன, இன்னிக்கும் லீவா?

ஆமாம்.

நான் அவனுடன் பேசியதே அவனுக்கு அங்கீகாரமாய் இருந்திருக்க வேண்டும்.


அப்போதுதான் அவனுடைய கசங்கிய உடைகளை பார்க்க நேர்ந்தது. அக்குளில் மறைவாய் கிழிசல். 


வீட்டிற்கு போகலையா?

ம் ஹி ம் ....இந்த பைகளை பார்த்துக்கணும்.....

கீழே கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், இவனைக் காவலுக்கு வைத்து சென்றிருந்தனர். மொத்தம் இருபது பைகள் இருக்கும். தூரத்தில், கிரிக்கெட் விளையாட டீம் பிரித்து கொண்டு இருந்தது தெரிந்தது.

நீ போகலயா?

எனக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்காது....

 எனக்கும் என்றேன்.

பரஸ்பரம் பொது விருப்பில், நாங்கள் நெருங்குவதாக தோன்றியது. இது வரையில் மொத்தமே பத்து வார்த்தைகள் கூட பேசியதில்லை. நான் எல்லாம் முதல் வரிசை. சிவாவிடம் போட்டியிலேயே என் பொழுது போய் விடும்.

எப்ப எக்ஸாம் வைப்பாங்கன்னு தெரியல? தினமும் இந்த மாதி...

நான் எதிர்பாராமல்  அந்த சம்பவம் நடந்தது. பேசிக் கொண்டிருந்த சீனி, மடாலேன கீழே சரிந்தான். பேஸ்கட் பால் மைதானத்தில், நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.

விஜய்...சூரி....பிரபா....

நான் கத்தினது அவர்களுக்கு கேட்கவே இல்லை.

இப்போது சீனி மயக்கத்தில் இருந்தான். கண்கள் திறக்கவில்லை. நான் பையில் இருந்த, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து முகத்தில் அடித்தேன்.

பழக்கம் இல்லாததால், என் கால்கள் அனிச்சையாய் நடுங்கிக் கொண்டிருந்தன.

டேய்,டேய்...
என் மடியில் சரித்து, அவன் வாயில் கொஞ்சம் தண்ணீர் விட்டதும், இரண்டு நிமிடத்தில் கண் திறந்தான். போன உயிர் எனக்கு வந்தது.
என்னடா ஆச்சு...
மயக்கம் போட்டுட்டேனா?
ஆமாம்.....ஏன்?
இல்ல...நேத்திலேர்ந்து சாப்பிடல...அதான்

பளார் என்று யாரோ அறைந்தமாதிரி இருந்தது.

ஏன் உங்க வீட்டில யாருமே இல்ல?

இருக்காங்க.....ஆனா,

அவன் சொல்ல முற்படும் பொழுது, சையத் வந்து விட்டான்....

டேய்...சீனி, உனக்கு லீவுன்னு சொன்ன உடனே, உங்க சித்தி உன்னைய கூப்பிட்டாங்க....ஏதோ மாவு அறைக்கனுமாம்...இந்த பைய எல்லாம் நான் பார்த்துகிறேன்....நீ வீட்டுக்கு போ....நேத்து மாதிரி விறகுல அடி வாங்கி வாங்காதே....

அப்பொழுதுதான், அவன் காலில் இருந்த தழும்புகளுக்கு அர்த்தம் தெரிந்தது.

இருவரும் கிளம்பினோம். வாசல் வரை, ஒன்றும் பேசவில்லை. கிளம்பும் போது மெதுவாக, "யார் கிட்டயும் சொல்லாதே" என்றான்.


அப்புறம் அவனை தற்காலிகமாக மறந்து, சாயந்திரம் ட்யுஷனில் சிவாவிடம் கேட்டேன்.

அதுவா? அது ஒரு பெரிய சோகக்கதை. சீனி அம்மா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க...அவங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாறு.....சொத்து முழுவதும் இவன் பேர்ல இருக்கு....சித்தி தன் பேருக்கு மாற்ற கேக்குறாங்க...அவங்க அப்பா அதுக்கு ஒத்துக்கல...அந்த கோபத்த அவன் மேல காண்பிக்கிறாங்க...அவன் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடறான்...எல்லா வேலையும் அவன் தான் செய்றான்

மேற்கொண்டு கதையை கேட்க, மனது தைரியப்படவில்லை.

அடுத்த நாள் மீண்டும் எக்ஸாம் எழுத பள்ளிக்கு சென்ற பொழுது, அதே போல நாளை பரீட்சை என்கிற போர்ட் இருந்தது.

சீனி இன்றும் பைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டாயா? என்றேன்
திரும்பி புன்னகைத்தான்.
ஆச்சு......
இன்னிக்கும் எக்ஸாம் இல்லை....
இன்னும் எவ்வளவு நாளுன்னு தெரியல....

உங்க வீட்டில யாரெல்லாம் இருக்காங்க.....
அப்பா, சித்தி, தங்கை,

உன் தங்கையா?
ஆமாம்....சித்தியோட பொண்ணு...

நேத்து பயந்திட்டேன்.....

சாப்பிடல அதுதான்....அது அடிக்கடி நடக்கறதுதான்....

போலாமா? என்றேன்

நீ போ....நான் அப்புறமா வரேன்

ஏன்?

எங்க வீட்டில பணம் காணாம போயிடிச்சி...சித்தி நான்தான் எடுத்தேன்னு நினைச்சு, அடிச்சி அனுப்பிட்டாங்க......இப்ப வெறும் கையோடு போனா சோறு கிடைக்காது..யார் கிட்டயாவது சொல்லி வாங்கி போயிக்கறேன்...

நீதான் எடுக்கலையே? அப்புறம் ஏன் பயப்படனும்?

அவங்க நம்ப மாட்டாங்க....ஒவ்வொரு தடவையும் என் மேல, ஏதாவது ஒரு பிரச்சனை கிளப்பிகிட்டே இருப்பாங்க....சொத்து எழுதிக் கொடுத்துட்டா அவங்க உட்டுருவாங்க...

எழுதிக் கொடுத்துட வேண்டியதுதானே

அப்பா பயப்படறாரு....சித்தி சொந்தமெல்லாம் வந்துடும்....

நான் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன். அடுத்த நாள், என் வீடு தேடி வந்தான்.


எப்படி என் வீடு தெரியும்?
சிவா சொன்னான்...

உள்ளே வந்து என் அம்மாவின் காலில் விழுந்தான். தம்பியுடன் பேசினான்.

இருவரும் சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பினோம்.

உங்க அம்மா எவ்வளவு நல்லவங்க இல்ல?

ஹ்ம்ம்...படிக்கலேன்னா அடிச்சுடுவாங்க....

அப்படித்தான் இருக்கணும்....எனக்கும் அம்மா இருந்தா இப்படித்தான் இருப்பாங்க...இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்....

அடிக்கடி வா....

இனிமே எப்படி?

ஏன்?

மணல் மேட்டில், என்னோடு இன்னொரு சைக்கிளில் இணையாக வந்தவன், திடீரென்று புயல் வேகத்தில் கடலூர் பஸ்ஸை கடந்து, விமலா மெஸ் திருப்பத்தில், எதிர் வந்த லாரியின் உள்ளே புகுந்து....

 இன்று வரை எல்லாரும் விபத்து என்றுதான்  நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.







Tuesday, June 14, 2016

ராஜீவ் காந்தி

எண்பத்து நான்கில் திடீரென்று இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, ராஜீவ் காந்தி பிரபல்யமானார். அதுவரை, ப்ளைட் விமானியாக இருந்தவர், ஒரு சிலநாட்களில், அரசியலில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். சேலமே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. ராஜீவ் காந்தி, இரண்டாவது  அக்ரஹாரம் வழியாக செல்கிறார் என்றதுமே, ஊர் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை, பெரியவர்கள் விரட்டினார்கள். கவனியுங்கள். இரண்டாவது  அக்ரஹாரத்தில், அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாட முடியும். எப்பொழுதோ செல்லும் ஒன்றிரண்டு டவுன் பஸ்களைத் தாண்டி, சாலை காலியாக இருக்கும். மனோகர் மெடிகல்ஸ் அருகே நின்று பார்த்த பொழுது, வைஜயந்தி மாலாவைப் பார்க்க முடிந்தது. கூட்டம் முழுக்க, வைஜயந்தி மாலா என்று கத்திக் கொண்டிருந்தார்கள். என் நண்பன் பாபு என்னிடம், ராஜீவ் காந்தி, நம்ம ஸ்கூல் கிட்ட வந்திருக்கிராருடா....இப்ப யாரும் இல்ல...போய் பாக்கலாமா? என்றான். எனக்கு சிலீர் என்றது. .எத்தனையோ முறை டி வீ யில் பார்த்த ராஜீவ். மிக அருகில் பார்க்க போகிறோம். கூட்டத்தைத் தவிர்த்து, மிளகாய் சந்து வழியாக, லக்ஷ்மி பெருமாள் கோயில் வழியாக ஸ்கூலை அடைந்தோம். எப்போதும் போல் காமராஜர் எங்கள் பள்ளியின் வாசலில் ஒரே திக்கை பார்த்துக் கொண்டு, சிலையாய் நின்று கொண்டிருந்தார்.
எங்கடா? என்றேன்..
இன்னும் வரவில்லை போல இருக்கு.....

திடீரென்று நிறைய கார்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் வந்தார்கள். தடுப்புக்கு அப்பால், மக்கள் ராஜீவ் என்று கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லாம் ராஜ விஸ்வாசம்.

போலீஸ் பந்தோபஸ்து அதிகமாய் இருந்தது. ஒரு இடத்தில், கிடைத்த சிறிய சந்தில், நானும் பாபுவும் மூங்கிலை பிளந்து கொண்டு, நுழைந்தோம்.

ராஜீவ் அப்போது காரிலிருந்து இறங்கி, மக்களைப் பார்த்த மகிழ்ச்சியில் சால்வை வாங்கிக் கொண்டிருந்தார். இரானிய சிகப்பு. ஆறடிக்கு அருகே உயரம். சிரிக்கும் கண்கள்.

அத்தனை கூட்டத்தில், உள்ளே நுழைந்து, சார்..என்று முதலில் நான் கை நீட்டினேன். பாபு இரண்டு அடி பின்னால் நின்றான். மிக நிதானமாய், குனிந்து என்னை முழுவதுமாய் பார்த்தார். முகத்தில் புன்னகை தவழ, கை கொடுத்தார். மிருதுவான கைகள்.

ஒவ்வொரு முறை, ராஜீவ் காந்தி அவர்களை டி வீ யில் காண்பிக்கும் பொழுது, அந்த மென்மையான
கரங்களும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Monday, June 13, 2016

பீட்பேக் - சிறுகதை



ராகவனுக்கு நெற்றிப் பொட்டில் சுரீரென்று வலித்தது. அது கோபம் வருவதற்கான அறிகுறி.  அவன் மனைவியால் மட்டுமே, புரிந்து கொள்ளக்கூடிய உணர்வு.
எதிரே இருந்த ரிதேந்திராவை மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டால் அடிக்கலாம் போல இருந்தது. ஆனால், இது அலுவலக நடை முறைக்கு சாத்தியம் இல்லாதது. அவன் தனக்கு உயர் அதிகாரி. சம்பளம் கொடுப்பவன்.
பொறுமை இழந்து, முடிவாய் என்ன சொல்கீறீர்கள்? என்றான்.
“வேறு என்ன சொல்வது? நீங்கள் இந்த முறையும் கோட் அடித்து விட்டீர்கள்”
நானா? என்றான். நிறைய சொல்ல வேண்டும் போல இருந்தது. கோபத்தில் உஷ்ணக்காற்று மட்டுமே வந்தது.  மெதுவான குரலில் சொன்னான்.
நீங்கள் என்னைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஜேச்க்ரிப்ட்டிலிருந்து, ஸீ க்யு எல் வரை எல்லாம் எடுத்தாகி விட்டது. பசங்கள்  எல்லாம் தண்டம். அவனவன், பெண்களின் மார்பையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
அது நமக்கு அவுட் ஆப் ஸ்கோப். நமக்கு தேவை பீட்பக். நற்சான்றிதழ். பையன் குடும்பம் நடத்தி, சீமந்தம் செய்தாலும், நமக்கு கவலை இல்லை.  நம்முடைய இலக்கு நான்கிற்கு மேல். இல்லாவிடில், முப்பது பெர்செண்ட் கட்...உங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை....நீங்கள் சீனியர்..
எதிக்ஸ் அல்லது நீதிநெறி  பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்க நினைத்தான்.
நீங்களெல்லாம் தொண்ணூறுக்கு அப்புறம் பிறந்தவர்கள். கூகிள் வாசிகள். எல்லாம் கார்பன் காபி கேசுகள். காலையில் முளைத்த காளான்கள்.
எதுவும் சொல்லமுடியவில்லை.
ராகவனுக்கு நாற்பத்தி மூன்று வயது ஆகிறது.  வீடு மாம்பாக்கம். உங்களுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தாம்பரத்திலிருந்து பள்ளிக்கரணை செல்லும் பாதையில், சேலையூர் தாண்டி, ராஜ கீழ்ப்பாக்கம் முனையில் திரும்பினால், உள்ளே ஐந்து கிலோ மீட்டர் தாண்டி, எம் ஜி ஆர் நகரில், ராஜாஜி தெருவில் வீடு. சென்னையிலிருந்து தூரம். அங்குதான் சல்லிசாக வீடு கிடைத்தது.
தினமும் எம் ஆருக்கோ, படப்பைக்கோ, ஸ்ரீபெரும்புதூருக்கோ ட்ரெயினிலும், பஸ்சிலோ செல்வான். இங்குதான் நகரின் பெரும்பாலான டி கம்பெனிகள் இருக்கின்றன. ராகவனுக்கு ரிதேந்திராவிடம் இருந்து குறிப்பு வரும். வாட்ஸ் அப்பில் முகவரி வரும். செல்வான்.
அங்கு நாற்பது பேர் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இந்தியாவின் தலைசிறந்த காலேஜில் இருந்து, பிளேஸ்மேண்டில் வேலை கிடைத்து, புதிதாய் வேலைக்கு வந்த இளம் என்ஜினியர்கள். இதில் கம்ப்யூட்டர் தெரிந்தவர்களும் இருப்பார்கள். தெரியாதவர்களும் இருப்பார்கள்.
ஒரு மாதக் காலத்தினுள் அவர்களை தயாராக்கி, கம்பெனிக்குள் நேர்ந்து விட வேண்டும். அப்புறம் மேனஜ்மென்ட் பார்த்துக் கொள்ளும்.
கன்யாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை இவர்களை வலை வீசி பிடிக்க நிர்வாகம் காத்திருந்தது.
பாதி பேர் மேனேஜ்மென்ட் கோட்டாவில்  பணம் கட்டி படித்தவர்கள். நுனி நாக்கு இங்கிலீஷ் பேசுபவர்கள். சகட்டு மேனிக்கு, கும்பலாய், ஆண்களும், பெண்களுமாய் சிகரட் பிடிப்பவர்கள்.  வெறும் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள். அறிவு இல்லாதவர்கள்.
இவர்களுக்கு வகுப்பு எடுப்பதை விட, பெரிய பாவம் எதுவும் இல்லை என்று நினைத்துக் கொள்வான்.
ஆனால், அவர்களிடம் ஒரு பலம் இருந்தது. அதுதான் பீட்பேக். எப்படி ஒரு பொருள் வாங்கியவுடன், அதன் தரத்தை, கேள்வி பதில் கொடுத்து, ஒரு பார்மில் நிரப்ப சொல்கிறார்களோ, அது போல இவன் கொடுக்கின்ற பயிற்சியும் ஒரு சர்விஸ். எனவே, வகுப்பில் படிப்பவர்கள் அனைவரும், பீட்பக் தரவேண்டும்.
அதில் நான்கிற்கு குறைந்தால், உடனே கஸ்டமர் முப்பது சதவீதத்தை குறைத்து விடுவான். எனவே, வாலைச் சுருட்டிக் கொண்டு, வேலை செய்ய வேண்டும்.
அதுதான், ராகவனுக்கு பிரச்சனை. ராகவனால் சில இங்கிதங்களைக் கடந்தால் தாங்கிக் கொள்ளமுடியாது. பொங்கி விடுவான் 
வகுப்புக்கு தாமதமாய் வந்தால், உள்ளே ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பான். பெரும்பாலும் நடக்காது. அவனவன், சினிமா தியேட்டர் இண்டர்வல் மாதிரி வருவான்.
கிளாஸ் நடத்தும் போது , மொபைலில் கேம் விளையாடினால், எப்படி இருக்கும்? ராகவனுக்கு கேட்கிற அதிகாரம் கிடையாது.
அதுவும் வடக்கு மாநிலமாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம். எல்லாம் ஜோடி, ஜோடியாகத்தான் சுற்றுவார்கள். எதுவும் கேட்க முடியாது.
இரண்டு முறை இந்த மாதிரி அத்து மீறல்களுக்கு கத்தியதற்கு , கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், பீட்பேக்கில் புத்தியை காண்பித்து விட்டார்கள்.
ரிதேந்திரா ஒரு முறை பார்த்து விட்டு தொடர்ந்தார்.
" இங்கே பாருங்கள் ராகவன்.....நான் ஒன்றும் மனசாட்சி இல்லாதவன் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்வது. இந்த ஜெனரேஷன் அப்படி. பட், எனக்கும் சில சங்கடங்கள் இருக்கின்றன. அடிக்கடி, பீட்பேக் குறைந்தால், கஸ்டமர் வேறு இன்னொருவரிடம் தாவி விடுவான். ஸோ, நம் தரப்பில், என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். ஏதோ ஒரு சல்யுஷன் இருக்கும்...உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா, சொல்லுங்க...இப்போதைக்கு, நாளைக்கு உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன்...அது சரிப்பட்டு வரலேன்னா....லெட் அஸ் சீ"
ராகவன் வெளியே வரும் பொழுது, மாலை ஐந்து மணி. தலையை வலித்தது. பையை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பினான். வரும் வழியில் ரிதேந்திராவிடம் இருந்து, முகவரி வந்தது. என்ன இடம்? வாட்ஸ் அப்பில் தெளிவாய், பெருங்குடி என்றது.
பெருங்குடியில் தெரிந்த இடம். ஏற்கனவே பல முறை அவன் பழகிய இடம். ராகவன் ஒரு முடிவுடன் சென்றான்.
ரிதேந்திரா கூப்பிட்டு வாழ்த்தினார்.
"வாவ் ராகவ்.....இந்த முறை, உன் பீட்பேக் எக்ஸ்செல்லேன்ட்...டூ யு க்நொவ் ஹௌ மச்?"
"எவ்வளவு?"
"நாலு புள்ளி எட்டு....கிளையன்ட் மிக குஷி ஆகி விட்டான்....இன்னும் புனேல, டெல்லிக்கெல்லாம், உன்னையே அனுப்ப சொல்றான்.... யு ஆர் ராக்கிங் மேன் " என்றான்..
"தேங்க்ஸ்"
"இத எப்படி சாதிச்சே?"
"அவசியம் சொல்லனுமா?"
"ஆமாம்....."
"இந்த ட்ரெய்னிங்லேர்ந்து, ஹெச் ஆர் மேனேஜர் ட்ரெய்னர் கிட்டயும், பசங்க எப்படி படிக்கிறாங்கன்னு பீட்பேக் கேக்கிறாங்கன்னு சொன்னேன்"
"அப்படி கேட்கறாங்களா??"
"இல்லை"