Sunday, July 31, 2016

பாக்யராஜின் திரைக்கதை அமைப்பு

சில வருடங்கள் கழித்து, பாக்யராஜின் திரைப்படங்களை பார்த்து வருகிறேன். சின்ன வயதில், அந்த திரைக்கதைக்கும், நேட்டிவிட்டிக்கும் உருகியிருக்கிறேன். இப்போது ஒரு திரைப்பட ஆர்வலனாக பார்க்கும்பொழுது, அவரின் படைப்புத்திறன் பிரமிக்க வைக்கிறது.

மொத்தம் இருபத்து நான்கு படங்கள். எழுபதுகளின் மத்தியிலிருந்து, தொன்னூறுகளின் நடுப்பகுதி வரை நம்மை ஆக்கிரமித்த பலதரப்பட்ட ரசனைகளோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். எல்லா படங்களிலும், பிரதான கதாபாத்திரம் பாக்யராஜ். தன் எல்லைகள் உணர்ந்து, பெரும்பாலும் லோயர் மிடில் க்ளாஸ் இளைஞன். ஆக்ரோஷமான சண்டை இல்லை. அப்பா, அம்மாவை கொலை செய்த வில்லன்களை, இருபது வருடம் கழித்து, பழி வாங்க கண் சிவந்து காத்திருக்கும், கொலைவெறி இல்லை. தங்கை கற்பழிப்பு, குடும்ப பாட்டில் இணைதல் இல்லை. அந்த ஏழு நாட்கள், மணிரத்தனத்தின் பட்டறையில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

முந்தானை முடிச்சு, கமெர்ஷியலாகவும், நல்ல கருத்தாழம் உள்ளதாகவும் இருக்கிறது. முதல் முறையாய் வெண்திரையில் சித்தி என்பவள் நல்லவள்.

ஒரு தேர்ந்த சிற்பியை போல, ஒவ்வொரு கதையும் நாம் சாலையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றி செதுக்கப்பட்டிருக்கிறது. எந்த அலட்டலும் இல்லாத, தொண்ணுறுகளில் நாம் பார்த்த கிராமம் கண் முன் விரிகிறது. ஆங்காங்கே, ஊறுகாய் மாதிரி முருங்கைக்காய் சமாச்சாரங்கள்.

பாக்யராஜின் ஆச்சர்யமான நோக்கு. எல்லா படங்களிலும் பெண்களின் கதாபாத்திரத்துக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம். மற்ற படங்கள் போல, ஹீரோயின் மரத்தை சுற்றி காதல் புரியாமல், கதையின் ஆதார நாடியை தீர்மானிக்கும் பாத்திரமாக பெண்கள் போற்றப்படுவது.

ஹீரோ என்பவன், யதார்த்தத்தை மீறாமல், அந்த பெண்ணுடன் வாழ இருப்பவன். அவர்களுக்குள் எழும் முரண்பாடுகள் கதையின் போக்கை தீர்மானிக்கின்றன.

எத்தனை ஹீரோவிற்கு கைக்குழந்தையோடு, பஸ்ஸிலிருந்து இறங்கி, குழந்தையின் மலத்தை கழுவத் தெரியும். முந்தானை முடிச்சின் அறிமுக காட்சியே நம்மை திகைக்க வைக்கிறது.

தொண்ணுறுகளுக்கு பிறகு கிராமங்கள் வழக்கொழிந்து விட்டன. வாழ்க்கை மிக வேகமாய் நகருகிறது. பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக திகழுகிறது. பாக்யராஜ் அவர்களின் படங்கள், இழந்து போன, பலவற்றை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்யராஜ் அவர்களும், ஹீரோவின் அப்பா பாத்திரங்களுக்கு வர ஆரம்பித்து விட்டார். இப்போது அவர் அப்பாவாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், அவரின் முப்பது வயதுகளில் குழந்தைக்கு தந்தையாக நடித்த துணிச்சலை பாராட்டியே  ஆக வேண்டும்.

நல்ல படங்களை பார்த்து ரசிக்க, அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நஷ்டம் பாக்யராஜ் போன்றவர்களுக்கு இல்லை.


Thursday, July 28, 2016

சேலத்து கதைகள் - வாடகை சைக்கிள்

முதன் முதல் சைக்கிள் ஒட்டிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. சின்னக் கடைவீதியின் பாதாள மேடு, பள்ளங்களை கடந்து, கறிக்கடை பாய் சந்தில் நுழையாமல், மூணு பிள்ளையாரை சுற்றி, மீண்டும் வந்த பொழுது, அடுத்த ரவுண்டிற்கு தம்பி காத்திருந்தான்.
அடுத்த இருபது நிமிடங்களுக்குள் அவன் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிற தவிப்பும், ஆர்வமும் தெரிந்தது.
சீக்கிரம் உடுடா
கிட்டத்தட்ட, என்னிடம் இருந்து, சைக்கிளை பிடுங்கி கொண்டு, அவன் ரெண்டே மிதியில் ராஜாஜி பவனைத் தாண்டியிருந்தான்.
நான் சைக்கிளை மீண்டும் கார்த்திக் கடையில் விட தீர்மானித்து காத்திருந்த பொழுது எதிர்பாராத சம்பவம் நடந்தது.
கிட்டத்தட்ட அந்த ரவுண்ட் முடிந்து, தம்பி தூர வருவது தெரிந்தது. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தினாலோ, உற்சாகத்தினாலோ, அவன் திடீரென்று இரண்டு கைகளையும் ஹேண்டில் பாரில் இருந்து எடுத்து விட்டு, சுதந்திர உணர்வில், என்னை நோக்கி வரும் பொழுது, திடீரென்று நடுவில்.......அந்த குடிகாரனை எதிர்பார்க்காமல்....
குடிகாரனின் முட்டி பெயர்ந்து விட்டது.
"ழேய்...."
தமிழின் பிரத்யேக பாஷைகளை உபயோகிக்க தொடங்கினான். 
வாடகை சைக்கிள் பொலிவிழந்து, அருகில் இருந்த முனிசிபல்  ஸ்கூலின் சுவரின் காரையை பெயர்த்திருந்தது.
ஆங்காங்கே, சேதாரமான சைக்கிளை ஒன்று திரட்டி, பிடித்து வைத்து கொண்டான்.
"போடா...கேனப்....மேல வந்து விடறயா?... மேல வந்து இடிச்ச இல்ல....நூறு ரூபாய் எடுத்து வை...."
நான்  தம்பியையும், சைக்கிளையும் காப்பாற்ற உள்ளே நுழைந்தேன். காய்கறி வந்தவர்கள் பார்த்துக் கொண்டே கடந்தார்கள்.
"அண்ணா...அண்ணா....தெரியாம இடிச்சுட்டான்...மன்னிச்சுடுங்க..."
"நீ யாரூரா?"
"அவன் அண்ணன்..."
"நீ பாப்பார பையன்தாண்டா? நட உங்க வூட்டுல நியாயம் கேட்கலாம்"
எனக்கு மாமாவின் பெல்ட் ஒரு முறை ஞாபகத்திற்கு வந்தது.
"அண்ணா...சாரிண்ணா ...தெரியாம நடந்துடிச்சி....வீட்டில தெரிஞ்சா கொன்னுடுவாங்க..."
"இப்படி மேல வந்து இடிக்கறியே, யாரு வந்து பார்ப்பா? இதெல்லாம் வேலைக்கு ஆகாது...நட"
தம்பி தனக்கு சம்பந்தம் இல்லாதது போல, வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
"நூறு ரூபா எடுத்து வை ..இல்லேன்னா, சைக்கிள் கிடைக்காது"
நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். தம்பியிடம், நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு....நான் போய் கார்த்திக் சைக்கிள் மார்ட் ஒனர கூட்டிட்டு வந்திடுறேன்...
"தம்பி நீ எங்கே போற? "
"இல்லன்னா...இப்ப வந்திடுறேன்...."
"சும்மா வராத...நூறு ரூபாயோடு வா....நிறைய வேலை இருக்கு "
கீழே குனிந்து, எவ்வளவு ரத்தம்.....ம்....
சைக்கிளின் பின் பக்கத்தில் இருந்த, எம்பலத்தை பார்த்து விட்டு, கார்த்திக் சைக்கிள் மார்ட்.....தக்காளி சைக்கிளா விடுறீங்க...என்றான்...
நான் பயந்து கொண்டே, சைக்கிள் கடையை அடைந்தேன்.
வாடா...மாமா...
எனக்கு ஏனோ ஸ்கூலில் அந்த பெயர்..
சைக்கிள் எங்கே?
ஒரு நிமிடம் செலவழித்து விட்டு, எல்லா விவரங்களையும் சொன்னேன்.
"அந்த குடிகாரன் சைக்கிளை விட மாட்டேங்கிறான்...என் தம்பி மேல எந்த தப்பும் இல்ல."
கார்த்திக் அண்ணனுடன் திரும்பி வரும் பொழுது, தம்பியும், சைக்கிளும் மட்டும் இருந்தார்கள்.
"அந்த ஆளு எங்கேடா?"
"வேற இன்னொரு ஆளு வந்த உடனே போயிட்டாரு...."
"சரி, வண்டியை எடு...."
சரிந்திருந்த ஹாண்டில் பாரை அங்கேயே சரி பண்ண முடிந்தது.
"இது என்ன?"
சைக்கிளில் அந்த குடிகாரனின் சட்டை கிழிசல்.
"அந்த ஆளுக்கு ஏதாவது பணம் கொடுத்தீங்களா?"
"இல்ல "
"இனிமேயும் கொடுக்காதீங்க "
 "நல்ல பசங்கடா.....மெயின் பஜார்ல ஓட்டாதீங்க...வேகமா போகாதீங்க...."
வரும் வழியில் நிறைய அறிவுரைகள் கிடைத்தது.
அடுத்த சில நாட்களுக்கு அடக்கி வாசித்தோம். சந்துகளில் ஒட்டினோம். வயசானவர்கள் வந்தால், பிரேக் அடித்து சென்றோம்.
கிட்டத்தட்ட, அந்த முதல் நாள் சைக்கிள் அனுபவம்  எங்கள் நினைவில் அழியத்தொடங்கியது.
அன்று ஸ்கூல் முடிந்து, வீட்டிற்கு திரும்பும் வழியில் ஏதோ ஒரு சவ ஊர்வலம் கடந்து சென்றது. ஜாக்கிரதையாக சாலையில் கிடந்த எந்த பூவையும் மிதிக்காமல், ஒதுங்கி நின்ற பொழுது, கார்த்திக் அண்ணன், வெற்றுடம்போடு பானையில் நெருப்போடு எல்லாருக்கும் முன்னால் நடந்து செல்வது தெரிந்தது.
நான் உடனே, ஒரு ஆர்வத்தில், சவத்தை பார்த்தேன்.
அதே குடிகாரன்....

Friday, July 22, 2016

கபாலிடா

ஒரு வழியாய் கபாலித் திருவிழா தொடங்கிவிட்டது. இணையம், தொலைக்காட்சி, முகநூல் முழுவதும் கபாலிக புராணம். உலக அளவில், ஒரு நடிகருக்கு இத்தனை கூட்டம் கூடுவது பெரிய விஷயம். சிறுவயதில் வாயைப் பிளந்து கொண்டு பார்த்த, ரஜினியின் பிம்பம் நாளடைவில் என் அளவில் மிகவும் சுருங்கி விட்டது. எல்லா படங்களிலும் அதே பின்புலம், அநியாயத்தை எதிர்க்கும், அசகாய சூரன். ஒவ்வொரு படம் ரிலீஸ் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வியாபார யுக்தி. தேங்காய் உடைத்து, கற்பூரம் காண்பித்து, பாலபிஷேகம் செய்து, கடவுளின் அவதாரகமாக பிம்பப்படுத்தியிருக்கிறார்கள்.
விர்சுவல் என்பதும், ரியல் என்பதும் வெவ்வேறானவை. திரை வேறு,நிஜம் வேறு.

மக்களுக்கு கொண்டாட ஒரு காரணம் வேண்டும். யாரையாவது ஒருவரை, தலைவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பழைய காலத்தில், புலவர்கள் ராஜாவை புகழ்ந்து பாடி, சன்மானம் பெற்று சென்றதைப் போல.

இதில் கலை எங்கே இருக்கிறது?
மிக நல்ல படங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கின்றன.

படம் எடுத்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் நல்ல சம்பாத்தியம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு?




Tuesday, July 19, 2016

தமிழன் என்றோர் இனமுண்டு - சிறுகதை



கோலாலம்பூர் எனக்கு புதிய நகரம். அதுவும் முதல் நாள் இரவில்தான் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்திருந்தேன். டாக்ஸி ட்ரைவர் கிளம்பும் பொழுது, ப்ரிக் பீல்ட்ஸ் பின் பக்கம் போயிடாதீங்க....அங்கே அந்த தொழில்தான் நடக்குது. பணத்தை உருவிடுவாங்க...என்று எச்சரித்திருந்தான்.
இரவில் பயங்கரமாய் தெரிந்த கட்டிடங்கள், பகலில் சாதுவாகத்தான் தெரிந்தன. யாரோ ஒரு சீமாட்டி துணி உணர்த்திக் கொண்டிருந்தாள். அநேகமாக, இந்தோனேசியாகாரியாக இருக்க வேண்டும். என்னைப் பார்த்து, மோகனமாய் சிரித்தாள். எனக்கு டிரைவரின் எச்சரிக்கை ஞாபகத்திற்கு வந்தது. முகத்தை முடிந்த வரை, விறைப்பாய் வைத்து கொண்டு, ஹோட்டலை தேடிக் கொண்டிருந்தேன்.
மதிய வேளையில் நல்ல பசி. ஒரு வழியாய்,ஒரு நல்ல ஹோட்டலை தேடிக் கண்டுபிடித்து, உள்ளே நுழைந்தேன். பழக்கப்பட்ட சீன முகங்கள். 
அப்போதுதான் பிரசாந்தை முதல் தடவையாய் சந்தித்தேன்.
ப்ரசாந்த்திற்கு இருபது வயது இருக்கலாம். லட்சணமான முகம். உண்மை பேசும் கண்கள். சிவந்த உதடுகள். மெலிதான மீசை. ஆரம்ப கால, சிவகுமாரின் ஜாடை.
"அண்ணே....என்ன சாப்பிடுகிறீர்கள்"
அண்ணே..என்கிற தொனி மிகப் புதிதாய் இருந்தது. அத்தனை அழுத்தமான தமிழ்.
"மீல்ஸ்"
"அந்த விசையை கொஞ்சம் அழுத்துங்களேன்..."
ஸ்விட்சைதான் அப்படி சொல்கிறான்.
நான் அவனிடம் பேச ஆசைப்பட்டேன்.
"தம்பிக்கு எந்த ஊரு?"
"மட்டக்களப்பு"
நான் பத்திரிகைகளிலும், ரேடியோவில் (சாரி வானொலியிலும்) கேட்ட பெயர்.
"நீங்க ஸ்ரீலங்காவா?"
"ஓம்"
"நீங்க எப்படி இங்கே ?"
"அது ஒரு பெற்றிய கதை...பின்னாடி கதைக்கிறன்"
எனக்கு தெனாலி படம் ஞாபகத்திற்கு வந்தது.
இன்னும் கொஞ்சம் பேச வேண்டும், அல்லது கதைக்க வேண்டும் என்பதை தடுப்பது போல், நிறைய கஸ்டமர்கள் வந்து விட்டார்கள்.
நான் ப்ரசாந்த்திற்கு நன்றி சொல்லி விட்டு, இருபத்தி ஏழாவது மாடியில் இருந்த கெஸ்ட் ஹவுசில் நுழைந்தேன். தூங்கும் பொழுது, அந்த அண்ணே என்னை உருக்கியது.
என் தினப்படி வேலையில் மாற்றமே இல்லை. தினமும் கே எல் சென்ட்ரல் வரை சென்று, பிளாஸ்டிக் கார்டில் திறக்கும் ஆட்டோமேட்டிக் கதவுகளை திறந்து, கீழே பாதாள பிளாட்பாரமில் காத்துக் கொண்டிருக்கும் மெகா சைஸ் ரெயில்களில் பயணித்து, புத்ரா ஜெயாவில் இறங்கி, வெளியே க்யூவில் காத்திருந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாய் முளைத்து கொண்டிருக்கும் டி கம்பெனிகளின் வாசலில் இறங்கி....வேண்டாம் உங்களுக்கு போர் அடிக்கும்.
மீண்டும் அந்த மாலையில் ப்ரசாந்த்திற்காக ஹோட்டலுக்கு முன்பே சென்றேன். காரணம் அந்த தமிழாய் இருக்கக் கூடும்.
"வாங்க அண்ணே...நீங்க இந்தியாதானே?" என்றான். கை குலுக்கினான். அத்தனை மென்மை.
இத்தனை பணிவா?
"எந்த ஊர் நீங்கள்? எனக்கு இந்தியா என்றால் மெத்தப் பிடிக்கும்"
"சேலம்"
"அங்கேயிருந்து, திருச்சி பக்கம் தானே?"
“பக்கம்தான்.ஏன்?”
“திருச்சி எங்களண்டை பூர்விகம்
“ஓ...அப்படியா?”
“இந்தியா வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை”
“வாங்க....வர வேண்டியதுதானே?”
“முதலில் நான் எண்ட நாட்டுக்கு போக வேணும். பிறகு இந்தியா வருவன்”
"நீங்க உங்க நாட்டுலேர்ந்துதானே வந்தீங்க? அப்புறம் ஏன் அங்கேயே போகணும்னு சொல்றீங்க"
"இல்ல...நான் வரவில்லை...ஓடி வந்தனன்..."
"புரியல"
"நான் எண்ட நாட்டுல சண்டைகள் தொடங்கும் பொழுது, பயந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்தனன்"
"ஓ"
"போன மாதம் நான் கொழும்பு சென்று எண்ட அம்மாவை பார்த்து விட்டு வந்தனன்"
“அப்ப, அவங்க மட்டக்களப்புல இல்லையா?”
“இல்ல...அவங்க அங்கதான் இருக்காங்க....ஆனால், என்னை பார்க்க இங்கே வந்தாங்க...”
"ஏன் நீங்க மட்டக்களப்புக்கு  போகல?"
"நான் அங்கே சென்றிருந்தால், என்னையும் பிடித்து கொண்டிருப்பர்"
"யாரு?"
"அவங்கதான்.."
"ஏன்?"
"போருக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி"
"நீங்க வர மாட்டேன்னு சொன்னா?"
"அப்படி அல்ல...போய்த்தான் ஆக வேணும்..."
“நான் தப்பித்தது பெரிரிய கதை தெரியுமா?”
"அன்று பாருங்கோ, நான் டி வி யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனன்....எனக்கு மேட்ச் என்றால் மெத்த பிடிக்கும்....திட்டீரென்று, அம்மா வந்து, என்னை ஓட சொன்னனள்...நான் எங்கே போக முடியும்? வாசலிலே யாரோ கதவை பலமாக இடித்துக் கொண்டிருந்தார்கள்...என் அம்மா என்னிடம், நீ ஒருவன்தான் ஆண் வாரிசு...எண்ட மூணு மாமாக்களும், சண்டையில் செத்து போய்விட்டனர்...எனவே, எப்படியாவது ஓடி பிழைத்துக் கொள் என்று சொல்லி, கையை பிடித்து கெஞ்சினாள்...நான் எங்கே போவது தெரியாமல், வீட்டின் பின் பக்கம் வந்தனன்..அங்கேயும் யாரோ கதவை இடிக்க, நான் பயந்து போய், சமையல் அறையில் புகை போக்கி இருக்கும் பாருங்கோ, அங்கே பதுங்கினன்"
நான் ஒரு த்ரில்லர் கதையை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே, நிறுத்தி அழுகும் பொழுது, கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன்.
"அவர்கள் வந்து, எண்ட அம்மாவிடம் என்னை பற்றி கேட்டார்கள்...ஆனாலும், அம்மா நான் கொழும்பு போய் விட்டதாக கதைச் சார்கள்....அவர்கள் அதை நம்ப வில்லை "
"சொன்னால் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள்......மூணு நாள், நான் அங்கேயே இருந்தேன்"
"புகை போக்கிலயா?"
"ஓம்"

"எப்படி?"
"உயிர் பயம்"


"அப்புறம் எப்படி இங்க வந்தீங்க?"
"எப்படியோ யாருக்கும் தெரியாம தப்பிச்சு, கொழும்பு வந்து, பின்னாடி இங்க வந்தனன்....ஊரில நான் கோடீஸ்வரன்......சண்டையில எல்லாம் போயிட்டது....."
எச்சில்  இலையை எடுத்து குப்பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

"கவலைய விடுங்க....என்னிக்காவது ஒரு நாள் நல்லதே நடக்கும்" என்றேன்.

"சரிங்கண்ணே...இந்தியா வந்தா உங்களை கட்டாயமாய் சந்திக்கிறேன்...."என்று, கை குலுக்கினான்.
 
அபத்த அரசியல் விளையாட்டுக்களைக் கடந்து, மனித நேயமே அந்த மென்மையில் தெரிந்தது.
 




Monday, July 18, 2016

பத்தி எழுத்து

ஒரு ஆரோக்கியமான இடைவெளிக்கு பிறகு பிளாகில் எழுத வருவது, சந்தோஷமான விஷயம். அவ்வப்பொழுது கொஞ்சம் சிறுகதைகள் எழுதி வந்தாலும், சிறுகதை தாண்டிய விஷயங்களை, பத்தி எழுத்து ஓரளவிற்கு சமன்படுத்தும் என்று நினைக்கிறேன். கணையாழியின் கடைசி பக்கம் போல, கல்கியின் சங்கீத விமர்சனங்கள் போல, கொஞ்சம் சுதந்திரக் காற்றோடு எழுத நினைக்கிறேன்.

சமீபத்தில் இரண்டு முத்துக்கள் கிடைத்தன. மறைமலை அடிகளார் எழுதிய "மரணத்திற்கு பின் மனிதர் நிலை", போஸ் எழுதிய "சினிமா பக்கங்கள்". இரண்டுமே, சுவாரசியமாக இருந்தது.

மரணம் என்பதை ப்ரெய்ன் டெட் என்கிற ஒற்றைப் பதத்தில், விஞ்ஞானம் நிறுவுகிறது. அதற்கு பின் என்கிற கேள்விக்கு, நமக்கு சாதகமான பதில் ஒன்றும் விஞ்ஞானம் வழங்கவில்லை. முதலில், மரணத்திற்கு பின் ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்கிற உப கேள்வியை வைக்கிறது. நாம் எல்லாருமே நம் மரணத்திற்கு பிறகு, ஏதோ ஒரு ரூபத்தில் தொடர விழைகிறோம்.


சமய இலக்கியங்களிலும், சித்தர் பாடல்களிலும், மதங்களிலும் மறுபிறவி பற்றி நிறைய இருக்கிறது. அடிகளாரின் புத்தகத்தில்
 சூட்சம சரீரம், காரண சரீரம் பற்றி எல்லாம்
எழுதி இருக்கிறார்.  


வேதாத்ரி மஹரிஷியின் பிறப்பிற்கு முன் மரணத்திற்கு பின், , யூடியூபில் தேடிப் பாருங்கள். நிறைய புரியும்.
போஸ் எழுதிய சினிமா பக்கங்கள், சினிமாவின் இன்னொரு முகத்தை தோலுரிக்கிறது. ப்ரட்யூசர்கள் கோலோச்சிய சினிமா, இப்போது எப்படி நடிகர்களின் கைவசம் மாறி இருக்கிறது. கதை திருட்டு. நடிகைகளின் கற்பு. நாம் பார்த்து வியக்கும் பெரிய நடிகர்களின் இமேஜ் வளையம். சினிமாத் துறைக்கு போக இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.









Thursday, July 14, 2016

ஸ்மார்ட் போன் - சிறுகதை

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தின் பார்சன் காம்ப்ளெக்சில் முதல் மாடி பதினேழு ஏ வில் சமைத்துக் கொண்டிருக்கும் என் மனைவியைப் பற்றி, ஒரு வ்யாஸமே எழுதலாம்.
பெல் சத்தம் கேட்டு, கதவை திறங்களேன்.....என்று என்னை திட்டி விட்டு, கதவைத் திறந்தால், சலவைத் துணிகள்.
மொத்தம் பதினைந்து உருப்படி...போன தடவை தர வேண்டிய பாக்கி, ஐம்பத்தி ஐந்து ...இந்த தடவை
மிக சரியாக சில்லறை கொடுத்து விட்டு, உங்களுக்கு இந்த வாட்ஸ் , பேஸ் புக் தாண்டி, வேற ஏதாவது தெரியுமா?என்கிறவளை திருத்தமாக பார்த்தேன்.
இந்த வயதிலும் நீ சும்மா கும்முன்னு இருக்கே
நான் என்ன கேட்கறேன்? நீங்க என்ன சொல்றீங்க?
அருகில் நெருங்கி, அணைக்க முற்படும் பொழுது,
"வேண்டாம்...எல்லாம் நடிப்பு....அந்த பேஸ்புக்கையே கட்டிண்டு அழ வேண்டியதுதானே?" என்றாள்.
அவள் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது. காலையில் எழுந்ததும், பல் தேய்க்கும் முன் விசுவிடமிருந்து, குட் மார்னிங் மெசேஜ் வந்து விடும். அதற்கப்புறம் சிற்சில குரூப்களின் மெசேஜ் வந்து விடும்.
எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பும் பொழுதே, காபி தயாராகி விடும்.
என்னங்க, நம்ம பழைய வீட்டில, பக்கத்தில இருந்தாங்களே ராஜீ
ம்
கைகள் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருக்கும்.
அவங்க பையன் கீழே விழுந்துட்டானாம்
ம்
இங்க கேட்கறீங்களா இல்லையா?
ம்
ஒரு வழியாய், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணி விட்டு,
"இப்ப சொல்லு....யாருக்கு என்ன "
"சரியா போச்சு......நான் சொன்ன எதுவுமே காதுல விழுகலையா?"
"இல்ல கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்"
"பொய் "
"நிஜமா"
"வர வர உங்களுக்கு என்ன விட, இந்த பேஸ்புக், வாட்ஸ் தான் முக்கியமா போச்சு இல்ல"
"அது வாட்ஸ் இல்லமா....வாட்ஸ் அப்" என்கிற மகளை முறைத்தாள்.
" நீங்க எல்லாம், மெத்த படிச்சவங்க....நான் படிக்காதவ போதுமா?" என்றாள்.
"சரி...மொதல்ல, இந்த சொசைட்டியோட நீ சேரணும்....கிணத்து தவளையா இருக்க கூடாது. இன்னிக்கே சாயந்திரம் உனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தரேன்...." என்றேன்.
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"  என்றாள்
சாயந்திரம் ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்ததும், பூ வாங்கி வந்ததும், சந்தோஷப் படுத்தி இருக்க  வேண்டும்.
"இது இப்ப தேவையா? இருக்கற போனே போதும்" என்றாள்
"நீ வச்சிருக்கிறதுக்கு பேரு போனா, செங்கல்...பேட்டரியே மூணு கிலோ" என்றாள் ஆர்த்தி, மகள்.
"வாங்கி நாலு வருஷமாறது, இது வரைக்கும் ஒரு ரிப்பேர் வந்தது இல்லை..இப்ப எதற்கு மாற்றணும்? நான் பேசறது அப்பா கிட்ட, அண்ணா கிட்ட, இதுக்கு எதுக்கு ஸ்மார்ட் போன்" என்றாள்.
"உலகோடு ஒத்து வாழ்...இது பழமொழி......இன்றைய தேதிக்கு, ஸ்மார்ட் போன் வரப்பிரசாதம்....உலகத்துல இருக்கிற யார் கூட வேணாம், சாட் பண்ணலாம், டிக்கெட் புக் பண்ணலாம்,
பேஸ்புக், வாட்ஸ் அப்.....அது ஒரு டிஜிட்டல் உலகம்..."
 காரில் செல்லும் பொழுது, உற்சாகமாக இருந்தது. ஸ்டெரியோவில் இளையராஜா குழலூதும் கண்ணனுக்கு என்று வழிந்தது.
அடையாறில் இருந்த சாம்சங்கின் ஷோ ரூமில், நிறைய மாடல்கள் இருந்தது. 
"எதுக்கு? எனக்கு வேணாம்...இதெல்லாம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாது "
"அம்மா, அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா....ஈஸி.....சப்பை மேட்டர்மா "என்றாள் ஆர்த்தி.
ஒரு வழியாக பதினைந்தாயிரத்திற்கு ஒரு நல்ல மாடலை தேர்வு செய்தோம்.
"இதற்கு பேசாம, ஆர்த்திக்கு தோடு எடுத்திருக்கலாம்" என்றாள் .
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் மனைவி ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள்.
"ஏங்க, போட்டோவை எப்படி அனுப்பறது "
"தமிழ்ல எப்படி டைப் பண்றது "
வெள்ளிக் கிழமை சாயந்திரம் ஆபிஸ் மீட்டிங் முடிய நேரம் ஆகும் போல் இருந்தது. வாட்ஸ் அப்பில், மனைவி எண்ணை தேர்வு செய்து, வில் கம் லேட் ...மீட்டிங் என்று டைப்பினேன்.
சரிங்க...டிபன் என்ன பண்ணனும் என்று பதில் வந்தது.
கொஞ்சம் யோசித்து, அடை என்று டைப் பண்ணினேன்.
கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. காலம் மாற, மாற கலாச்சாரங்களும் மாறுவதை தவிர்க்கமுடிவதில்லை.
சிறு வயதில் தீபாவளிக்கு, ஊரில் சொந்தக் காரர்களின் வீட்டிற்கு தூக்கில் பலகாரங்களோடு செல்வோம். இன்று? காலையில் ஐந்து மணிக்கு வாட்ஸ் அப்பில், "கங்கா ஸ்நானம் ஆச்சா?"வோடு முடிந்து விடுகிறது.
வீட்டிற்கு திரும்பும் பொழுது, வாசல் விளக்கு எரியவில்லை. விளக்கு ப்யூஸ் ஆகி விட்டதா? காரை நிறுத்தி விட்டு,  உள்ளே சென்றேன்.
டி வி ஒரு பக்கம் அலறிக்கொண்டிருந்தது. ஹால் நிறைய குப்பைகள். ஏதேதோ பேப்பர்கள். ஏன் சாயந்திரம் பெருக்க வில்லையா?
மகள் ரூமில் மொபைலில் இயர் போனில் பாட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மா எங்கே என்று கத்த வேண்டி இருந்தது.
உள்ளே சமையல் ரூமில் நுழைந்தேன்.
அலமாரிகள் திறந்து இருந்தன. நறுக்குவதற்க்காக காய்கள் தயார் நிலையில் இருந்தன.
மனைவி மொபைலில் யாரிடமோ வாட்ஸ் அப்பில்  சாட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
வாங்க....
என்று ஏதோ டைப் செய்தாள்.
இன்னும் அடைக்கு ஊற வைக்கல
மீண்டும் டைப் செய்தாள்.
ரொம்ப பசிச்சா, ஹோட்டல்ல டிபன் வாங்கி வந்துடுங்க ...எனக்கு உடம்பு முடியல என்றாள்.
இப்போது யாருக்கோ  ஸ்மைலி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
நான் கேரேஜை திறந்து, டூ வீலரை எடுத்துக் கொண்டு, அடுத்த தெருவில் இருந்த முருகன் இட்லி கடையை நோக்கி விரைந்தேன்.
டிபன் வாங்கி கொண்டு, திரும்பும் பொழுது, பக்கத்தில் செல் போன் கடை தெரிந்தது.
வீட்டிற்கு திரும்பபொழுது டிபனுடன் பேசிக் போன் ஒன்றும் மனைவிக்கு வாங்கி கொண்டேன்.

Monday, July 11, 2016

சேலத்து கதைகள் - மயானக் கொள்ளை

எங்கள் பள்ளியின் வலது புற காம்பவுண்டின் வெளிப்புறம் காக்கையன் சுடுகாடு இருந்தது. எதற்க்காக அந்த மாதிரி பெயர் வந்தது என்று இன்று வரை காரணம் தெரியாது.

சுடுகாட்டைப் பற்றிய பயங்கர கதைகளே, அந்த இடத்திற்கு சுவாரசியம் கொடுத்தது.

பாட்டி பயந்து கொண்டு,  சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே வராதே, பேய் அடிச்சுடும் என்பாள்.

இருந்தாலும்  சில தவிர்க்க முடியாத காரணங்களினால், அவ்வப்போது எட்டி பார்த்திருக்கிறோம்.

யாராவது கிரிக்கெட் பந்தை அடித்தால், அது அங்கேதான் போய் விழும். தூரத்தில் ஏதோ பிணம் எரிந்து கொண்டிருக்கும். காற்றில் நீச்ச நாத்தம். சமாதிக்குள் கை விட்டு, பந்தை எடுத்து போடும் வரை, மற்றவர்கள் காம்பவுண்ட் சுவரில் ஏதாவது பேய்க்காக காத்திருப்பார்கள்.

இந்த நிலையில்தான், மயானக் கொள்ளை நடந்தது.


எங்கள் பள்ளியில் முதல் நாளே, ஹெட் மாஸ்டர் மைக்கில் நாளைக்கு பள்ளிக்கு விடுமுறை என்று அறிக்கை கொடுத்ததும், மைதானத்தில் எல்லாரும் ஆடுவார்கள்.

இந்த மாதிரியான கோலாகல சூழ்நிலையில் ராஜுவிற்கு விபரீத சந்தேகம் ஏற்பட்டது.

சுடுகாட்டுல மாசானக் கொள்ளை அப்போ, என்ன செய்வாங்கன்னு பார்க்கலாமா என்றான்.

நான் பாட்டிக்கு பயந்து, நோ வே...வீட்டிற்கு தெரிஞ்சா தொலைச்சிடுவாங்க..என்றேன்..


யாருமே இருக்க மாட்டாங்க....வாடா என்றான்....

நான் பார்த்த திகில் படங்களே அவ்வப்பொழுது, என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஊமை விழிகளும், மை டியர் லிசாவும் பார்த்து விட்டு, சூசூ போவதற்கு அம்மாவின் துணையை நாடிக்கொண்டிருந்தேன்.

நான் வரலப்பா...என்றேன்....

நீ வந்துதான் ஆகணும்....உன் மேத்ஸ் பேப்பர் என் கிட்ட இருக்கு....என்று கொடூரமாய் ப்ளேக்மெயிலினான்.

காலையில் கிளம்பும் பொழுது, பாட்டி தடுத்தாள்.

சாப்பிடாம எங்கே போற? பழையது இருக்கு..சாப்டுட்டு போ....உங்க ஸ்கூல் பக்கம் போயிடாத....மசானக் கொள்ளை"

பாட்டியை ஏமாற்றுவது கஷ்டமாக இருந்தாலும், மேத்ஸில் ஒரு அந்தரங்கமான காரணத்தினால் ராஜுவுக்கு கீழ்ப்படிய வேண்டியதாயிற்று.

ராஜு கர்ம, சிரத்தையாய் விபூதி, குங்கமத்தோடு வந்திருந்தான். கையில் சாய்பாபா டாலர். கேட்டால், திடீரென்று பேய் பிடித்தால், இதனைக் காட்டினால் ஓடி விடும் என்றான். என் கையில் எந்த படமும் இல்லாதது, மனதில் உறுத்தியது.


ஸ்கூல் அருகே செல்ல முடியாத படி, பாலத்தில் நிறைய கூட்டம். பொன்னியின் செல்வனில் வரும் காளாமுக கூட்டம் போல. எல்லார் கையிலும் சூலாயுதம். எலுமிச்சம் பழம். கண்களில் ஆவேசம். பின்னணியில் உறுமி சத்தம்.

வாடா போயிடலாம் என்றேன்...

இருடா  என்றான்


என்னத்த மைதிலியே ரிதம் போல ஆடினார்கள். கோழியின் ரத்தத்தை அப்படியே குடித்தார்கள். கூட்டத்தில் மிக உயரமாய், வீரப்பன் மீசை வைத்திருந்தவர், எதற்கோ கர்ஜித்தார்.

எங்களை பார்த்து ரத்தம் ரத்தம் என்றார்.

சரி வாடா போகலாம் என்றான் ராஜு.

உயிர் பிழைத்த நிம்மதியில் வீட்டிற்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலை, வழக்கம் போல ஸ்கூலிற்கு சென்ற பொழுது, வாசலிலேயே ராஜு பிடித்துக் கொண்டான்.

ஜுஸ் சாப்பிடுடா என்றான்...

சேமியா போட்டு, ஏதேதோ சேர்மானங்கள் சேர்த்து, கதம்பமாய் ஒரு கலரில் ஜுஸ் வழிந்தது.

எதுக்குடா

நேத்து நீ மட்டும் இல்லேன்னா, ஐம்பது ரூபா ஜெயிச்சுருக்க மாட்டேன்....

புரியல என்றேன்....

நேத்து எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு சின்ன போட்டி. நான் மசானக்கொள்ளைக்கு வர மாட்டேன்...பயந்துடுவேன்னாரு....ஆனா, நேத்து நம்ம வெற்றிகரமா பார்த்துட்டு வந்ததனாலே, வேற வழி இல்லாம பணம் கொடுத்துட்டார்....

யாருடா உங்க மாமா என்றேன்

அவன் காட்டிய திசையில் பார்த்தேன். வீரப்பன் மீசை தெரிந்தது.





என் கால் படித்த தடங்கள் - 5

சென்னையில் வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு வருடங்களில், பொழுது நன்றாக கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். பீட்டர்ஸ் ரோட்டின் மத்தியில், தபாலாபீசுக்கு பக்கத்தில் ஆபிஸ் இருந்தது. சென்னை புதிதாக இருந்தது. குறிப்பாக, சென்னையின் பிரத்யேக மொழி. வார இறுதிகளில், திருவானந்தபுரமோ, மங்களூரோ பிடித்து, சேலம் வந்து, ஞாயிற்றுக் கிழமை இரவு, கொஞ்சம் அவஸ்தையோடு, சேலத்தை விட்டு பிரிய மனமில்லாமல், கடைசி ட்ரெயினில் ஏறி, காலையில் சென்னைக்கு வந்து சேருவேன். பிரயாணங்கள் எனக்கு அலுக்கவில்லை. வேகம், வேகம். சென்னையின் வேகம் என்னையும் தொற்றிக் கொண்டது. திடீரென்று நிறைய மாற்றங்கள் கம்பெனியில் நிகழ்ந்தன. பழைய மேனஜர் மாற்றப்பட்டு, புதியவர் வந்தார். புதியவர் வந்ததும், பழையவரே பரவாயில்லை என்று நினைக்க வைத்தார். அதிரடியாய் சிலரை நீக்கினார். வார இறுதிகளில், யாராவது ஒருவராவது வரவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

சுற்று வரிசைப் படி, மாதத்தில்  ஒரு சனிக்கிழமை ஆபிசில் வெட்டியாய் உட்கார்ந்தேன். அன்று சாயந்திரம் ராயப்பேட்டையில் புதிதாய் தொடங்கப்பட்ட நாடி ஜோசிய கிளை ஆபிசில்  ஜோதிடர் முன் உட்கார்ந்தேன்.

சேலத்து ஜோதிடரை பார்ப்பதற்கு, இவர் பரம சாதுவாக இருந்தார். ஒரே ஒரு ஒற்றை நாடி ஆசாமிதான் அசிஸ்டன்ட்.

சார்...........உட்காருங்க....

பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தேன். சுவரில் புதிதாய் அடித்த டிஸ்டம்பர் வாசம் அடித்தது.

பொது காண்டம் பார்த்தாச்சு.....தொழில் காண்டம்தான் பாக்கணும்.....என்றேன்......

மீண்டும் கை ரேகை வாங்கிக் கொண்டார்கள்.


கொஞ்ச நேரம் கழித்து, உள்ளே அழைத்தார்கள்.

உள்ளே ஜோதிடர் மயில்சாமி மாதிரி இருந்தார். குரலில் பெண் சாயல். உள்ளே பீரோவிலிருந்து நாடி எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

அத்தனவன் அடிகள் போற்றி, ஆணிவனின் வரி சொல்வேன்
வலக்கரத்தில் சக்கர ரேகை,  காலயுக்தி திங்களதில் சப்தம் மீனம்

இது மாதிரி படித்து விட்டு,

உங்க மேனேஜருக்கும், உங்களுக்கும் சமீப காலமாக பிரச்னை....நீங்க வேலையை விட்டுட்டு போகலாமான்னு யோசிக்கிறீங்க....சரியா? என்றார்..

நான் திகைத்து நின்று, ஆமாங்க....என்றேன்...

அவர் கருப்பு நிறமா? என்றார்.....

யோசித்ததில், மாநிறமாகப் பட்டது. எதற்கு வம்பு என்று,  ஆமாங்க, கருப்புதான் என்றேன்.....

என் மேனேஜர் கருப்பா, மாநிறமா என்ற சந்தேகம் ஜோதிடம் பார்த்த பின் நெடு நாளைக்கு  நீடித்தது.



என் கால் பதித்த தடங்கள் - 4

டெல்லியில் கொஞ்ச நாள் இருந்து விட்டு திரும்பிய பொழுது, சேலம் நிறைய மாறி இருந்தது. எல்லா இடங்களிலும், கடைகளிலும், கம்ப்யூட்டர் தெரிந்தது. நான் கல்லூரியில் படித்த நாட்களில், இத்தனை பரவலாக கம்ப்யூட்டர்கள் இருந்ததில்லை. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லேபின் ஏசி அறைக்குள் ஷூ, சாக்ஸ் எல்லாம் கழட்டி விட்டு, பயபக்தியோடு உள்ளே நுழைந்து பழக்கப்பட்டிருந்த எனக்கு, முற்றிலும் புதிய அனுபவம்.


கொஞ்ச நாள், வேலைக்கு எதற்கும் செல்லாமல், ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டிருந்த நாட்களில், அத்வைத ஆசிரமம் ரோடு வழியாக பேர்லன்ட்ஸை அணுகும் பொழுது, புதியதாக போர்டு ஒன்று பார்த்தேன். "அகஸ்தியர் நாடி ஜோதிடம்". உறங்கிக்  கொண்டிருந்த என் நியூரான்கள், விழித்துக் கொண்டன. கை ரேகை கொடுத்தால், போன ஜென்மம் கூட சொல்வார்கள் என்று சொன்னார்கள். மயிர்க்கால் சிலிர்த்துக் கொண்டது. அந்த அற்புத அனுபவத்திற்க்காக, நண்பனுடன் உள்ளே நுழைந்தேன்.


கிட்டத்தட்ட முனிவரின் அசிஸ்டன்ட் மாதிரி இருந்த மரவுரி தரித்தவர், எதுவும் பேசாமல், வலது கை கட்டை விரலின் அச்சை, பேப்பரில் பிரதி எடுத்து, "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க...சுவடி
 தேடணும்" என்றார். நான் அருகில் இருந்த, தினத்தந்தியில் ஆழ்ந்தேன்.


அரை மணி நேர மயான அமைதிக்கு பிறகு, மரவுரி திரும்பி வந்தார்.
உள்ளே வாங்க...
செருப்பையெல்லாம் கழட்டி விட்டு, ஹால் மாதிரி இருந்த அறைக்குள், நுழைந்தேன். ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை. பீடத்தில் அகஸ்தியரின் ரெண்டு அடி சிலை. நிறைய பூக்கள்.
அப்போதுதான் அவரை கவனித்தேன். மரவுரியின் பாஸ். தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டு, சிகப்பு நிற வேஷ்டி. வெள்ளை சட்டை.

உட்காருங்க....

குரலில் கூட ஒரு அதிர்வு.

அவர் கையில், இப்போது ஓலைச்சுவடி மாதிரி ஏதோ தெரிந்தது.

தம்பி, இப்போ உங்க கிட்ட சில கேள்விகள் எல்லாம் கேப்பேன்.  நீங்க ஆமா, இல்லை மட்டும் சொன்னா போதும்....உங்க ஜாதகத்தை நீங்க காண்பிக்க வேண்டாம்...சரியான நாடி வந்ததும், நான் உங்க ஜாதகத்தை போட்டு காண்பிக்கறேன்....

நான் மஞ்சப்பையில் இருந்த என் ஜாதகத்தை இறுக மூடிக் கொண்டேன்.


செய்யுள் மாதிரி ஏதோ படிக்க ஆரம்பித்து, இடையே கேள்விகள் கேட்டார்.

உங்க அப்பா இப்ப உயிரோடு இருக்காரா?
இல்லை

அடுத்த சுவடியில் கொஞ்சம் படித்து விட்டு,
நீங்க உங்க அப்பாவிற்கு முதல் குழந்தையா?
ஆமாம்

மீண்டும் செய்யுள்....

உங்க கூட பொறந்தவங்க ஒரே ஒரு தம்பிதானே?
ஆமாம்

மீண்டும் செய்யுள்....

மொத்தம் பத்து, பதினைந்து கேள்விகள் கேட்டு விட்டு, கடைசியில் முடிவிற்கு வந்தவராக, அந்த ஒரே ஒரு லீபை மட்டும் விளக்கொளியில் வாசித்தார்.
வெளியே கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க....

திரும்பி வந்த பொழுது, அவர் வைத்திருந்த பேப்பரில் என் ஜாதகம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

தம்பி, அடுத்த வாரம் நீங்க இந்த ஊர்ல இருக்க மாட்டீங்க...வெளியூர்ல வேலை கிடைச்சு போயிடுவீங்க...


அடுத்த வாரம் சென்னையில்இருந்த ஒரு கம்பெனியில் இருந்து, வேலைக்கான உத்தரவு வந்து, சென்னைக்கு
 பஸ் ஏறும்பொழுது ஆச்சரியமாகத்தான் இருந்தது.







Saturday, July 9, 2016

ஷாப்பிங் - சிறுகதை

"இன்னிக்கு சாயந்திரம் ஷாப்பிங் போகணும்" என்று மனைவி சொன்னதுமே, வாசுவிற்கு திக்கென்றிருந்தது.
ஏன் என்று கேட்க நினைத்தான்.
அதற்கு இடம் கொடாமல், லட்சுமியே காரணமும் சொன்னாள்.
"ஊரிலிருந்து அக்காவும், அத்திம்பேரும் வந்திருக்கா....நாலு நாளா, ஆத்துலயே முடங்கி இருக்கா...வெளியிலே, வாசல்ல எங்கேயாவது கூட்டிண்டு போனாத்தானே, அவாளுக்கும் போரடிக்காம இருக்கும்"
"அமெரிக்கால பார்க்காதே ஷாப்பிங்கா? "
"என்ன இப்படி சொல்லிட்ட்டேள் ......ஆயிரம் சொன்னாலும், பெங்களூர் மாதிரி வருமா?" என்றாள்...
வாசுவுக்கு ஷாப்பிங் என்றாலே அலர்ஜி. அதுவும் லீவ் நாளன்று பெங்களூரில் ஷாப்பிங் வைபவம் ஒரு அக்கப்போர். எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு ட்ராபிக் ஜாம்.
அதுவும் ஷாப்பிங் மால்களில் நிலவும் கூட்டம் இருக்கிறதே. எல்லாரும் ஏதோ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தவர்கள் மாதிரி, உடை என்ன, வாசலில் நின்று கார்ன் (சோளக்கருதின் நாகரீக பெயர்) சாப்பிடுவது என்ன....
மடிவாளாவிலிருந்து ஓரடி, ஓரடியாக சந்தபுராவை அடைவதற்கே சாயந்திரம் ஆகி விடும்.
இப்ப அவசியம் போயே ஆகணுமா?
லட்சுமி இன்ஸ்டன்ட் ஆக, கண்ணீர் விட்டாள்.
"இப்பதானே பர்ஸ்ட் டைம்  வரா...நம்மள பத்தி என்ன நினைப்பா?"
லட்சுமியின் அக்கா வீட்டிற்கு முதல் தடவை , சென்னைக்கு சென்ற போது, கார் கூட ரெயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பவில்லை. சென்ட்ரலிலிருந்து பார்க் வந்து, இன்னொரு ட்ரெயினை பிடித்து, மவுண்ட்டில் இறங்கி, ஷேர் ஆட்டோ பிடித்து, அத்தனை லக்கேஜ்களுடன் போய் இறங்கினோம். கார் ரிப்பேர் என்று கதை விட்டார்கள். சிலவற்றை சொல்ல முடியாது.
எங்கிருந்தோ ஒட்டுக் கேட்டுக் கொண்டு, சகலை கிருஷ்ணனும், அவனுடைய தர்மபத்தினி  பானுவும் வந்து சேர்ந்தார்கள்.
"க்ரிஷ்" 
பானு  கணவனை அமெரிக்கா சென்றதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் அழைக்கிறாள்.
"சொல்லுடா"
இது அவன் கணவன்.
"ஐ திங்க் வாசு இஸ் நாட் கம்பார்ட்டபிள்....ஒய் நாட் வி கோ?" என்றாள்.
'சே, சே...அப்படி எல்லாம் இல்ல...சீக்கிரம் போனா, ட்ராபிக் இருக்காது....அதுதான் சொல்லிண்டுருந்தார்..'
லட்சுமி பரிந்து கொண்டு வர, சாயந்திரம் எங்கள் பயணம் ஆரம்பமானது.
ஆல்டோ காரில் ஐந்து பேருக்கு இடம் பத்தவில்லை. வாசு ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். நீங்கள் ட்ரைவ் பண்ணுகிறார்களா?
நோ வே....இண்டியன் ட்ராபிக் இஸ் கிரேஸி"
முதல் சோதனை, செயின்ட் ஜான் ஆஸ்பத்திரி சிக்னலில் தொடங்கியது. ரோடு டைவர்ட் பண்ணி விட்டதில், எது ஒன் வே என்று தெரியவில்லை.
பின்னால் ஹாரன் சத்தங்கள்.
இருய்யா, போறேன்....என்று தமிழில் கத்தினான்.
பேக ஹோகிப்பா என்று பைக் காரன் அட்வைஸ் செய்து, சிக்னல் திறந்ததும் பறந்தான். .
திஸ் இஸ் ஸ்ட்ரென்ச்....அமெரிக்கால எல்லாம் இப்படி பார்க்க முடியாது...கூல் வாசு என்றான் கிருஷ்ணன் .
ஒரு வழியாக நகரின் வெளிப்புறத்தில் இருந்த ஷாப்பிங் மாலை ஏழு மணிக்கு அடைந்தார்கள். .
பார்க்கிங்கில் கடைசியில், கிட்டத்தட்ட ஓசூர் அருகே காரை நிறுத்த இடம் கிடைத்தது. வாசலிலேயே, பிரம்மாண்ட பொம்மை ஒன்றில் இருந்த மனிதன் கை கொடுத்தான்.
கிரவுண்ட் ப்ளோர் முழுக்க துணி, மணி செக்ஷன். ரெண்டு சுடிதார்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முன்னால், பில்லை பார்த்தால், ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று, தூண் மறைவில் பார்த்தான். ரெண்டாயிரம் என்றது. ரெண்டாயிரத்தில், சேலத்தில் ஐந்து சுடிதார் எடுக்கலாம் என்று தோன்றியது.
கேட்டால், என்னிக்கோ ஒரு நாள் வரா.....என்பாள்.
அதற்கு இவளுக்கும் ஏன் ஒன்று வாங்க வேண்டும்? கேட்டால், ஞாபகார்த்தம்....
சனியன், ரெண்டாயிரத்தோட விட்டது என்று நினைத்துக் கொண்டான்.
பர்ஸ்ட் பிளோரில், மளிகை ஐட்டம்கள். வரிசையாய், எண்ணெய் செக்ஷன். பருப்பு செக்ஷன். அழகாய் அடுக்கி வைத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும், ஒருவன் ஏதோ நோட்டீஸ் போல கொடுத்தான்.
என்னய்யா? என்றான் வாசு எரிச்சலோடு.
இன்னிக்கு என்ன ஆபர்னு போட்டிருப்பான். என்றாள் லட்சுமி.
சக்கர வண்டி டிராலி வரிசையில் காத்திருந்தது.
முதலில் ஓட்ஸ் எடுத்தாள்...
ஏண்டி, ஆத்துலதான் கம்பு குருணை இருக்கே
இதுவும் இருக்கட்டுமே
ஏண்டி அது கிலோ முப்பது ரூபா, இது கிலோ இருநூறு ரூபாயாச்சே? என்று கேட்க நினைத்தான்.
கூட இருந்த அமெரிக்கா தடுத்தது.
ஒன் ப்ளஸ் ஒன்னில் ரெண்டு மேங்கோ ஜூஸ் எடுக்கலாமா?
ஏண்டி, நம்மாத்திலே ரெண்டு பேர்தான் இருக்கோம்..எதுக்கு ரெண்டு பாட்டில்
ஆபர்னா
அதுக்காக ரெண்டு மாசம் வச்சிருந்து மேங்கோ ஜூஸ் குடிப்பியா? தேவைப்பட்ட பொழுது, மாம்பழமே வாங்கி ஜூஸ் போட்டுக்க கூடாதோ?
அமெரிக்கா பார்த்ததால் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
பிஸ்கட் செக்ஷனில் சகட்டு மேனிக்கு, எல்லாம் க்ரீம் பிஸ்கட்கள். பல் கெட்டுப்போகும் என்று சொல்ல நினைத்தான். அமெரிக்கா ?!
எல்லா செக்ஷனிலும் வாடிக்கையாளரை கவர, ஒன்று வாங்கினால், ஒன்று பிரீ என்றது. பாடி ஸ்பிரேயரா? பேரீச்சம்பழமா?
ஒரு பொருள் எடுத்தால், இன்னொரு கவரும் சேர்ந்து வந்தது.
ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து, வெளியே வந்த பொழுது இரவு ஒன்பதரை ஆகி விட்டது.
இனிமே போய், ஆத்துல டிபன் செய்றது கஷ்டம் என்று, ட்ரைவ் இனில் சாப்பிட்டார்கள். சாம்பார் வராதபொழுதெல்லாம், வாசுவே போக வேண்டி இருந்தது. சாப்பிட்டதை விட, சாம்பாருக்கு அலைந்ததுதான் அவமானமாய் இருந்தது.
திரும்பி வரும் பொழுது, பதினோரு மணி ஆகி விட்டது. டோமலூரில் தெரிந்த நாய்கள் குலைத்தது.
மாடியில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த பொழுது, வாசு கேட்டான்.
"அமெரிக்கால  எல்லாம் ஷாப்பிங் எப்படி?"
"இட் வுட் பி குட் ...பெரிய பெரிய மால் இருக்கு அங்கே....வி ஸ்பென்ட் ஹோல் டே பார் பர்சைஸ்..."
"அப்படியா? "
"இந்தியா இன்னும் பின் தங்கி இருக்கு "
"எதை வச்சி சொல்றேள்?"
"நீங்களும் ஐந்து வருஷமா, உங்க கார கூட மாத்தலே....அங்க, வருஷம், ஒண்ணு மாத்திடுவோம்..."
"இவ்வளவு செலவு பண்றேளே, அவ்வளவு வருமானம் இருக்கா?"
கொஞ்சம் தயங்கினார் க்ரிஷ்.
"அப்படி சொல்ல முடியாது "
"அப்புறம் எப்படி இவ்வளவு செலவு செய்றேள் "
"எல்லாம் க்ரெடிட் கார்ட்....கடன்....புலி வால் பிடிச்ச கதை "
"அத்தனை கடன் வாங்கி என்ன பிரயோஜனம்? திரும்பி நாமதானே அடைக்கணும்....."
"கடன் அடைக்க முடிஞ்சிருந்தா, இன்னும் நான் ஏன் அங்கேயே இருக்கேன்? எப்போவோ இங்க வந்திருப்பேனே....."

Thursday, July 7, 2016

சேலத்து கதைகள் - நேர்மை என்றால் என்ன சங்கர சுப்பு

சின்ன வயதில் கொஞ்சம் கட்டுப்பெட்டியாகத்தான் வளர்த்தார்கள். நகராட்சி நடு நிலைப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்த பொழுது, டீச்சர்கள் எல்லாம் போதிதர்மர்களாகத்தான் இருந்தார்கள். ஒரு பொய்? கபடம்? ம்ஹ்ம்..
.டீச்சர் இவன் என் பென்சிலை திருடுறான்...
திருடியவனுக்கு அதிக பட்ச தண்டனை கிடைத்தது. அந்த சத்திய காலத்தில், டீச்சர்களுக்கு அதிக சலுகை இருந்தது.

வீட்டில் தினமும் ராமாயணக் கதைகள் சொல்லுவார்கள். எந்த விதத்திலும் கெட்ட விஷயங்கள் காதில் விழக் கூடாது என்ற பிடிவாதம் ஒட்டு மொத்தமாய், பள்ளியிலும், வீட்டிலும் இருந்தது. 

பாட்டி அவ்வப்பொழுது, நேர்மை என்றால் என்ன? சங்கர சுப்பு என்பாள்.



கதை பேரே இவ்வளவு நீளமா

கதை பேரு நேர்மை என்றால் என்ன...எழுதியவர் பெயர் சங்கர சுப்பு

பாட்டி விடாமுயற்சியாக எங்களை நல்ல குடிமக்கள் ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில், எங்களின் நேர்மைக்கு ஒரு சோதனை  வந்தது.

காலையில் வழக்கம் போல, மேரே தோஸ்தி என்று விஷால் வீட்டில் பார்த்த ஹிந்தி படத்தின் பாடலை அர்த்தம் புரியாமல் பாடிக்கொண்டே சம்ஸ்க்ருத க்ளாஸ் செல்லும் போது, வழியில் ஐம்பது ரூபாய் இருந்தது.

அன்றைய ஐம்பது ரூபாய்....மிகப் பெரிரிரியது....
ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாயில் இருந்த காலம். நாங்கள் எடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றோம். நாங்கள் என்றால், நானும் என் தம்பியும்.

அவன் எடுக்கலாம் என்றான். எனக்கு பள்ளியில் சொன்ன நீதி ஞாபகத்திற்கு வந்தது.

தனக்கு சம்மந்தம் இல்லாத பொருளை, எடுக்க கூடாது...உரியவர்களிடம் கொடுத்து விட வேண்டும்...

ஆனால், இந்த பணத்திற்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. ஒரு வேளை , அவர் வருவாரா? தேடுவாரா?

இந்த மாதிரி ஆத்ம விசாரணையில் நாங்கள் இருந்த பொழுது, மீசையோடு ஒருவர் எங்கிருந்தோ சைக்கிளில் வந்தார்.

என்ன தம்பி பார்க்குறீங்க

கீழே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருக்கு

அடடே ஆமாம் ...உங்களுதா

இல்லன்னா....யாருதுன்னு தெரியல...அதுதான்

உங்களுது இல்லேதானே....நீங்க போங்க...நான் கொடுத்துடறேன்...

கொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி பார்த்ததில், அவர் அப்பட்டமாக அந்த பணத்தை, சட்டைக்குள் செலுத்திக் கொண்டதை பார்த்தோம்.

நாங்கள் அவர் மீசையை பார்த்த அதிர்ச்சியில் சம்ஸ்க்ருத க்ளாஸ்ஸிற்கு சென்றோம்.

க்ளாஸ் முடிந்து வரும் வழியில் எனக்கு சந்தேகமாகவே
 இருந்தது. ஒரு வேளை அந்த பணத்தை நாமே எடுத்திருக்க வேண்டுமோ? பணத்தை எப்படி அந்த மீசைக்காரர் உரியவரிடம் சேர்ப்பார்?


வீடு திரும்பியதும் பாட்டியிடம் கேட்டேன்...

பாட்டி, இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது

என்ன
ரோட்டில் போகும் போது, கீழே ஒரு ஐம்பது ரூபா நோட்டு இருந்தது
அடடே, அப்புறம்

யாருதுன்னு தெரியல...அதனால, அதை அங்கேயே விட்டுட்டு வந்துட்டோம்....அதுக்குள்ள ஒரு ஆளு வந்து எடுத்துட்டு போயிட்டாரு

நீ ஏன் அப்படி பண்ணே? பேசாம எடுத்துண்டு வந்திருக்கலாம் இல்லை?

பிற்பாடு வளர்ந்த பின், சமூகத்தோடு நேரடியாக தொடர்பு கொண்ட பிறகு, ஏற்பட்ட பல்வேறு ஏமாற்றங்களுக்கும் ,  அதிர்ச்சிகளுக்கும்  என்னை தயார்படுத்த பாட்டியின் கேள்வி உதவியது.






Wednesday, July 6, 2016

பனாமா சிகரெட்

வெற்றிகரமாக மூன்றாவது நாள் என்று போஸ்டர் அடிக்க வேண்டும் போல் இருந்தது. மதிய மீட்டிங்கில் வாயில் சும்மானாச்சிக்கு பற்ற வைக்காமல் சிகரெட் பொருத்திய பொழுது, ஒரு லட்ச ரூபாய் பந்தயம்டா என்று கோகுல் ஞாபகப்படுத்தினான்.
சிகரெட்டுக்கும் எனக்கும் ஜென்மாந்திர தொடர்பு. சின்ன வயதில், மாமா சிகரெட் குடித்து பார்த்திருக்கிறேன்.
முதலில் பனாமா, கொஞ்ச நாள் கழித்து சார்மினார், சமீப காலங்களில் கிங்ஸ்...டாக்டர்கள் கெஞ்சுவதால், அவ்வப்போது ப்ளாக்
பரிணாம வளர்ச்சி, கடந்த இருபது வருடங்களில் இப்படித்தான்  ஆனது.இது நாள் வரை, சிகரெட்டை விட வேண்டும் என்று நினைத்ததில்லை.
சமீபத்திய முழு உடல் பரிசோதனையின் முடிவுகள் எல்லாம் சிகரெட்டிற்கு எதிராக  இருந்தது. டாக்டர் ராவ், செஸ்ட் எக்ஸ்ரேயை பார்த்து விட்டு, இன்னும் ஒரு சிகரெட் குடிச்சா, அடுத்த இருபது நிமிஷத்துல செத்துடுவ என்கிற நல்ல செய்தியை சொன்னார்.
அதிலிருந்து கண்காணிக்கப்பட்டேன். முதலில் மனைவி கண்கொத்தி பாம்பாக பின் தொடர்ந்தாள்.
ஆபிசில் மேலே சொல்லப்பட்ட கோகுலால் (என் பார்ட்னர்) பின்தொடரப்பட்டேன். ஆபிஸ் போகும் பொழுது, வரும் பொழுது, ட்ரைவர் எல்லாம் என் மனைவியின் கையாட்கள்.
எங்கேயும் ஒரே ஒரு சிகரெட்...மூச்...கடந்த மூன்று நாளாக, புலனடக்கம், அவையடக்கம், கீழே ஒரு இடத்தை காட்டி....அடக்கம்....
மூன்று மணிக்கு மேல், கோகுல் வீட்டிற்கு சென்று விட்டான். மறுபடியும் அவன் ஐந்து மணிக்குத்தான் வருவான். அவனிடம்தான் பந்தயம் கட்டியிருக்கிறேன். என்னை சிகரெட்டோடு பார்த்தால், ஒரு லட்சம் பரிசு என்று.
ஜெனெரல் மேனேஜர் கிழம் ஏதோ புதிய ஸ்ட்ராட்டஜியை அறுத்துக் கொண்டிருந்த பொழுது, உள்ளே தன்னிச்சையாய் கை நடுங்கியது.
என்னதான் கம்பெனியின் டைரக்டர் என்றாலும், சில சங்கடங்களை தாங்கி கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
இந்த மாதிரியான பேச்சுகளை கேட்டால், சிகரெட் மட்டும் அல்ல, ஷிவாஸ் ரிகள் ஒரு ரவுண்ட் அடித்தால் என்று ஏன் தோன்றாது.
முதல் நாளிலிருந்து பார்க்கிறேன். உடம்பு ஒரு நிலையில்லாமல் தவிக்கிறது.
டாக்டர் சிகரெட் குடிக்கும் நினைவு வரும்போதெல்லாம் தண்ணீர் நிறைய குடிக்க சொன்னார். விளைவு, குடம் குடமாய் மூத்திரம் போனது.
இரண்டாவது நாள், கிளையண்ட் விசிட்டில், எல்லாரும் சிகரெட் குடித்தார்கள். அருகில் நின்று, வாசனைப் பிடித்துக் கொண்டே, கோகுலின் கட்டுப்பாட்டினால், ஒன்றும் பெயரவில்லை.
கோகுல் வருவதற்கு முன், ஒரே ஒரு இழுப்பு......
"எக்சிகியூஸ் மீ.....கொஞ்சம் வாக் போயிட்டு வந்துர்றேன்....நீங்க மீட்டிங்கை கண்டின்யு பண்ணுங்க "
"எஸ் சார்...."
தள்ளு கதவைத் திறந்து, வெளியே வந்தேன். ஏ சி யை விட்டு வந்ததும் வியர்த்தது. ரிசெப்ஷனிஸ்ட் மரியாதைக்கு சிரித்தாள்.
புல்வெளியில் ஆங்காங்கே நீர்த்திவலைகள்.
இத்தனை பெரிய கம்பெனியில், இன்றுதான் நடந்து வெளியே வருகிறேன். எல்லா நேரங்களிலும் கார்தான்.
செக்யூரிட்டி பதறி கூண்டிலிருந்து வெளியே வந்தான்.
சார்...
ஒண்ணும் இல்ல...இங்கதான் பக்கத்தில....
ஒரு ஆள் நுழையும் கதவு வழியே வெளியே வந்தேன்....இங்கே எங்கே பெட்டிக்கடை இருக்கிறது...ரோட்டின் எதிர் பக்கத்தில் பெட்டிக்கடை தெரிந்தது....
மத்தியான வெய்யிலில் கோட், சூட் எல்லாம் போட்டுக்கொண்டு பெட்டிக்கடையில் பனாமா வாங்குவது எனக்கே அபத்தமாகப் பட்டது.
ஒரு பனாமா கொடுங்க....
கிழவி மாதிரி இருந்தவள், எடுத்து கொடுத்தாள். இரு நாள், பிரிவிற்கு பின் கையில் பட்டதும் உடம்பே சிலிர்த்தது.
வாயில் வைத்து, பற்ற  வைக்கும்பொழுது,
சார்..சார்....
ட்ரைவர் வந்துவிட்டான்...
சே.....
பற்ற வைக்க இருந்ததை குப்பையில் போட்டு விட்டு, மீட்டிங்கிற்கு திரும்பும் பொழுது ஐந்து மணி. கோகுல் வந்துவிட்டான்.
என்ன பையா? ஏதாவது சில்மிஷம் பண்ணியா? என்றான்.
நீ நாசமாக போக என்றபொழுது சிரித்தான்.
மாலையில் உற்சாகமாய் இருந்தது. வீட்டிற்கு திரும்பும் பொழுது, ஏ டு பி யில் ஸ்வீட் வாங்கி கொண்டேன்.
இன்னும் கொஞ்ச நாளில் இந்த சிகரெட் சனியனிலிருந்து முழுவதுமாய் வெளியே வந்து விடவேண்டும்
என் பையன் கௌதமிற்கு பிடித்த கிரிக்கெட் பேட்டை வாங்கி கொண்டேன்.
அடையாறில் இருந்த என் பெரிரிரிய...பங்களாவுக்குள் நுழைந்த பொழுது இரவு எட்டை தொட்டிருந்தது.
வாங்க.....என் சகதர்மிணிதான்.
உனக்கு ஒரு சந்தோஷமான நியூஸ்....வெற்றிகரமாக மூணாவது நாள்....இன்னைக்கும் சிகரெட் குடிக்கல என்றேன்....
கொஞ்சம் உள்ளே வாங்க....
எங்கள் பெட் ரூமிற்குள் அழைத்து சென்றாள்...
என்ன விஷயம்? இங்க வச்சு சொல்றே?
சொன்னா கோபிக்காதீங்க....
என்ன விஷயம் சொல்லு...நான் இன்னிக்கு உற்சாகமா இருக்கேன்...
ஒண்ணும் இல்ல....
பரவாயில்ல சொல்லு....
வந்து
இந்த வந்து போய் எல்லாம் வேணாம்.ஸ்ட்ரைட்டா சொல்லு
வந்து.....கௌதமும் சிகரெட் குடிக்கிறானு நினைக்கிறேன்
சே..சே....அப்படி இருக்காது...ஏதாவது உளறாதே
இல்லீங்க, அவன் பையில இதை பார்த்தேன்....
சேலை மறைவிலிருந்து எடுத்து காண்பித்தாள்.
பனாமா சிகரெட் பாக்கெட்