Thursday, August 18, 2016

மீண்டும் ஒரு காதல் கதை

இந்த கதையை படிக்கப் போகிற உங்களை விட, எனக்கு அமித்தையும், பூஜாவையும் மிக அந்தரங்கமாகத் தெரியும். அநேகமாக, அவர்கள் காதல் தொடங்கிய நாளிலிருந்து.
நான்?
பெயர் ஸ்ரீனிவாச கோபாலன் சுருக்கமாக சீனி. பிறந்தது சென்னை. அப்பா ஆர்மியில் இருந்ததால், கொஞ்ச நாள் ஸ்ரீநகரிலும், சிரபுஞ்சியிலும் (அங்கும்  தண்ணீர் கஷ்டம் உண்டு), போபாலிலும் வெண்ணை, சப்பாத்தியோடு வளர்க்கப்பட்டவன். சன் டி வியின் உபயத்தில் தத்தி தத்தி தமிழ் படிப்பவன். பேசுபவன்.
முதலில் நான் அந்த ரகசிய திட்டத்திற்கு உடன்படவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் இந்த மாதிரி சாகசங்கள் நிறைந்திருப்பதை உள்ளூர விரும்பி இருக்கிறேன். ஸ்ரீநகரில் இரண்டு அடியில் ப்ளண்டர்பஸ் கன்னை சந்தித்திருக்கிறேன். இரண்டு முறை கன்னி வெடியிலிருந்து தப்பித்திருக்கிறேன். பாராமுல்லா பகுதியில் பனியில், ரோந்தில், வேண்டாம். உங்களுக்கு தூக்கம் வரும்.
இப்போது நான் வந்திருப்பது, மிக மிக ரகசியமான காரணம். இதில் தேசப்பற்றோ, சேவையோ கிடையாது.
யாரும் இல்லே.....என்றான் அமித்.
கிட்டத்தட்ட மரத்தின் உச்சியில், பச்சோந்தி மாதிரி கலரில் ஒரு டிரஸ் அணிந்திருந்தான்.
அவன் கையில் இரவில் ஊடுருவிப் பார்க்கும் பைனாகுலர். எங்களுக்கு எதிரே தெரிந்த பெரிய பங்களாவில் உள்ளே இருப்பவர், எங்களுக்கு முக்கியம் அல்ல. நாங்கள் செய்ய வேண்டியது ஒரு பொருளை எடுத்து வரவேண்டும்.
எங்களின் இருபது வயதிற்கு இது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத செயல். இருந்தாலும், அமித்தின் காதல் தெய்வீகமானது என்று அவன் நம்புவதால், இந்த சிரமங்கள் எல்லாம். என்னைப் பொறுத்த வரை, காதல் ஹார்மோன்களின் விளையாடல்.
முதலில் எலெட்ரிசிட்டியை நிறுத்துவோம் என்றான்.
இது எங்கள் திட்டத்தில் ஏற்கனவே இருந்தது. பிள்டிங்கின் பின் புறம், எலெக்ட்ரிக் லைன் போகும் பாதை எங்களுக்குத் தெரியும். வரைபடத்தில் உள்ளது. அதை ஒரே சொடுக்கு. கும்மிருட்டில், மேல் மாடியின் அறையில்  அவரின் கட்டில் அருகே இருக்கும், டேபிள் டிராயரை சத்தமில்லாமல் திறந்து, உள்ளே இருக்கும் வஸ்துவை எடுத்து வர வேண்டும்.
நானும் அமித்தும் தெளிவாக முடிவு செய்திருந்தோம். பங்களாவை சுற்றிலும் நிறைய ரோந்து. எல்லாம் அப்பாவோடு வேலை செய்பவர்கள். எங்கள் நோக்கம், இவர்களை முறியடிப்பது அல்ல. முதலில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, அந்த குழப்பத்தில் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.
நாங்கள் சரியான இடத்திற்கு வந்து, அந்த ரெண்டு வயர்களை இணைக்கும் நேரம், ஷார்ட் சர்க்யூட்டில் பங்களா மின்சாரம் இழந்து பழைய ஹிட்ச்காக் படம் மாதிரி திகிலாக தெரிந்தது.
சக்சஸ் என்று நாங்கள் பங்களாவிற்குள் செல்ல முயலும்போது, அந்த பங்களாவிற்கு உள்ளே மட்டும் தனி கனெக்ஷன் இருப்பது தெரிந்தது. பங்களாவுக்குள் பிரகாசமாக வெளிச்சம் திடீரென்று ஒளிர்ந்தது. .
திட்டத்தின் முதல் தோல்வி.
பேசாமல் போய் விடலாம்....என் காதல் அம்பேல் என்றான் அமித்.
அவசரப்படாதே கொஞ்சம் யோசி என்றேன்.
எனக்கு இந்த சாகசம் உள்ளூர பிடித்திருந்தது. ஆர்மி ஜெனரல் வீட்டில் ரகசியமாய் நுழைந்து, அவரின் செல்ல பேனாவை திருடிக் கொண்டு வருபவது என்பது அத்தனை சாதாரண விஷயமா?
அதுவும் பத்து பைசாவிற்கு பெயராத நண்பனின் காதலுக்கு...
"எல்லாம் பூஜாவின் பிடிவாதம் " என்றேன்
"ஒண்ணும் பண்ண முடியாது.....அவளிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். அவள் சொன்ன மாதிரி, அவள் அப்பாவின் குவார்ட்டர்ஸில் இருந்து, அந்த பேனாவை கொண்டு வராவிட்டால் என்ன, இங்கேயே டார்ஜிலிங் ஒரு முறை அழைத்து சென்று, ஒரு இரவு நேரத்தில் அவளை சரி செய்து காட்டுகிறேன். " என்றான்.
உனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்றேன்.....
என் பார்வையை உணர்ந்து, அமித்தும் பங்களாவின் பின் பக்கம் பார்வையை செலுத்தினான்.
சென்டரி தனியாக இருக்க பிடிக்காமல், மேற்கு பக்கம் நகர, பின் வாசல் வழியாக உள்ளே நுழைய முடியும்.
பூஜாவும் அமித்தும் காதலர்கள். பூஜாவின் அப்பா ஆர்மி மேஜர் ஜெனெரல். அவரின் கீழ் என் அப்பாவும், அமித்தின் அப்பாவும் அதிகாரிகள். பூஜாவின் அப்பாவிற்கு இன்னும் காதல் விவகாரம் தெரியாது. அவரிடம் பேசும் அளவிற்கு அமித்திற்கு தைரியம் இருக்கிறதா என்று சோதிப்பதற்காக, இந்த ஸ்பெஷல் டாஸ்க். மேஜர் ஜெனெரலின் வீட்டிற்குள் நுழைந்து, மேல் அறையில் இருக்கும் அலமாரியில் இருக்கும் அவரின் பேனாவை சுட்டு வர வேண்டும். போட்டியில் ஜெயித்தால், பூஜா அவள் அப்பாவிடம் பேசுவாள். இல்லையென்றால் காதல் அம்பேல்.
இந்த கண்றாவி காதல் கதைக்கு நண்பனான நான் உதவப் போய்தான் இப்போது, பங்களா வாசலில் இருக்கிறேன்.
அந்த பங்களாவின் தோட்டம் முழுக்க ராணுவ தலைகள். பகல் நேரத்தில், இதே பங்களாவிற்கு நிறைய முறை அப்பாவோடு ஜீப்பில் வந்திருக்கிறேன். பகலில் வந்தால், மேலே போக முடியாது. நிறைய பாதுகாப்பு கவசங்கள்.
இந்த முறை, நாங்கள் பின் பக்கத்து கதவை கஷ்டப்பட்டு திறந்து புல் வெளியில் குதித்து, க்ரோட்டன்சில் மறைந்து, பங்காளவின் பின் பக்கத்தில் இருந்த ஜன்னலின் வழியாக குதித்து, தொபுக்
இதற்கு எத்தனை திட்டமிடல்கள். ஆர்மி ஜெனெரலை முதலில் எங்களின் ராணுவ காலேஜின் ஆண்டு விழாவில்தான் பார்த்தோம். எத்தனை குறிப்புகள்.
ஆர்மி ஜெனெரலை பற்றிய சிறு குறிப்புகள்
இடது கை பழக்கம் உள்ளவர், ஆறடி இரண்டு அங்குலம், ஷார்ட் சைட், தினமும் டைரி எழுதுபவர், நிறைய ஞாபக மறதிக்காரர் (காலேஜ் ப்ரின்சிபாலுடன் பேசும் பொழுது, மொபைலை ரூமில் வைத்து விட்டு வந்து விட்டார்). அவர் வீட்டில் இரண்டு பெட் ரூம்கள் இருக்கின்றன (அதில் எதில் தூங்குவார் என்று ஒரு மாதிரி யூகித்து விட்டோம். நேற்று ப்ரின்சிபாலுடன் பேசும் பொழுது, சாப்பிட்டவுடன் தூக்கம் வந்திடுச்சு..உடனே படுத்துட்டேன்...என்றார்.....எனவே கிச்சனுக்கு சமீபம் உள்ள பெட் ரூம்)
அந்த ரூமில் இருக்கின்ற இரண்டு அலமாரியில் அநேகமாய் இடது பக்க அலமாரியில்தான் பேனா இருக்கின்ற வாய்ப்பு அதிகம். ஏனெனில், அவர் இடது கைக்காரர்.....உஷ்....இது ஒரு சாம்பிள்.....இந்த மாதிரியான தகவல்கள் நிறைய சேமித்திருக்கிறோம்.
நாங்கள் அந்த பங்களாவுக்குள் நுழைந்ததை ஈ, காக்கா பார்க்கவில்லை. நாங்கள் படியில் சத்தம் போடாமல் ஏறி, அந்த பெட் ரூம் வாசலில் நின்றோம். எங்கள் சுவாசம் எங்களுக்கே மிக அதிக வால்யூமில் கேட்டது.
லேசாக கதவைத் திறந்து, உள்ளே அவரைப் பார்த்தோம். மேஜர் சீரான மூச்சு விட்டுக் கொண்டு, தூங்குவது தெரிந்தது. ஒரே நிமிடம். உள்ளே நுழைந்து, பேனாவை எடுத்துக் கொண்டு, அடுத்த சில நிமிடங்களில் பங்களாவின் பின் பகுதியில் இருந்தோம்.
அமித் உற்சாக மிகுதியில் கத்தினான். இந்த கதை இங்கேயே முடிந்து, சுபம் போட்டு விடலாம் என்று பார்த்தால் முடியவில்லை.
அடுத்த நாள் காலை, அப்பாவின் ஆபிசிலிருந்து அவசர அழைப்பு.
மேஜரின் வீட்டில் யாரோ நுழைந்திருக்கிறார்கள். பேனாவை திருடியிருக்கிறார்கள். பின் பக்கம் வழியாக வந்திருக்கிறார்கள். காரணம், பின் பக்க கதவின் தாழ்ப்பாள் திறந்திருக்கிறது.
சே...நாங்கள் மறந்து போன விஷயம்.
அப்பா கோபமாக கிளம்பி போனார். நீயும் வருகிறாயா? என்றார். நானும் தொத்திக் கொண்டேன்.
இந்த முறை வாசல் கேட், வழியாக கண்ணியமாக சென்றேன்.
மேஜர் கோபமாக காத்திருந்தார். கண்கள் சிவந்திருந்தன.
யாரோ ஒரு பாஸ்டர்ட்.....உள்ளே நுழைஞ்சிருக்கான்....என் பேபி ப்ரெசென்ட் பண்ண பேனாவை திருடி இருக்கான்.
அந்த பேனா என் பனியனுக்குள் ஒளிந்திருப்பது அவர்களுக்கு தெரியாது.
எப்படி?
பின் பக்க கதவு தாழ்ப்பாள் திறந்து இருக்கு....அந்த வழிய நாங்க உபயோகிக்கறது இல்ல....
சென்ட்ரி?
அவன் வெஸ்ட பக்கம் இருக்கிறவன் கிட்ட நெருப்பு வாங்க போயிருக்கான்
அப்பா மேலே போய் விட்டு, ரூமை பார்த்து விட்டு வந்தார்.
சில பேரை நான் சந்தேகிக்கிறேன்......
எனக்கு சிரிப்பு வந்தது.
டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர்களின் பெயர்களை சொன்னார்.
நீ ஏண்டா சிரிக்கிற? என்றார் செல்லமாக.
இல்ல...யார் எடுத்திருப்பான்னு யோசிக்கிறேன்
நான் அந்த தருணத்திற்க்காக காத்திருந்தேன். ஏதோ ஒரு முனையில், சந்தர்ப்பத்தில் அப்பாவும், மேஜரும் இந்த இடத்தை விட்டு நகர்ந்தால், ஒரே நிமிஷத்தில் மேலே சென்று பேனாவை வைத்து விட்டு வரலாம்.
என் அதிர்ஷ்டம். அப்பா செக்யூரிடியிடம் ஏதோ சொல்வதற்கு சொல்ல, வாசலுக்கு நகர, இந்த நேரத்தில் மேஜர் ஏதோ ஒரு போன் காலிற்காக உள்ளே செல்ல,
நிமிடத்தில் நான் மேலே சென்று பேனாவை அதே இடத்தில் வைத்து விட்டு வந்தேன்.
இப்போது அவர்கள் திரும்பி இருந்தார்கள். மேஜர் அப்போதுதான் என்னை கவனித்தார்.
"வாப்பா....காலேஜ் எல்லாம் எப்படி போகுது?"
"நல்லா போகுது அங்கிள்.....ஏன் அங்கிள் டென்க்ஷனா இருக்கீங்க"
"நேத்து நைட் யாரோ வந்து என் ரூமிற்க்கு வந்து, என் பேனாவை திருடிட்டாங்க...அது என் லக்கி பென்..."
"எங்கே வச்சிருந்தீங்க...நல்லா தேடி பார்த்தீங்களா?"
மேலதான் அலமாரியில்
ஓகே...
சரி...எதுக்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடறேன்
நான் அந்த க்ளைமாஸ் காட்சிக்காக காத்திருந்தேன். அவர் பேனாவோடு வந்தால், ஞாபகமறதி என்று கூறி, விஷயத்தை ஊத்தி, மூடி விடலாம் என்று நினைத்திருந்தேன்.
அவர் பேனாவோடு வந்தார்.
என்ன ஆச்சரியம்.....இங்கேயேதான் இருக்கு.....சட் ......இத்தனை ஞாபக மறதிக் கூடாது என்றார்.
சாரி நண்பரே......என்றார் என் அப்பாவைப் பார்த்து.
பேனா அங்கேயேதான் இருந்தது....நான்தான் ஒழுங்கா பார்க்கலை....மற்றபடி யாரும் வரல....
நானும் அப்பாவும், சந்தோஷமாக விடை பெற்று வாசல் வரும் பொழுது, மீண்டும் கூப்பிட்டார்.
வெய்ட்...வெய்ட்....
நான் காலையிலே கூட பார்த்தேன்....அங்கே இல்லே....இப்ப இருக்கு....நடுவுல யாரும் வரல...சோ, வேற யாரோ கண்டிப்பா இத பண்ணி இருக்காங்க......இவன்தான் பண்ணி இருக்கணும்....ஐ டவுட் யுவர் சன் என்றார்.......
அப்பாவின் மீசை துடித்ததை முதல் முறையாக பார்த்தேன்.
அங்கிள் நான் ஒண்ணும் பண்ணல......எனக்கு ஒண்ணும் தெரியாது....என்றேன்
பொய் சொல்லாத
இல்ல அங்கிள்.....சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது....
நீதான் எடுத்த......என்னால நிச்சயமா சொல்ல முடியும்....
எதை வச்சு சொல்றீங்க
எல்லா உண்மைகளையும் பூஜாவே  சொல்லிட்டா.....அமித், பூஜா காதலை நான் ஏத்துக்கிட்டேன்...அடுத்த மாசம் கல்யாணம்....
என்னைப் பார்த்து ஜெனரல் கண்ணடித்தார். காதல் ஏதோ கொஞ்சம் புனிதமானதாக தோன்றியது அப்போது.

No comments:

Post a Comment