Sunday, August 21, 2016

இவர்களும் இந்தியர்கள்

கொலை செய்வதும் , கொள்ளை செய்வதும்  கலை
- மந்திரி குமாரி வசனம்
கொலை எப்படி கலையாகும்?
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, பாய்ந்து சென்று மரத்தில் இருக்கின்ற பருந்தை கொல்கிறது. அங்கு வில்வித்தை என்கிற பெயரில் கொலை கலையாகிறது.

கண்ணுச்சாமியை நீங்கள் சந்திக்க வேண்டுமானால், உடனடியாக அடையார் எல் பி ரோடிலிருந்து இந்திரா நகர் திருப்பத்தில் சினிமா இன்ஸ்டிடியூட் பாலத்துக்கடியில்  (அநேகமாய் உங்கள் பார்வைக்கு படாத) கிட்டத்தட்ட நூறு குடிசைகள் இருக்கின்ற சேரியில், ரெயில்வே க்ராஸ்ஸிங் அருகே மூணாவது குடிசையில் பார்க்கலாம்.
கூவத்தின் கிளை நதியாக பிரவேசம் செய்கின்ற அந்த "காவாயை" கடந்தால், கொஞ்சம் மூக்கைப் பொத்திக் கொண்டா ல் உள்ளே நுழையலாம்.
உள்ளே எம் ஜி ஆர், அண்ணா படங்கள். கேலண்டரில் ஜீசஸ். கூடத்தை தடுத்து ஒட்டிய கிச்சனில் சில்லறை சமையல் பாத்திரங்கள்.
கண்ணுச்சாமியின் தொழில் இந்திய பீனல் கோட் செக்ஷன் 378, 379 ஆல் மூன்று வருடம் வரை தண்டிக்கப்பட சாத்தியம் இருக்கின்ற சில்லறை திருட்டு.
கண்ணுச்சாமியின் ரிஷி மூலம் அத்தனை ஆரோக்கியமானது இல்லை. பிறந்த ஊர் அநேகமாய் கடலூராக இருக்கக் கூடும். ஏனென்றால், அங்குதான் ஏதோ ஒரு புதரில் கண்டெடுத்தார்கள். முதலில் உலகத்தில் பார்த்தது, பாதர் வில்லியம்ஸ். ஐந்து வயது வரை அங்கே பராமரிக்கப்பட்டு, (கீழே இருந்த பிஸ்கட் துணுக்கை சாப்பிட்டதற்காக ஆயா அம்மா சுட்ட வடு தொடையில் இன்னும் இருக்கிறது)  சென்னை சைதாப்பேட்டைக்கு  மாற்றப்பட்டு, ஐம்பது வருடம் இருக்கும். சென்னைதான் எல்லாம் கற்றுக்கொடுத்தது. ஏமாற, ஏமாற்ற.
இன்னிக்கு எங்க டூட்டி என்றாள் பொன்னம்மா. அணிந்திருந்த நைட்டியில் ஆங்காங்கே இருந்த கிழிசலை சாமர்த்தியமாக ஒட்டுப் போட்டிருந்தாள்.
இங்கேதான் பக்கத்துல.....
கண்ணுச்சாமி எப்பொழுதும் இடத்தை சொல்வதில்லை. அது தொழில் ரகசியம்.
ஒரு இடத்தை "ஆராமாக" தேர்ந்தெடுக்க குறைந்தது பத்து நாட்கள் ஆகும். முன்பு மாதிரி இல்லை. வயசாகி விட்டது. வலு கொஞ்சம் குறைந்துவிட்டது. கண்களில் அநேகமாய் புரை விழுந்து, சினிமா ஸ்கொப் மாதிரி பாதிதான் தெரிகிறது. அதற்குள் அத்தனை லாவகம். மிரட்டல், கவர்தல், பதுங்குதல்.
கண்ணுச்சாமி தொழிலுக்கு கிளம்பும்பொழுது இரவு பனிரெண்டுக்கு மேல். நீங்கள் பேப்பர் படிப்பவரானால் தெரிந்திருக்கும். இந்த மாதிரி தொழிலுக்கு ஏற்ற சமயம், விடிகாலை இரண்டிலிருந்து, நான்கு. அப்புறம் உலகம் வேகமாய் விழித்துக் கொள்ளும்.
லெதர் பேக் மாதிரி இருந்த பைக்குள் தொழிலுக்கு தேவையான சாமான்கள் ரெடி. கயிறு, கத்தி, முகத்தை மறைக்க முகமூடி, கொத்து சாவிகள், டார்ச் லைட், குருவிடம் வாங்கிய பழைய ரிவால்வர். (சியப்பா ரினோ).
கிளம்பும்பொழுது ஒரு முறை ஜீசஸ் படத்தை பார்த்து கும்பிட்டு விட்டு, கதவை இழுத்து சாத்திக்கோ என்றான்.
பொன்னம்மாவுக்கு அன்றும் ஆஸ்துமா இரைச்சல் இருந்தது.
"யேசுப்பா..." என்றாள்.
கண்ணுச்சாமி இடத்தை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்தான். கொஞ்சம் அடையார் பக்கம் நடந்து, திருவான்மியூர் பக்கம் திரும்பி, தரமணி சாலையில் வேளச்சேரி போகும் வழியில் பேபி நகர் தாண்டி  கொஞ்சம் எக்ஸ்டென்சன் ஏரியாவில், ஏதோ ஒரு நகர். கொஞ்சம் வயசாளிகள் இருக்கின்ற வீடு.
நாய்கள் எதுவும் இல்லை. உள்ளே காம்பவுண்ட் தாண்டிக் குதிக்கும் பொழுது, புல்தரை. பின் பக்க ஹோஸ் பைப்பில் ஏறும் பொழுது இரண்டு முறை வழுக்கியது.
இது வரை ஆயிரம் திருட்டுக்கள் நடத்தியிருப்பான். முதல் திருட்டு பசிக்கு ரொட்டி திருடியது.
ஐயோ...அம்மா அடிக்காதீங்க...அப்பா அடிக்காதீங்க....
போலீஸ் அடியில் அம்மாவை நினைத்து கண்டபடி திட்டினான்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்குதான் அவன் தொழில் திறமைகள் முறையாக்கப் பட்டன.
"முதல்ல யாரவது ஒரு ஆள அடிக்கணுமா, கன்னத்திலே வுடு.......அப்புறம் மாரிலே....."
"எப்பேர்ப்பட்ட பூட்டையும் உடைக்க ட்ரிக் இருக்கு தெரியுமா? "
கண்ணுச்சாமி சிறுவர் சீர்திருத்த பள்ளியை விட்டு வெளியே வரும் பொழுது, திருட்டின் மொத்த பரிமாணமும் தெளிந்து வெளியே வந்தான்.
கண்ணுச்சாமி பூட்டு திறப்பதில் நிபுணன். எத்தகைய கஷ்டமான எலெக்ட்ரானிக்ஸ் லாக்கையும் உடைத்திருக்கிறான். இந்த ஐம்பது வருட அனுபவத்தில் போலீசில் ஒரு முறை கூட மாட்டிக் கொண்டது இல்லை.
மொட்டை மாடியில் மாங்காய் உலர்த்தியிருந்தார்கள். அநேகமாய் அய்யர் ஜாதியாய் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த மாதிரி எல்லாம் தெரியும்.
கதவு திறந்து, நிதானமாய் படியில் இறங்கினான். இதே வீட்டிற்கு ஒரு முறை பழைய பேப்பர் காரனாகவும், சேல்ஸ் ரெப்பாகவும், அநாதை ஆசிரமத்திலிருந்து வருவதாகவும் வந்திருக்கிறான். முதல் ரூமில் ஒன்றும் இல்லை. இரண்டாவது ரூமிலிருந்துதான் பணம் எடுத்துக் கொண்டு வந்தார் அந்த வயசாளி.
அவர்களை நோட்டமிட்டிருக்கிறான்.
இவன் அளவுக்கு வயசான ஆள். மற்றும் அவன் மனைவிதான் வீட்டில். பையன் ஏதோ ஒரு வெளிநாட்டில் இருக்க வேண்டும். வீட்டில் எல்லா சவுகரியங்களும் இருப்பதை பார்த்திருக்கிறான்.  ரெப்ரிஜிரேட்டர், டிவி, ஏசி, கம்ப்யூட்டர்.
போன முறை இடம் பார்க்க வந்த பொழுது, அம்மா ...கொஞ்சம் தண்ணி தாங்கம்மா என்றான்.
கழுத்தில் ஐந்து பவுன் தேறும். கை பற, பற வென்றது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். நோ வயலன்ஸ்.
உள்ளே மாஸ்டர் பெட் ரூமில் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. எங்கேயோ யார் வீட்டிலோ, எப் எம் விடாமல் பாடிக் கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டது.
முதலில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையின் வெளிப்பக்கம் தாழ் போட்டான். பின் நிதானமாக, முதல் ரூமில் நுழைந்து, பீரோவை நெருங்கினான்.
பழைய பீரோ. மாஸ்டர் பஞ்சை எடுத்து, சாவியை சரி பார்த்து, நான்காவது முயற்சியில் திறந்தது. லாக்கரில் உள்ளே இருந்த பணக்கட்டை எடுத்துக் கொண்டான். குறைந்தது ஐம்பது தேறும். மூன்று மாதம் ஓட்டலாம். பொன்னம்மாவிற்கு மருந்து வாங்க வேண்டும். கண்ணிற்கு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இன்னமும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
நோ வயலன்ஸ். இந்த தொழிலில் ரத்தம் சிந்துவது கண்ணுச்சாமிக்கு பிடிக்காது. பொன்னம்மாவை பார்த்த நாள் ஞாபகத்திற்கு வந்தது. பொன்னூஞ்சல் படம் பார்த்து விட்டு, பிராந்தி குடித்து விட்டு, எழுபதாம் வருடம் இருக்கும். மோர்ஸ் பாலத்திற்கு அடியில் பெண்ணிற்க்காக காத்திருந்த பொழுது, ஆட்டோவில் திடீரென்று ஐந்தாறு பேர் பொன்னம்மாவை கிட்டத்தட்ட தள்ளி விட்டு சென்றார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல், கற்பழிக்கப்பட்டிருந்தாள்.
அவளை குடிசைக்கு கூட்டி வந்து, காப்பாற்றி.....எத்தனையோ முறை யோவ் இந்த புழைப்பு வேணாம்யா....இத்தனை நல்லவனா இருக்க...பேசாம வேற ஏதாவது ஜோலி பாரு என்றிருக்கிறாள்.
ம்ஹ்ம்.......திருட்டில் உள்ள சுவாரசியம் எதிலும் இல்லை. கொஞ்ச நாள் ரிவிட் அடித்து பார்த்தான். பெட்டிக்கடை வைத்து பார்த்தான். எதுவும் வேலைக்காக வில்லை. எல்லா இடங்களிலும் போலீஸ் வந்து நின்றது. மாமூல் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை. திருட்டு உட்பட. ஆனாலும், இது வரை கண்ணுச்சாமியின் பெயர் எந்த ஸ்டேஷனிலும் வராததே, சாதனைதான்.
படி ஏறும்பொழுது, கொஞ்சம் தள்ளியது. பசி. கொஞ்சம் சுதாரித்து பார்த்தான். காற்றில் கால்  அலைப்பாய்ந்து, ஏதோ ஒரு பொருளில் மோதி,
யாரு?
உள் ரூமில் விளக்கெரிந்து, அய்யயோ திருடன்.......
கத்தாதீங்க...முகமூடி அணிந்து கொண்டான். கையில் புதிதாய் முளைத்த ரிவால்வர்.
நான் கிளம்பறவரை, சத்தம் போடக்கூடாது.
உள்ளே பயந்திருப்பது தெரிந்தது. பயம்தான் அங்கே மூலதனம்.
சத்தம் போட்டீங்க, சுட்டுடுவேன்....ஜன்னல் வழியாக துப்பாக்கியை காண்பித்தான்.
கிளவுஸ் அணிந்து கொண்டான்.
பிரிட்ஜை திறந்தான். பால் இருந்தது. கொஞ்சம் குடித்தான்.
மொபைல் அடிக்கும் சத்தம். சே...இந்த சனியனை வீட்டில் வைக்க மறந்து விட்டோமே?
லைனில் பொன்னம்மா....
ஏங்க....என....எனக்கு ....ரொம் ....ரொம்ப மூச்சேறைக்குது....உடனே வாங்க...
இப்ப வந்திடுறேன்.....
செல் போனை அணைத்து விட்டு, மீண்டும் துப்பாக்கியை அவர்களிடம் காண்பித்து விட்டு, மாடி வழியாய் இறங்கினான்.
தெரு நாய் குறைத்தது. பொன்னமாவிற்கு ஒன்னும் ஆயிருக்காது. அடிக்கடி வரும் இரைப்புதான். முகமூடியை கழட்டி விட்டு, மெய்ன் ரோடு வரை நடந்து சென்று, அதிகாலை பஸ்ஸில் ஏறிக்கொண்டான். பணம் பையில் பத்திரமாக இருந்தது. சென்னை விடியத்தொடங்கியது.
வீட்டுக்கு திரும்பும் பொழுது, வாசலில் கூட்டமாக இருந்தது. ஏன்? என்ன ஆச்சு?
பக்கத்து குடிசை மாரிதான் எதிரில் வந்தான்.
நீ எங்க போய் தொலைஞ்சே? பெரியம்மாவுக்கு மூச்சிரைச்சு கண் சொருகிடுச்சி,...பெரியாஸ்பத்ரிக்கு இட்டுக்கினு போயிருக்காங்க.....
ராயபேட்டையா?
இல்ல சென்ட்ரலாண்ட
21 பிடித்து அலறிக்கொண்டு சென்ட்ரலில் இறங்கி கொண்டான். பெரியாஸ்பத்திரி அந்த அதிகாலை வேளையிலும் பிஸி ஆக இருந்தது.
எமெர்ஜென்சி வார்டில் பொன்னம்மா கிழிந்த நாராக இருந்தாள். தலை கலந்திருந்தது. செயற்கை மூச்சு வைத்திருந்தார்கள்.
டாக்டர் எட்டு மணிக்குத்தான் வருவாராம். டூட்டி டாக்டர் சிடு, சிடு வென விழுந்தார். யோவ்...பேசாம அங்கே போய் உக்காருயா....இப்பத்துக்கு ஒன்னும் சொல்ல முடியாது......பெரிய டாக்டர் வந்து பாக்கணும்....
எட்டு மணிவரை காத்திருந்தான். பெரிய டாக்டர் வந்து, ரெண்டு நாள் ட்ரீட்மென்டில் சரியாகி விடும். என்றார்.
கீழே சாதா வார்டுக்கு மாற்றப்பட்டாள் பொன்னம்மா....விழிப்பு வந்ததும், யோவ் நீ சாப்பிட்டாயா? என்றாள்.....
கண்ணுச்சாமி கண்களில் காத்திருந்த கண்ணீர் மடை திறந்து, கன்னங்களில் வழிந்தது.
யோவ்...எதுக்கியா அழுவற? நாந்தா பொழைச்சுகிட்டேன் இல்லே?
டிபன் வாங்க வெளியே வந்த பொழுது, கண்ணுச்சாமியை போலீஸ் அரெஸ்ட் செய்தது.  செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்து விட்டார்கள்.
கண்ணுச்சாமிக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. இத்தனை வருட அனுபவத்தில் மாட்டிய அனுபவம் எதுவும் இல்லை.
அடையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமையாக இருந்தார்.
எத்தினி வருஷம் டிமிக்கி கொடுத்துருக்கே பெரியவரே.....நல்லா மாட்டிக்கினியா? சாவுற வயசில ஏன்யா சாவடிக்கிற?
முதல் நாள் கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் மனைவி ஸ்டேஷனில் காத்திருந்தார்கள்.
இவன்தான்....என்றதும் முதல் அறை கன்னத்தில் விழுந்தது....
வேண்டாம்...வேண்டாம். என்று அவர்கள் பதறும்பொழுது, நீங்க போங்க...நாங்க பார்த்துக்குறோம்....என்றது காவல் துறை.
இரண்டு நாள் கண்ணுச்சாமிக்கு அவ்வப்பொழுது அடிகளும், பிரியாணிப் பொட்டலமும் கிடைத்தது. பொன்னம்மா என்ன ஆனாள்? என்று தெரியவில்லை.
மூணாவது நாள் சாயந்திரம் விடுதலை செய்தார்கள்.
இன்ஸ்பெக்டர் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
உன் வயசுக்காக அவங்க கேச வாபஸ் வாங்கி இருக்காங்க...இன்னொரு முறை இப்படி ஏதாவது பண்ண....அப்படியே சாவடிச்சுடுவேன்...
வீட்டிற்கு திரும்பும் பொழுது, பொன்னம்மா இருந்தாள். இவனை பார்த்ததும் அழுதாள். எத்தனை அடி? நமக்கு ஏன்யா இந்த பொழைப்பு? என்றாள்....
நமக்கு கால, காலத்துல ஒரு குழந்தை இருந்தா இப்படி நடக்குமா? அந்த பாவிங்க நாலு பேரு செஞ்ச பாவத்துக்கு, என் கர்ப்பப்பை பலவீனமாய் குழந்தையை தாங்கற சக்தியை இழந்திடுச்சி....
கண்ணுச்சாமி ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் பறக்கும் ரெயில் வேளச்சேரியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
அவனுக்கு இதெல்லாம் ஏதோ ஒரு கனவு மாதிரி இருந்தது. யாருக்கோ ஏற்பட்டது மாதிரி. தான் பிறந்தது, வளர்ந்தது.....
இனிமே என்னய்யா செய்ய போறே? என்றாள் பொன்னம்மா......
"தொழிலுக்கு போகும்பொழுது செல்போனை வீட்டிலியே வச்சிட்டு போயிடுறேன்...." என்றான்.

No comments:

Post a Comment