Tuesday, August 30, 2016

காவல் வேலி

எனக்கு என்னமோ இப்ப நடக்கறது எதுவும் பிடிக்கல..."என்றாள் மரகதம். கையில் பாதி வழிந்தோடும் மாவு.
"ப்ரீத்திக்கிட்ட எப்ப பேசினீங்க? "
பாதி ஷேவிங்கில் இருந்தவன், காபி ரெடியா? என்றான் .
"நான் என்ன சொல்றேன்...நீங்க என்ன சொல்றீங்க ...ப்ரீத்திகிட்ட பேசினீங்களா இல்லையா?"
"லுக் மரகதம்......ப்ரீத்தி நம்ம பொண்ணு.....நம்பித்தான் ஆகணும்......"
"அவ நம்ப பொண்ணுதான்.....ஆனா, அவ வயசுன்னு ...."
"ஸ்டாப்.....வயசு பொண்ணு....வயத்துல நெருப்பு கட்டிட்டு இருக்கேன்...அதுதானே....நான்சென்ஸ் " என்றான்....
ஹாய் டாட் என்று வந்த மகளை பார்ப்பதற்கு அம்மாவின் ஜாடை. ஒரு நிமிடம் கண்களில் ஏதோ ஒரு துரோகத்தை தேடினான். ஹ்ம்ம்.....சான்ஸே இல்லை....
அப்பா....கழுத்தை கட்டிக்கொண்டாள்.....
முதல்ல மேல இருந்து கை எடு என்றாள் மரகதம்.....
நாங்க எல்லாம், அப்பா எதிர்ல கூட நின்னது இல்லை....
அவ ஓல்ட் ஏஜ்...நீ சொல்லு டார்லிங்....என்று கன்னத்தில் தட்டினான்.......
அப்பா....ஸ்கூல்ல ஒரு பிக்னிக் ஏற்பாடு பண்ணியிருக்காங்க....கொடைக்கானல்......போகணும்....
அதெல்லாம் ஒன்னும் வேணாம்......வீட்டில இருந்து சமையல் கத்துக்க...என்றாள் மரகதம்.
வாட் இஸ் திஸ்? அம்மா என்ன ரொம்ப கண்ட்ரோல் பண்றப்பா.....என்னுடைய ம்யூசிக் க்ளாஸ் கட் ....யோகா...கட்....வெளிய போகக்கூடாது.....சிரிக்கக்கூடாது...பிரண்ட்ஸ் இருக்க கூடாது....குறிப்பா பாய்ஸ்....கம் ஆன்....நம்ம இருக்கறது பதினெட்டாம் நூற்றாண்டான்னு சந்தேகம் வருது...
பெரியவங்க சொன்னா அதுல ஆயிரத்தெட்டு அர்த்தம் இருக்கும்....அதெல்லாம் உங்க நன்மைக்குத்தான்.....என்றாள் மரகதம்......
அம்மா.....நீ எல்லாத்தையும் எமோஷனலா பார்க்கிற அதுதான் பிரச்சனை ....
பிரச்சனை இதுதான்.
மாதவன் ஒரு சிவில் என்ஜினீயர். பெரிய பெரிய அபார்ட்மெண்ட்கள் அவன் கைவண்ணத்தில் உருவானவை.. சென்னை, பாம்பே இப்படி. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இடம் மாற்றம் நிச்சயம். மாதவனின் ஒரே பெண் ப்ரீத்தி. மூன்றாவது வரை அஸ்ஸாமிலும், கொஞ்சம் ஜார்கண்டிலும், டெல்லியிலும் படித்து விட்டு, பிளஸ் டூ விற்க்காக திருச்சி வந்திருப்பவள்.
இயல்பிலேயே தைரியமான பெண் ப்ரீத்தி. மாதவன் தன் பெண்ணை, சராசரிக்கும் அதிகமாக சுதந்திரம் கொடுத்தே வளர்த்தான். தனியாக ஷாப்பிங் செய்வது. பைக் ஓட்டுவது. கராத்தே இப்படி.
இதனை மரகதத்தால் பல நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக பாய் பிரண்ட்ஸ் இருப்பது அவள் மனதில் உறுத்தியது.
"எங்க காலத்தில பசங்க கூட நாங்க பேசவே மாட்டோம்....இப்ப என்னடான்னா, ஒவ்வொருத்தன் தைரியமா வீட்டுக்கே வரான்.....இவரும் அத பத்தி கண்டுக்கறதே இல்லை....இதெல்லாம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிஞ்சுடணும்......பேப்பரை பாருங்க....எத்தனை காதல் தற்கொலைங்க....ரேப்....கேக்கவே அசிங்கமா இருக்கு....
ஏண்டி...அந்த மாதிரி நினைப்பு இருந்தா இப்பவே அத அழிச்சுடு... உன்னை என் அண்ணன் பையனுக்குத்தான் கொடுக்க போறேன்.......
யாரு விசுவா? சிரிப்பா இருக்குமா......அவனுக்கு தெரிஞ்சா ரொம்ப காமெடியா இருக்கும்பாம்......எங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி எண்ணம் கிடையாது....நீங்களே அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்கன்னா நாங்க என்ன செய்ய முடியும்.....அது உங்க தப்பு....
கேட்டீங்களா.....சின்ன பொண்ணு, சின்ன பொண்ணும்பீங்களே....எவ்வளவு தெளிவா பேசறா? இவளுக்கு போயி பரிஞ்சு வறீங்களே.....ஒரு நாள் இல்ல, ஒரு நாள் யார் கூடயாவது மாலையும் கழுத்துமா வந்து நிப்பா....இந்தாடி, அப்படி ஒரு எண்ணம் இருந்தா இப்பயே அழிச்சுடு...........என்றாள் மரகதம்...
ப்ரீத்தி ஸ்கூலிற்கு சென்றதும் சதியாக மாதவனை உள் ரூமிற்குள் அழைத்து சென்றாள்.
இத பாருங்க....பரண் மேல் ஏறி, உள்ளே இருந்து அந்த க்ரீட்டிங்ஸ் கார்டை எடுத்து காண்பித்தாள்.
வித் லவ் ஆல்வேஸ் பரணி.....நிறைய ஆர்ட்ஸ் சிம்பல்கள்.
பன்னிரெண்டாவது படிக்கிற பொண்ணுக்கு வர லெட்டரா இது.
இத பாருங்க......கம்ப்யூட்டரில் பேஸ் புக். திறந்தாள்.
ப்ரீத்தியின் பாஸ்வார்ட் இவளுக்கு எப்படி தெரிந்தது?
நிறைய நண்பர்கள். பெரும்பாலும் ஆண்கள்.
நீங்க உங்க பொண்ண அளவுக்கு அதிகமா நம்பறீங்க.....என்றாள்....
 நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு....இவ ஏதாவது தப்பான வழிக்கு போயிடுவாளோன்னு பயமா இருக்குங்க.....என்று அழ ஆரம்பித்தாள்.
சரி, சரி...அழாதே...நான் பார்க்கறேன்....
கண்ணை துடைத்து கொண்டு, "நான் சொன்ன மாதிரி சொல்லாதீங்க" என்றாள்.
ப்ரீத்தியை சாயந்திரம் சினிமா கூப்பிட்டதற்கு மறுத்து விட்டாள். நிறைய ஹோம் ஒர்க் இருக்குப்பா....ஜெகன் வரேன்னு சொல்லியிருக்கான்.....குரூப் ஸ்டடி பண்ணனும்....
சரி....மொட்டை மாடிக்கு வா...கொஞ்ச நேரம் பேசலாம்....
சம்திங் பிஷி...அம்மா என்னை பத்தி ஏதோ போட்டு கொடுத்துட்டாளா
-அதெல்லாம் ஒன்னும் இல்லை.
மாடியில் ஏகாந்தம். தூரத்தில் ஸ்ரீரங்கம் கோபுரம் தெரிந்தது.
மரகதம் தள்ளி நின்றாள். வேப்ப மரக்காற்று தழுவி சென்றது.
நேரடியா விஷயத்துக்கு வரேன் ப்ரீத்தி....யு நோ மீ....இது வரைக்கும் நான் எந்த விஷயத்துலயும் உன்னுடைய விருப்பத்துக்கு மாறா நடந்தது இல்ல...பட் யு நோ...இந்த வயசு....கொஞ்சம் சிக்கலான வயசு....உனக்கு பாய் பிரண்ட் இருக்கறத பத்தி நான் ஒன்னும் சொல்லல. ஆனா, அது பிரண்ட்தானா அப்படிங்கற சந்தேகமும் கூட வரத தடுக்க முடியல...அந்த க்ரீட்டிங்ஸ் அம்மா காண்பிச்சா....யாரு பரணிங்கறத பத்தி எனக்கு கவலை இல்ல...பட், இது முடிவெடுக்கும் வயசு இல்ல....அது மட்டும் இல்லாம, உன் அகடெமிக் பேரஃஆர்மன்சும் குறைஞ்சுகிட்டு வருது....சோ, இன் டோட்டல், யு ஷுட் நாட் கெட் டைவர்ட்டட்.......
சொல்லி முடிச்சிடீங்களா அப்பா? நான் பேசப்போறது எனக்கு மட்டும் இல்லப்பா...ஒட்டு மொத்த பெண்களுக்காகத்தான். என்ன சொன்னீங்க.....அந்த க்ரீட்டிங்ஸ் கார்ட்...வெல்....அது எனக்கு வந்தது......நான் அந்த பையனுக்கு ஏதாவது கார்ட் திருப்பி கொடுத்தேன்னு தெரியுமா? இப்ப வீட்டில சொல்லிருந்தா, என்ன ஆயிருக்கும்...அம்மா அந்த பையன் யாரு, என்னனு துருவி, எடுத்திருப்பா.....அதனால, ஸ்பாயில் ஆறது அந்த பையன் மட்டும் இல்ல...என் லைஃபும் தான்....இவ என்ன பண்ணினாளோன்னு ஊர் பேசும்...இது போபால் இல்ல...ஸ்ரீரங்கம்....இங்க இந்த ஊருக்கு தகுந்த மாதிரி தான் வாழ்ந்தாகணும்...எனக்கு இங்க ஏன் இத்தனை பாய் பிரண்ட்ஸ் தெரியுமா? ஒரு பாதுகாப்புக்குத்தான். ஒரு பையன பார்த்தவுடனே அவன் நல்லவனா, கெட்டவனாங்கற ஊகிக்கற சக்தியை கடவுள் பெண்களுக்கு கொடுத்துருக்காரு...பெரும்பாலான பசங்க, பிரண்டுன்னு சொன்னாலும், சந்தர்ப்பம் கிடைச்சா எங்களை பயன்படுத்தத்தான் பார்க்குறாங்க...கொஞ்சம் சிரிச்சா, காதல்ன்னு நினைச்சுக்கறாங்க.
எங்க பசங்க இல்லை சொல்லுங்க? யோகா க்ளாஸ் ஜாயின் பண்ணினேன்.....அங்க பத்து பேரு, உங்க பேரு என்ன...ஊரு என்ன...உங்க நம்பர் சொல்லுங்க....அடுத்த நாளே, காதல் வசனங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறாங்க....கம்ப்யூட்டர் க்ளாஸ் போனாலும் இதே தொல்லைதான். எங்க போனாலும் இவங்க கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது....எத்தனை இடத்துக்கு நீங்க பாடிகார்டா வருவீங்க....மொதல்ல, இவங்க கிட்டேயிருந்து எங்களை காப்பாத்திக்கணும்னா, அது பலத்தால முடியாது. டெல்லில ஒரு பெண்ணை ஓடுற வண்டில கற்பழிச்சாங்களே, அந்த ரோடில் போன ஜனங்க என்ன பண்ணிட்டிருந்தாங்க....பாம்பேல ஒரு பொண்ண, முப்பது பேர் நடு ரோடில் கற்பழிச்சாங்களே, அத யார் தடுத்தா? ஆண்களை உடல் பலத்தாலே பெண்களாலே எதிர்க்க முடியாது. ஆனா, மனோ பலத்தாலே  முடியும். நாங்க ஒரு ஆண் கிட்ட பிரண்டா பழகினா, அவனை சுத்தி இருக்கிற அத்தனை பெரும் ஒதுங்கிடுறாங்க.....அவன் கடைசி முடிக்கும் நாங்க பிரண்டா நினைக்கிறோமா, காதலிக்கிறோமான்னு தெரியாம குழம்புவான்.....அந்த ஒருத்தனை வச்சுதான் மத்தவங்கள எங்களால எதிர்க்க முடியும்...என்னிக்கு வேணா, அறுந்துடுங்கற பயத்துலதான் அந்த பையனும் கண்ணியமா நடந்துக்கறான் .....ஒரு முறை.....ஒரே முறை, பெண்கள் கவுந்துட்டாங்கன்னா, அப்புறம் அவங்கள மீட்கறது கஷ்டம்.....
இன்னிக்கு இருக்கற எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு பாய் பிரண்ட் இருக்கறதா உலகமே தப்பா பேசுது....ஆனா, அதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய காரணம் இருக்குங்கறது யாருக்காவது தெரியுமா?
ஒரு இடத்தில பத்து பசங்க இருந்தாங்கன்னா, அதுல ஒருத்தன் கூட க்ளோசா இருந்தா, ஆட்டோமாட்டிக்கா மீதி இருக்கறவன் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.....அவனுங்களே ஏதேதோ நினச்சுக்குவாங்க...
எங்க திறமை எல்லாம், அந்த பத்து பேர்ல யாரு உபத்திரவம் இல்லாதவன்னு தேர்தெடுக்கருதுலதான் இருக்கு. மொக்கையா எல்லா இடத்திலேயும் ஒருத்தன் இருப்பான்.
இது உங்க காலம் இல்லப்பா....ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு....என்றாள்.....
மரகதம் கொஞ்ச நேரம் கழித்து, "சரி கீழே வா....ஜெகன் வர நேரம் ஆச்சு..." என்றாள்.

No comments:

Post a Comment