Tuesday, August 2, 2016

குரு பெயர்ச்சி

வருடா வருடம் நடக்கும் அதே பரபரப்பும், ஆர்வமும் இந்த வருடமும் இருந்தது. அருகிலிருந்த பிள்ளையார் கோவிலில் நோட்டீஸ் விநியோகம் செய்தார்கள். பத்திரிகைகளில், ஒவ்வொரு ராசிக்கும் மார்க் போட்டு இருந்தார்கள். என் ராசிக்கு பார்டர் மார்க்கில் போனால் போகிறது என்று பாஸ் மார்க். டி வியில் பலன்களை விலாவரியாக சொன்னார்கள். ஒரு வழியாக, அடுத்த பெயர்ச்சிக்கு நான் தயாராகி விட்டேன். இதில் நிறைய விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி, பெயர்ச்சி அன்றுதான் கோயிலில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று இல்லை. ஒரு வருடத்தில், என்று வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

இருப்பினும், ஏதாவது ஒரு நல்ல மாற்றத்துக்கு நம்மை தயார்படுத்த, மனதை திடப்படுத்த இவையெல்லாம் தேவைதான்.

மாமா உடல் நிலை சரி இல்லாமல் இருந்த  பொழுது, பேர்லேண்ட்ஸ் அருகே, சமயபுரம் மாரியம்மன் அருள் வந்த ஒரு பெண்மணியிடம் என்னை அழைத்து சென்றார்கள். நிறைய கூட்டம். சாயந்திரம் ஆறு மணிக்கு மட்டும் வரும் அருள் வருமாம். நிறைய குங்குமத்தோடு, பயங்கர தோற்றத்தோடு இருந்தார்.
என்ன பிரச்னை என்றார். சொன்னோம். ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்து, மாமா தலைமாட்டில் வையுங்கள். நாளை சரியாகும் என்றார். மூன்றாவது நாளில், மாமா இறந்தார்.

பரிகாரங்கள் இறைவனுக்குத்தானா என்கிற அடிப்படை சந்தேகம் எழுந்தது. பிற்பாடு மஹரிஷியின் பன்ச் வரிகள் என்னைக் கவர்ந்தன.

இறைவனுக்கு வணக்கம் தேவையா? இணக்கம்தான் தேவை.
இறைவனுக்கு உடலும் இல்லை. குடலும் இல்லை.
இறைவன் இல்லை. இறைநிலை உண்டு.

பரிகாரங்கள் என்பவையே நம் மனத்திற்கு ஒரு வலிமையை கொடுக்கும் சாதனம். இந்த பரிகாரம் செய்தால், உங்களுக்கு இந்த பிரச்சனை தீர்வாகும் என்று ஒருவர் சொன்னால், அதன் அடித்தளத்தில், நம் மனத்தில், அந்த பிரச்சனையை ஏதோ ஒரு வழியில் தீர்க்க முடியும் என்கிற பாசிட்டிவ் எண்ணத்தை உண்டு பண்ணுகிறது. மற்றபடி பரிகாரங்கள், இறைவனுக்கு அல்ல. நமக்குத்தான்.

No comments:

Post a Comment