Wednesday, July 6, 2016

மனைவி - சிறுகதை

காலையில் எழுந்ததிலிருந்தே பரபரப்பு. டென்ஷன்.
"நாற்பது வயது ஆகி விட்டது, நிறைய ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க...பிபி நூத்திஐம்பதை தொடுது ...ஜாக்கிரதை.."
போன முறை டாக்டரிடம் காண்பித்ததில், அவர் சொன்ன அறிவுரை இது. ஆனால், நடைமுறையில் டென்சன் ஆகாமல், ஒரு காரியமும் இல்லை.
இப்போது பாருங்கள்....முக்கியமான ரசீதை காணோம்.ராகவன் வீடு முழுவதும் தேடினான்.
அலமாரியில், டி வி பெட்டியின் மேல், பிரிட்ஜ் கவர் மடிப்பில்....
ம்ஹிம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அநேகமாய் இது மாதம் ஒரு முறை நடக்கும் கூத்து.
என்ன தேடறீங்க? பூர்ணிமா கேட்டாள்.. அவள்தான் இல்லத்து அரசி..எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணுபவள்.
உன் தலை...என்று சொல்லநினைத்து, நகை சீட்டு...நாளைக்குள்ள எடுக்கணும்
எப்பவுமே கொட்டுவாயிலதான் தேடுவீங்களா?
போன வாரம் சண்டே மத்தியானம் ஹாயா தூங்கிட்டுதானே இருந்தீங்க...அப்ப தேடலாம் இல்ல?
அவள் சொல்வது உண்மைதான். சண்டே ஆனால், ராகவன் முழு நாளும் அசைய மாட்டான். காலையில் லேட்டாய் எழுந்து, குழந்தைகளை கொஞ்சி, பெட் காபி குடித்து, வெட்டியாய் ஏதோ அபத்த படம் பார்த்து.....
வார இறுதி என்பது சொர்க்கம். அதில், மீண்டும் நிறைய சட்ட, திட்டம் கொண்டு வருவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
உன்னால் தேட முடிஞ்சா தேடு...இல்ல, விட்டுடு..நான் சண்டே தூங்கினா என்ன? தூங்கலேனா என்ன?
உங்க பையில தேடினீங்களா?
பூர்ணி.....முதல்ல அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றத நிறுத்து. நூறு தடவை பார்த்தாச்சு...நகை சீட்டு நம்மோடதா இருந்தா கூட பரவாயில்லை. பிரசாத்தோடது...
உங்க பிரசாத்துக்கும் வேலை இல்லை...உங்களுக்கும் வேலை இல்லை....பிரெண்டுன்னா இருக்க வேண்டியதுதான்.....ஆவூன்னா, அவங்க வீட்டு நகையை உங்க பேர்ல அடமானம் வைக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல....
பூர்ணி ...திஸ் இஸ் தி லிமிட்....டேமிட், நான் பேங்க்ல வேலை பார்க்குறேன்... என் பேர்ல நகையை வச்சு எடுக்கிறது ஈஸி....இந்த சின்ன உதவி கூட செய்யலேன்னா, நம்ம எல்லாம் மனுஷங்களே இல்லை...
அதை நீங்க மட்டும்தான் நினைக்கிறீங்க....மற்றவங்க எல்லாம் உங்களை மாதிரி இல்லையே? அன்னிக்கு, டூ வீலர்ல நைட் ட்ராப் பண்ண சொன்னபொழுது, உங்க ப்ரண்ட் எப்படி கழட்டி உட்டாரு....
அன்றைக்கு ராகவனும், பிரசாத்தும் குடித்திருந்தார்கள். இது வரை பூர்ணிமாவிற்கு அது தெரியாது. இதை எப்படி வெளியே சொல்ல முடியும். இதை சொன்னால், இன்னும் பிரச்சனை திசை மாறும்.
உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது.
என்னடி பண்ணே?
பூர்ணிமா பதறிக்கொண்டே உள்ளே சென்றாள்.
குழந்தையை அடிக்கும் சத்தமும், அழுகும் சத்தமும் கேட்டது.
என்ன ஆச்சு?
கீழே நெய் முழுவதும் கொட்டிக் கிடந்தது.
சனியனே! நேத்துதான் ஒரு கிலோ வாங்கினேன். என்ன அவசரம்? நான்தான் வரேன்னு சொன்னேன் இல்லை....
பூர்ணிமா...குழந்தையை சனியன்னு சொல்லாதே...
பண்றவளுக்கு உரிமை இல்லையா? என்னால இவளை பார்த்துக்க முடியாது...நான் இப்பவே ஊருக்கு கிளம்பறேன் ..   
குழந்தையிடம் கேட்டான்.
அம்மா அடிச்சாங்களா
ஹ்ம்ம்...என்றது....
அடிச்சாங்களா, இல்லையா?
ஆமாம் என்றது போல் தலையாட்டியது.....
எத்தனை தடவை சொல்லி இருப்பேன்....குழந்தை மேல கை வைக்காதேன்னு
ஏண்டி நான் அடிச்சேனா?
குழந்தை மலங்க, மலங்க விழித்தது.
பூர்ணி...யூ ஆர் பிகமிங் க்ருயல்...வர வர உன் முன்கோபம் அதிகமாகுது....நெய் விலை இருநூறு ரூபாய் இருக்குமா?
என்ன நடந்ததுன்னு தெரியாம கத்தாதீங்க
உன் கூடவே பேசவே விரும்பல..உன் சாப்பாடும், மண்ணும் வேணாம்....
ஆபிஸ் வந்தாலும் பதட்டம் குறையவில்லை...சே...இந்த கலவரத்தில் ரசீதை தேடாமல் வந்து விட்டோமே?
இன்றைக்கு கேஷ் கவுண்டரில் ஆள் இல்லை என்று உட்கார வைத்தார்கள். நிறைய கூட்டம்..எல்லாருக்கும் அவசரம்...பெரிய கியூவில் பொறுமையின்றி காத்திருந்தார்கள்..
கவர்ன்மெண்ட் பேங்க்கே இப்படித்தான்...இதே பிரைவேட் பேங்க்கா இருந்தா, ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடும்
யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மதியம் மூணு மணிக்குத்தான், அந்த அதிர்ச்சி காத்திருந்தது. பத்தாயிரம் டேலி ஆகவில்லை.
கூட இருந்தவர்கள் அனுதாபமாய் பார்த்தார்கள்.
பொறுமையா பாருங்க....
இப்படித்தான் எடப்பாடி ப்ராஞ்சுல ஒரு முறை....
கதை பேசினார்கள்.
மாலையில் கையெழுத்து போட்டு கொடுத்தான். இந்த மாச சம்பளத்தில், பத்தாயிரம் அவுட்.....பணத்தை விட, தன் மேலே நொந்து கொண்டான்...எப்படி மிஸ் பண்ணினேன்?
வீட்டிற்கு திரும்பும் பொழுது, இரவு ஏழு மணி. குழந்தை டிங் டாங் பெல் சொல்லிக் கொண்டிருந்தது. பூர்ணிமாவைக் காணோம்.
அம்மா எங்கேடா?
உள்ளே கை காண்பித்தது.
சமையல் ரூமில் பூர்ணிமா சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தாள். குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.
காலையில் இருநூறு ரூபாய் நெய்யிற்கே அந்த கத்து கத்தினாள்...
பூர்ணி.....
வாங்க....மெலிதான குரலில் அழைத்தாள்....
இன்னும் கோபம் தணியலையா?
மௌனம்..
சரி..எவ்வளவு நேரத்துக்கு இப்படியே கோச்சிக்கிட்டு இருப்பே?
பின்னால் நெருங்கி அணைத்தான்...
திட்டும்போது திட்டிடறது....அப்புறம் வந்து கொஞ்சறது....சே...இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்...
சரி விடு....காலையிலே அறிவு இல்லாம இருந்தேன்...போதுமா?
சரி, ரசீது கிடைச்சுதா?
எங்கே? உன் கூட சண்டை போட்டுட்டு, ஆபிஸ் போயிட்டேன் இல்ல? தேடவே இல்லை
பயப்படாதீங்க....கிடைச்சிட்டது...
எங்கே இருந்தது....
உங்க பேக்ல....
பேக்லாயா? நான் பார்க்கும்போது இல்லையே?
ஒழுங்கா பொறுமையா தேடினாதானே? உங்களுக்குத்தான் கண் முன்னாடி இருந்தாலே தெரியாதே?
ஆபிசில் பணம் இழந்த கதையை சொன்ன நினைத்தான். நல்ல மூடில் இருக்கும் பொழுது, கெடுத்துக் கொள்ளவிரும்பவில்லை.
இரவில், குழந்தையை தூங்க பண்ணியதும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்சனை
என்ன
முழுக் கதையையும் ஒரு வரி விடாமல், சொன்னான்.
"அதனால, நாமதான் பத்தாயிரம் கட்டணும்" என்றான்.
"பரவாயில்லை விடுங்க" என்றாள்.

No comments:

Post a Comment