Saturday, July 2, 2016

தீன் இலாஹி

சென்னை விடிந்து கொண்டிருந்தது. தண்ணீர் லாரிகள் பூம் என்று ஹாரன் அடித்தன. நைட்டியோடு பெண்கள் பால் பாக்கெட் வாங்கினார்கள்.

சென்னைக்கு இது  இன்னொரு   நாள் என்றாலும், கௌரி நம்பிக்கையோடு காலிங் பெல்லில் கை வைத்தாள்.

உள்ளே சுப்ரபாதம் கேட்டது.

இருடா...இருடா....அழாதே

கௌரி கையில் இருந்த, வின்சென்ட் சிரிக்கும் பொழுது, தாத்தாவின் சாயல் தெரிந்தது.

அரை நிமிடத்திற்குள் திறக்கப்பட்ட கதவிற்கு பின், கிட்டத்தட்ட சோமயாஜுலு உயரத்திற்கு இருந்த நீலகண்ட கனபாடிகள் தெரிந்தார். உச்சிக் குடுமி. பட்டை, பட்டையாய் விபூதி. பஞ்சகச்சம். அங்கவஸ்திரம்.

"நீயா?"
உள்ளே நுழைய இருந்த கௌரியை தடுத்தார்.
"எங்கே உள்ள வர? தயவு செய்து போய்டுமா.....மாமிசம் திங்கறவாயெல்லாம் இந்த ஆத்துக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டாம்.....உள்ளே ஸ்படிக லிங்கம் வைச்சிருக்கேன்...நீ ஆத்துக்குள்ள வரக்கூடாது...."
பார்வதியின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.
"எத்தனை நாளைக்கு நீங்க இப்படி வீறாப்பா இருக்க முடியும்? அந்த குழந்தையின் முகத்தை பாருங்கோ. அப்படியே உங்க சாயல். ஏதோ அவ தப்பு செஞ்சுட்டா...பெரியவா நம்மதானே, அனுசரிக்கணும்"
"தன் மந்த்ரம் ப்ராஹ்மணேதேனா மந்த்ரா தேனந்து தேவதா, ப்ராமனோ மனோ தேவதா....அப்படின்னா, எல்லா மந்திரங்களும் பிராமணனுக்கு கட்டுப்பட்டது. அப்படிப்பட்ட மந்திரங்களுக்குள் கடவுள் வாசம் பண்றார். உஞ்சவிருத்தி எடுத்துண்டு, ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, விரதம் இருக்கறவாளே, கடவுளுக்கு சமம்னு வேதம் சொல்றது....இங்க என்னடான்னா, நம்ம மதத்தை விட்டு, வேற ஏதோ சாய்போடையும், கிறிஸ்துவனோடையும் உன் பெண் கல்யாணம் பண்ணிண்டு வந்து நின்னா, நான் வழிஞ்சிண்டு ஆசீர்வாதம் பண்ணனுமா?
"நடந்தது நடந்து போச்சு...இனிமே நடக்கறது நல்ல படியா நடக்கட்டுமே ....."
"இனிமே நடக்க வேண்டியது, ஒண்ணே ஒண்ணுதான். என் சாவு. அதற்கும் ஏற்பாடு பண்ணி இருக்கேன். நான் செத்து போனா, இவா யாரும் வர வேண்டாம். பாடசாலையிலிருந்து பையன் வந்து கோவிந்தா கொள்ளி போடுவான் "
நடந்தது இதுதான்.
நீலகண்ட கனபாடிகள் ஒரு வேதவித்து. மாம்பலத்தில் மட்டும் அல்ல. சென்னை முழுவதும் பிரசித்தமானவர். பல நூறு கல்யாணங்களும், கிரஹபிரேவசங்களும், உபநயனம்  நடத்திக் கொடுத்தவர். பலர் வீட்டிற்கு ஆத்து சாஸ்திரி. இந்த நிலைமையில், அவருடைய ஒரே பெண் வேற்று மதத்தில் கல்யாணம் செய்து கொண்டால், நன்றாக இருக்குமோ?
ஆனால், நடந்தது எல்லாம் கொஞ்சம் ரசக்குறைவுதான்.
வீட்டின் எதிர்ப்பை மீறித்தான், கௌரி பீட்டரை  சாந்தோம் சர்ச்சில் வைத்து கல்யாணம் செய்து கொண்டாள் . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். கனபாடிகள் போகவில்லை.
யாரை கேட்டு காதல் வரும்? வந்து விட்டது. வீட்டில் அனுமதி கேட்டார்கள். கிடைக்கவில்லை. அவர்களே வாழ்க்கையை  தீர்மானித்துக் கொண்டார்கள்.
கனபாடிகளுக்கு மிகவும் அவமானமாய் போய் விட்டது. போகும் இடங்களிலெல்லாம், இதை பற்றி கேட்டார்கள்.
அயோத்யா மண்டபத்தில் சென்ற வருடம் வரை, அவர்தான் ஆவணி அவிட்டத்திற்கு முதன்மையானவர். இந்த சம்பவத்திற்கு பிறகு, கமிட்டியில் முடிவு செய்து, வேறு இன்னொருவரை கொண்டு வந்து விட்டார்கள். ஏதோ தெரிந்தவர்கள் வீட்டில், இன்னும் அவரை அழைத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான்.
"இங்கே பாரு கௌரி......நீ எப்ப இந்த ஆத்த விட்டு, வெளியே கால் எடுத்து வைச்சியோ, அப்பவே என் பொண்ணு இல்லன்னு ஆயிடுத்து.....இன்னும் மேற்கொண்டு என்ன கஷ்டப்படுத்தாதே"
கௌரியிடம் கை கூப்பினார். கௌரி எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்
கௌரி கிட்டத்தட்ட வின்சென்ட் பிறந்ததிலிருந்து, தினமும் இங்கே வருகிறாள். ஏதோ ஒரு நாள், அப்பா மனம் மாறி, நம்மை ஏற்றுக் கொள்வார் என்கிற நம்பிக்கையில்தான் இன்னும் வந்து கொண்டிருக்கிறாள்.
வாசலில் பீட்டரின் கார் ஹாரன் சத்தம் கேட்டது. கீழே வரும் பொழுது, பீட்டர் இறங்கி காத்திருந்தான்.
 "என்ன இன்னிக்கும் தோல்விதானா? சரி வா"
பீட்டர் சிரித்துக் கொண்டே, கௌரியை காரில் ஏற்றுக் கொண்டு, வீட்டை நோக்கி செலுத்தினான்.
"இருந்தாலும், உங்களுக்கு அத்தனை பிடிவாதம் ஆகாதுன்னா...."
பார்வதியின் குரல் மிக சன்னமாக கேட்டதை பொருட்படுத்தாமல், சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டு, வடபழனியை நோக்கி வண்டியை திருப்பினார் கனபாடிகள். .
பூஜை முடிந்ததும், ஈஸ்வரா என்று தூணில் சாய்ந்த பொழுது, செல் போனில் எடுத்து பார்த்தார். பார்வதியிடமிருந்து பதினெட்டு மிஸ்டு கால்கள்.
பொதுவாக பூஜை வேளையில் செல் போனை சைலண்ட்டில் வைத்து இருப்பார். தொழில் பக்தி. பதினெட்டு கால் என்றால்? ஏதோ விபரீதமாகப் பட்டது.
கால் ரெஜிஸ்டரிலிருந்த பார்வதியின் நம்பரை அழைக்கும்போது, எதிர் முனையில் அழுகை சத்தம் மட்டும் கேட்டது..
எங்கென்னா போயிட்டேள்? உடனே வடபழனி விஜயாவுக்கு வாங்கோண்ணா.....
விஜயா ஆஸ்பத்திரியில் அத்தனை கூட்டம் இல்லை. ரிசப்ஷனில் எமெர்ஜென்ஸ் வார்டுக்கு போக சொன்னார்கள்.
எமெர்ஜென்ஸ் வார்டு வாசலில் பார்வதி அழுது கொண்டிருப்பது தெரிந்தது.
என்னடி ஆச்சு
அண்ணா....நீங்க பூஜைக்கு போன உடனே, கௌரி ஆத்துக்கு போய், நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டிட்டு....மாப்பிள்ளைதான் உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து, எனக்கு தகவல் கொடுத்தார்.....
இன்னும் அபாய கட்டத்தை தாண்டலே ....
முடிக்க முடியாமல் அழும் மனைவியை பார்த்தார்.
பீட்டர் தன் கையில் ஜூனியர் பீட்டருடன் வராண்டா சேரில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அவா அப்பா, அம்மாவுக்கு?
தகவல் போயிருக்கு....அவாள்ளாம் திருநெல்வேலியிலிருந்து பொறப்டாச்சு .நம்மளுடைய பிடிவாதம் எங்கே கொண்டு வந்து விட்டுருக்கு பாருங்கோ...
கனபாடிகள் வார்த்தை வராமல் தடுமாறினார்.
மாமி.....
பீட்டரின் குரல் கேட்டு திரும்பினார்.
"காலையில இருந்து, குழந்தை பால் குடிக்கல....பசில அழுகிறான்....கொஞ்சம் பார்த்துக்குங்க....நான் வெளிய போய், பால் வாங்கிட்டு வந்துடறேன்...."
"இங்க குடுங்கோ...."
வின்சென்ட்டை வாரி அணைத்துக் கொண்டாள் பார்வதி. குழந்தை பசிக்கு பெருங்குரலில் அழுக தொடங்கியது.
"இருடா, இருடா......வாசலுக்கு கொஞ்சம் எடுத்துண்டு போகலாம் "
கனபாடிகள் குழந்தையின் முகத்தை பார்த்து கலங்கினார். அப்படியே என் கண்கள். என் தாடை.
"இப்ப பால் வாங்கிண்டு வந்துடறேன் "
பீட்டரிடம் ஒரு வார்த்தை பேசத் தோன்றவில்லை.
நேரம் செல்ல செல்ல அழுகை அதிகமாகிக் கொண்டே போனது. கனபாடிகள் நிலை கொள்ளாமல் தவித்தார்.
"இருடா கோந்தே...அப்பா இப்ப வந்திடுவா.....அழுகாதே...."
எங்கே அவர்? வாசல் வரை ஒரு முறை பார்த்து விட்டு வந்தார். ஆளைக் காணோம்.
குழந்தை அழுதழுது ஓய்ந்து போனது. மயக்கம் போல இருந்தது.
"அய்யயோ...இப்ப நான் இப்ப என்ன செய்வேன்? குழந்தைக்கு பால் வாங்க போன ஆள காணோமே..."
பார்வதி கதறினாள்.
"குளந்தை ஏன் அலுகுது?பசியா?"
வார்டில் கிடந்த பாய் அம்மா கேட்டாள். உடம்பு முழுவதும் பர்தா மறைத்திருந்தது.
"ஆமாம்மா .....குழந்தையோட அம்மாவிற்கு உடம்பு சரியில்லை......பால் வாங்க போன அப்பாவை காணோம்...பசிக்கு அழுது, கொஞ்சம் மயக்கம் ஆயிடுச்சி....பயமா இருக்கு "
"இங்க கொஞ்சம் கொடு "
அப்போது முற்றிலும் எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து முடிந்தது. குழந்தையை வாங்கி, சுவற்று பக்கம் திரும்பி பால் கொடுக்க ஆரம்பித்தாள்.
பாலுக்கு காத்திருந்த வின்சென்ட், தாய் மடி கண்டதும் பசியாறினான். கனபாடிகள் செய்தவறியாது திகைத்தார்.
எங்கேயோ பிறந்து, வளர்ந்த , வேற மதத்தின் பால்தான் இப்போது தன் பேரனைக் காக்கிறதா? சாஸ்திரம், வேதம் எல்லாம் பொய்யா?  இப்போதைக்கு இவள்தான் அன்னலட்சுமி. தேவதை. காக்கும் கடவுள்.
பீட்டர் அவசர, அவசரமாய் ஓடி வருவது தெரிந்தது.
குழந்தை சமர்த்தாக பால் குடித்து, இப்போது பார்வதியின் கையில் தூங்கி கொண்டிருந்தது.
அம்மா....உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல....
பார்வதி அந்த முஸ்லிம் பெண்மணியை கை கூப்பிக் கொண்டிருந்தாள்.
இதுல என்னமா இருக்கு? எனக்கு ஆறு குளந்தைங்க...பசின்னு வந்திட்டா, எல்லா ஜாதியும், மதமும் ஒண்ணுதான்..இதுக்கெல்லாம் போய் இம்மாம் பெரிய வார்த்தை சொல்றயே?
டாக்டர் உங்களை கூப்பிடுறாங்க...
நர்ஸ் வந்து சொன்னதும், கனபாடிகளும் பீட்டரும் விரைந்தனர்.
இப்போதைக்கு அபாய கட்டத்தை தாண்டிட்டாங்க.....உங்க குடும்பத்தின் பாரம்பரியத்தை நினைச்சு, கேஸ் எதுவும் போடல..அவங்க மனசில என்ன குறை இருக்குங்கறத நினைச்சு, சரி பண்ணிடுங்க....இனிமே இப்படி நடந்தா எங்களால இல்ல, யாராலயும் காப்பாத்த முடியாது...
சாதாரண வார்டில் கௌரி மயக்கம் தெளிந்திருந்தாள்.
"ஏண்டி.....இப்படி பண்ணிட்டே....."
"அப்பா என்னை மன்னிச்சுடுங்க...நீங்கதான் என்னை ஏத்துக்கவே இல்லையே "
"இனிமே அப்படி பண்ணாதே....உடம்பு சரி ஆனதும், மாப்பிளையோடு ஒரு வெள்ளிக் கிழமை ஆத்துக்கு வா.....புடவை, வேஷ்டி வாங்கி வைக்கிறேன்"








No comments:

Post a Comment