Thursday, June 30, 2016

என் கால் பதித்த தடங்கள் - 3

டெல்லியில் மாமா வீட்டில் இருந்த பொழுது, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு சிறிய பொதுக்கூட்டமே வீட்டில் நடக்கும். தமிழ்நாட்டை விட்டு தூரம் நகர, நகர தமிழர்கள் மனம் மட்டும் இணைந்து கொண்டே வருவதை கண் கூடாக கண்டேன்.

பலர் வருவார்கள். நிறைய பேசுவார்கள். நிறைய விவாதிப்பார்கள். தோழர் ஆறுமுகம் என்பவர் வருவார். அக்கு வேறு, ஆணி வேறாக கம்யூனிசத்தை அலசுவார். பெர்முடா ட்ரையாங்கிள், எரிக் வான் டேனிகன், டைம் போன்றவைகள் காதில் விழும்.

பெங்காலி காரர் ஒருவர் வந்து, ஹிந்துஸ்தானிக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடுகளை பேசி அல்ல, பாடியே காண்பிப்பார்.

நான் அதற்கு முன் இளையராஜாவைத் தாண்டி போனதில்லை.

என் மனமும், அறிவும் திறந்தது அங்குதான்.

டெல்லியில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். மரபுக் கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் உள்ள வித்தியாசங்களை அலசுவார்கள்.

க்ரிஷி பவனில் இருந்து ஒரு கையெழுத்து பத்திரிகை மாதம் தோறும் வரும். அதில் என் மாமாவின் கவிதைகள் சில வந்ததை பார்த்திருக்கிறேன்.

எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற கல்லூரி இறுமாப்பு நிறைய குறைந்தது. நிறைய கேட்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் ஆதவன் போன்றவர்களின் படைப்புகள் கண்ணில் பட்டது.

நான் முழு மனதாய், படிக்க ஆரம்பித்தேன்.

இவ்வாறு ஒரு நாளில், பேச்சின் இடையில்தான் நாடி ஜோதிடம் பற்றி கேள்விப் பட்டேன்.

உன் கைவிரல் ரேகையை கொடுத்தால், உன் பெயர் மற்றும் விவரங்கள் சொல்லிவிடுவார்கள் என்றார்கள்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஒரு முறை என் கைவிரல் ரேகையை பார்த்துக் கொண்டேன். 


என் இரண்டாவது ஆன்மிக  இன்னிங்ஸ் தொடங்கியது.

No comments:

Post a Comment