Thursday, June 16, 2016

ஒரே ஒரு பொய் - சிறுகதை

உலகத்திலேயே மிக கடினமான வேலை பொய் சொல்வது என்றுதான் ராம்பிரசாத் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அதை விட கடினமானது அதை சதா நினைவில் வைத்துக் கொள்வதுதான் என்பது ராம்பிரசாத்தின் சமீபத்திய அனுபவம். இத்தனைக்கும் அவன் சொன்ன பொய் மிக மிக அற்பமானது. சொல்கிறேன்.

முதலில் ராம்பிரசாத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

ராம்பிரசாத் ஒரு எம் பி ஏ  பட்டதாரி. வேலை சென்னை வேளச்சேரியில் பேபி நகரில் பிரபலாமான இன்சாப்ட் நிறுவனத்தில் தலைமை கணக்காளன். அவன் உலகம் சுலபமானது. எண்களால் நிரம்பியது. வரவு, செலவு, பற்று. இதர செலவீனங்கள். வருடாந்தர டாக்ஸ் கட்டும் உலகம்.

அவன் பி காம் படித்து முடியும் போது, அப்பா ரிடையர் ஆகும் தருவாயில் இருந்தார். பெண் பார்க்கிறேன் என்கிற போது, எனக்கு என்னப்பா அவசியம்...வைதேகிதான் இருக்காளே? அதற்கப்புறம் பார்த்துக்கலாம்...என்றான். வைதேகி தங்கை.

எப்படியோ  இங்கு அலைந்து, அங்கு அலைந்து மாம்பலத்திலேயே வரன் அமைந்தது.

மாப்பிள்ளை நேவியில் இருக்கிறார். வருடத்துக்கு  ஒரு முறை லீவில் வந்து விட்டு, வைதேகியை அம்மா ஆக்கி விட்டு, மீண்டும் கடலுக்கு சென்று விடுவார். அங்கு எல்லாம் வைதேகி ராஜ்ஜியம்தான்.

அடுத்த வருடம் ராம்பிரசாத்திற்கு பெண் பார்க்கலாம் என்கிற போது, கார்டியாக் அரெஸ்டில் அப்பா தவறிவிட்டார்.

அம்மா அப்புறம் மெதுவாக வருஷாப்திகங்கள் முடிந்த பிறகு, ஜோசியரிடம் ஜாதகம் காண்பித்ததில் அடுத்த தைக்குள் திருமணம் நிச்சயம் ஆகி விடும் என்றார்.

இதற்குள் ராம்பிரசாத் சம்பள ஏணியில் கொஞ்ச,கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தான்.

இருபத்தி எட்டு வயது. அடுத்த வருடத்திற்குள் ஆகி விடும் என்று ராம் பிரசாத்தின் அம்மா ஒவ்வொரு கல்யாணத்திலும் ஜாதகம் பத்து காப்பி ஜெராக்ஸ் போட்டு வினியோகம் செய்து கொண்டிருந்தாள்.
உங்களுக்கு தெரிஞ்சு யாராவது பொண்ணு இருக்கா மாமி?
சுலோச்சனா பொண்ணு இருந்தாளே? அவ என்னமோ சாப்ட்வேர் மாப்பிளைதான் கேட்டா...உங்க பையன் சாப்ட்வேர்ல இருக்காரா?

சாப்டவேர்தான்...அதுல அக்கவுண்ட்ஸ் வேலை...

அது ஒத்துப்பாளான்னு தெரியலையே மாமி...அவ எவ்வளவோ சம்பாதிக்கிறாளாமே...ஒரு லட்சமோ, என்னமோ சொன்னா...உங்க

பையனுக்கு சம்பளம் எவ்வளவு

தெரியல மாமி....அறுபதினாயிரம் இருக்கும் மாமி...

பொண்ண விட கம்மியா இருந்தா அவாத்துல ஒத்துப்பாளா தெரியலயே

ஜாதகம் பொருந்தாத இடத்தில் சம்பளம் மற்ற விவரங்கள் பொருந்தி வந்தும், ஜாதகம் பொருந்திய இடத்தில் சம்பளம் பொருந்தாமல் போனது.

இப்போது மேட்ரிமோனியலில் பணம் கட்டி விளம்பரம் கொடுத்தார்கள். எல்லா பெண்களும் சகட்டு மேனிக்கு சாப்ட்வேர் மாப்பிளைக்கு தவம் கிடந்தார்கள்.


பெண் வீட்டில் பிடி கொடுக்காமல் பேசினார்கள்.

ஜாதகமா? அனுப்பியிருக்கேளா? இருங்கோ மாமி....நிறைய வரது....நாங்க சாப்ட்வேர்லதான் பார்க்கிறோம்...
போனை பட்டென்று மரியாதை இன்றி வைத்தார்கள். ஒரு மாமி, எல்லாம் சரி....நீங்க எம் பி ஏ ன்னு போட்டு இருக்கேளே...அது ரெகுலரா அல்லது கரெஸ்பாண்ட்னஸா என்றாள் ....

ராம்பிரசாத் கோபத்தில், மாமி நீங்க மாப்பிள்ளை தேடறேளா  அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறேளா என்று கத்திவிட்டு வந்து விட்டான்.

அவன் அம்மாவிற்கு சதா இதே கவலை தான்.

ஜோசியரிடம் காண்பித்ததில் ஒரு முறை திருமணஞ்சேரி சென்று விட்டு வர சொன்னார்.

அதற்கப்புறம் தான் மைதிலியின் ஜாதகம் கிடைத்தது. மைதிலியின் அப்பா குரோம்பேட்டை ராதா நகரில் பிரபலமான சாஸ்திரிகள். நல்லா சாப்ட்வரேல இருக்கிற பையனா இருந்தா சொல்லுங்கோ என்று சொல்லி, குரோம்பேட்டை மண மாலையில் பதிவு செய்ய, அத்தை ஆத்திற்கு  செல்லும் பொழுது, ராம்பிரசாத் கையில் கிடைத்தது. பொருத்தங்கள் பார்த்ததில், மைதிலியின் ஜாதகம் பத்திற்கு ஒன்பது பொருத்தம். ஒரே ஒரு சிக்கல். பையன் சாப்ட்வேரில் இருக்க வேண்டும். 

இந்த இடத்தில்தான் ராம்பிரசாத் துணிந்து, தான் ஒரு ஜாவா
 டெவலப்பர் என்று பொய் சொன்னான்.

பெண்ணுடைய வேலையைப் பற்றி கேட்டதற்கு, அவள் சிறுசேரியில் ஏதோ ஒரு ஐ டி கம்பெனியில் டெஸ்டர் ஆக இருக்கிறாள் என்று தெரிந்தது.

டெஸ்டர் என்றதும் ராம் பிரசாத் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. டெஸ்டர் என்றால், கண்டிப்பாக ப்ரோக்ராம் தெரிந்திருக்காது. நாம் என்ன வேண்டுமென்றாலும், புருடா விடலாம் என்று நினைத்துக் கொண்டான்.

தாலி கழுத்தில் கட்டும் வரை, எப்படியாவது ஓட்டி விட்டால், பிற்பாடு எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று கணக்கிட்டுக் கொண்டான்.


மேலும், கல்யாணம் ஆன பின், குட்டு உடைந்தாலும், ஒன்றும் செய்ய முடியாது என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
ஆனால் மைதிலி அவனை கல்யாணத்திற்கு முன் கேள்வி கேட்டே சாகடித்தாள்.
"என்ன பிளேட்பார்ம்ல இருக்கேள்?"
"ஐந்தாவது பிளாட்பார்ம்...."
"ஜோக் அடிக்காதீங்கோ.....ஜாவாவிலயா அல்லது நெட்லயா?"
"ரெண்டிலயும்"
லஞ்சிற்குள் பிளாட்பார்ம் பற்றி நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
"காலையில கேட்ட இல்ல? நான் ஜாவாலதான் இருக்கேன்"
"அதை ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு சொல்றேள்?"
"அப்ப வேற ஏதோ ஞாபகத்தில இருந்தேன்....இப்பதான் ஞாபகம் வந்தது..."
"நல்லா ஞாபக சக்தி....உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்....இந்த வாரம் என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து டிரீட் தரா ...நீங்களும் கண்டிப்பா வரணும்..."

ராம்பிரசாத்திற்கு அப்பொழுதே வயிறு கலங்கியது. என்ன ஆகுமோ?

அவன் நினைத்தவாறே, பார்ட்டியில் மைதிலியின் நண்பிகள் இருவர், ராம்ப்ரசாத்திடம் பேச்சு கொடுத்தே, அவனைப் பற்றிய சந்தேகத்தை கிளப்பி விட்டார்கள்.

என்னடி....ஜாவாங்கற....சுத்தமா ஒண்ணுமே தெரியல...நல்லா விசாரிச்சுக்கோடி...எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு....

அதற்குள் சமர்த்தாக ராம்பிரசாத் மைதிலியை வெற்றி தியேட்டருக்கு கூட்டி சென்று விட்டான். இளமையும், சந்தேகமும் போட்டி போட...இளமையே
வென்றது.

போனில் குழைவாக, யோவ்! பிராடு...நீ என்னதான்யா வேலை பார்க்குற...என்ன ஏமாத்தறாயா? என்பாள்.
அப்பாவியாக, நீ வேணும்னா...வந்து ஆபிஸ்ல விசாரி என்பான்

எப்படியோ கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மோகம் முப்பது நாளா? இவர்கள் விஷயத்தில் பதினேழாவது நாளில் கொடைக்கானலில் ஹனிமூனில் இருக்கும் போது, சம்பளம் பே ஸ்லிப்பில் அழகாக டெஸிக்நேஷனில் சீப் அக்கவுண்ட் ஆஃபீசர் என்று இ மெயிலில் வந்தது.

மைதிலி பண்ணிய ஆர்ப்பாட்டத்திற்கு, லாட்ஜே திரண்டு வந்து விட்டது.

ராம்பிரசாத் கத்தி பார்த்தான். கோபித்துக் கொண்டு பார்த்தான். கையில் கிடைத்ததெல்லாம் எடுத்து விசிறிப் பார்த்தான்.

உங்களை மாதிரி பொண்ணுங்கக்கெல்லாம் சாப்ட்வேர் வெறி.....பையன் நல்லவனா இருக்கணும்னு ஒருத்தியும் கேட்கறது இல்ல...பையன் சாப்ட்வேர்ல இருக்கணும்...கை நிறைய சம்பாதிக்கணும்...உடனே தனிக்குடித்தனம் போயிடனும்...மாமனார், மாமியாரை போய் எங்கேயாவது கடாசிட்டு வந்திடனும்....சே....இவ்வளவு பேசிறியே....உங்க அப்பா என்ன சாப்ட்வேர்லயா வேலைப் பார்த்தாரு?  நான் நல்ல வேலைலதான் இருக்கேன்...கை நிறைய சம்பாதிக்கிறேன்...இன்னும் என்ன வேணும்?

அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள்

சே ...என்ன எழவுடா இது? பேசாம கல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்?

அவன் கத்துவதை பொருட்படுத்தாமல் அழுது கொண்டே இருந்தாள்.

சனியனே...இப்ப அழுகையை நிறுத்த போறயா இல்லையா?

அழுகையை நிறுத்திக் கொண்டே, விம்மினாள்...மெதுவான குரலில் கேட்டாள்...

"இத என் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல?"

"சொன்னா...எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடந்திருக்காது....வேணும்னுதான் பொய் சொன்னேன்...வேற வழி இல்ல...எனக்கு மட்டும் இல்ல...இந்த காலத்தில இருக்கிற பசங்க அத்தனை பேருக்கும் ...."
"நீங்களாச்சும் ப்ரோக்ராமரா இருக்கக்கூடாது...சே"
"என்ன சொல்றே....புரியல...."
"நானும் டெஸ்டர் இல்ல....அக்கவுண்ட்ஸ்தான் "



















No comments:

Post a Comment