Tuesday, June 14, 2016

ராஜீவ் காந்தி

எண்பத்து நான்கில் திடீரென்று இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, ராஜீவ் காந்தி பிரபல்யமானார். அதுவரை, ப்ளைட் விமானியாக இருந்தவர், ஒரு சிலநாட்களில், அரசியலில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். சேலமே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. ராஜீவ் காந்தி, இரண்டாவது  அக்ரஹாரம் வழியாக செல்கிறார் என்றதுமே, ஊர் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை, பெரியவர்கள் விரட்டினார்கள். கவனியுங்கள். இரண்டாவது  அக்ரஹாரத்தில், அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாட முடியும். எப்பொழுதோ செல்லும் ஒன்றிரண்டு டவுன் பஸ்களைத் தாண்டி, சாலை காலியாக இருக்கும். மனோகர் மெடிகல்ஸ் அருகே நின்று பார்த்த பொழுது, வைஜயந்தி மாலாவைப் பார்க்க முடிந்தது. கூட்டம் முழுக்க, வைஜயந்தி மாலா என்று கத்திக் கொண்டிருந்தார்கள். என் நண்பன் பாபு என்னிடம், ராஜீவ் காந்தி, நம்ம ஸ்கூல் கிட்ட வந்திருக்கிராருடா....இப்ப யாரும் இல்ல...போய் பாக்கலாமா? என்றான். எனக்கு சிலீர் என்றது. .எத்தனையோ முறை டி வீ யில் பார்த்த ராஜீவ். மிக அருகில் பார்க்க போகிறோம். கூட்டத்தைத் தவிர்த்து, மிளகாய் சந்து வழியாக, லக்ஷ்மி பெருமாள் கோயில் வழியாக ஸ்கூலை அடைந்தோம். எப்போதும் போல் காமராஜர் எங்கள் பள்ளியின் வாசலில் ஒரே திக்கை பார்த்துக் கொண்டு, சிலையாய் நின்று கொண்டிருந்தார்.
எங்கடா? என்றேன்..
இன்னும் வரவில்லை போல இருக்கு.....

திடீரென்று நிறைய கார்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் வந்தார்கள். தடுப்புக்கு அப்பால், மக்கள் ராஜீவ் என்று கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லாம் ராஜ விஸ்வாசம்.

போலீஸ் பந்தோபஸ்து அதிகமாய் இருந்தது. ஒரு இடத்தில், கிடைத்த சிறிய சந்தில், நானும் பாபுவும் மூங்கிலை பிளந்து கொண்டு, நுழைந்தோம்.

ராஜீவ் அப்போது காரிலிருந்து இறங்கி, மக்களைப் பார்த்த மகிழ்ச்சியில் சால்வை வாங்கிக் கொண்டிருந்தார். இரானிய சிகப்பு. ஆறடிக்கு அருகே உயரம். சிரிக்கும் கண்கள்.

அத்தனை கூட்டத்தில், உள்ளே நுழைந்து, சார்..என்று முதலில் நான் கை நீட்டினேன். பாபு இரண்டு அடி பின்னால் நின்றான். மிக நிதானமாய், குனிந்து என்னை முழுவதுமாய் பார்த்தார். முகத்தில் புன்னகை தவழ, கை கொடுத்தார். மிருதுவான கைகள்.

ஒவ்வொரு முறை, ராஜீவ் காந்தி அவர்களை டி வீ யில் காண்பிக்கும் பொழுது, அந்த மென்மையான
கரங்களும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

No comments:

Post a Comment