Saturday, June 25, 2016

இன்னொருவன் - சிறுகதை

முதலிலேயே ஒன்றை விடுவது உத்தமம். இது என்னைப் பற்றிய கதை அல்ல.
நான் பாட்டுக்கு கதை சொல்லிக் கொண்டே இருப்பேன்....நீங்கள் பாட்டுக்கு ம் கொட்டிக் கொண்டே இருக்க  வேண்டும்.
மேலும், இந்த கதையில் திடீர் திருப்பங்களோ, சிலைத் திருட்டோ,  பெண்களின் மன நிலையோ கிடையாது.
நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், இப்போது என் ஜன்னலின் வழியே அடுத்த அறை தெரிகிறதா?
கொஞ்சம் நாசுக்குக்காக குனிந்து பாருங்கள்.  இந்த அறையிலிருந்து ஒரு மாதிரியாக அவனைப் பார்க்க முடிகிறதா?
எப்படி இருக்கிறான்?
பரட்டை தலை, நீண்ட நாள் தாடி, கிழிந்த உடை, எங்கேயோ வெறித்த பார்வை.
நான் வந்ததிலிருந்து அவன் அப்படித்தான் இருக்கிறான்.  ராத்திரியில் அவன் கத்தும் சத்தம் கேட்க வேண்டுமே? ஒரு விசித்தரமான சத்தம். மயில் அகவும் சத்தம். எல்லாம் ஒரு துளி விஸ்கிக்காக.
மன்னிக்கவும். இந்த இடத்தில் கொஞ்சம் சுயபிரதாபம் தேவைப்படுகிறது.
என் பெயர் இப்போதைக்கு ராமன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  டெலிபோன் டைரக்டரியில் எத்தனையோ ராமன்கள் , நரசிம்மன்கள், சுரேஷ்கள்....எனக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும். வாலிபம் முறுக்கேறிய வயது. என் வகுப்புத் தோழன், மணிவண்ணன்தான், எனக்கு குடியை அறிமுகப் படுத்தினான். இப்போதெல்லாம் சீமை சரக்கு மலிவாக கிடைக்கிறது....அப்போதெல்லாம் கள்ளுதான்...காலையில் சீக்கிரம் கிளம்பி, ஊருக்கு வெளியே வயக்காட்டில் அங்கங்கு பையர்களை மிதிக்காமல், பனைமரத்தடியில், இறக்கக் காத்திருந்து, சொம்பில், ஒரு ரவுண்ட் விட்டால், குனிந்தால் முதுகு தெரியும்.  அப்படியே பள்ளிக்கு செல்வோம்.
மீண்டும் இப்போது நிகழ்காலத்திற்கு வர வேண்டி இருக்கிறது.
அவன் இப்போது என்னைப் பார்க்கிறான்.
பிரதர்....
குரலா அது?
சொல்லுங்க....
ஒரே ஒரு க்ளாஸ் விஸ்கி கிடைக்குமா?
மீண்டும் ஞாபகப் படுத்துகிறான். அதற்க்காகவா இத்தனை செலவு செய்து இங்கே வந்தோம்?
கோபத்தில் ஜன்னலை சாத்துகிறேன். ஒரு வேளை அப்படி பண்ணி இருக்கக் கூடாதோ?
மார்னிங் அசெம்பிளிங்கிற்கு கதவைத் தட்டுகிறார்கள். தெரிந்த விஷயம்தான்.
இன்றைக்கு யாரோ ஒரு புண்ணியவான், வந்து கீதையையோ, குரானையோ மேற்கோள் காட்டி, ஒரு மணிநேரம் பேசப் போகிறான்.
முதல் சில நாட்களில், அத்தனை கஷ்டமாக இருந்தது. ஓடி விடலாமா என்று இருந்தது.
தினமும் இதே மாதிரி லெக்ச்சர்கள். கொஞ்சம் தியானம். நிறைய உறக்கம். இவர்கள் கொடுக்கும் மருந்திற்கு பகல் முழுவதும் தூக்கம் வருகிறது. சாயந்திரம் கொஞ்சம் தோட்டத்தில் வேலை. டி வி கிடையாது. செல்போன் கிடையாது. இன்டர்நெட் இ மெயில்  கிடையாது. முற்றிலும் புதிய வாழ்க்கை.
இந்த பதினைந்து நாட்களில், முகத்தில் நிறம் கொஞ்சம் கூடி இருக்கிறது. நன்றாக பசிக்கிறது.
"உங்களை பழைய மாதிரி பார்க்கறதுக்கு அத்தனை சந்தோஷமாக இருக்கு "
கௌரியின் முகத்தில் போன வாரம் ஞாயிறு அன்று அத்தனை சந்தோஷம்.
இவளை எப்படி எல்லாம் இம்சித்தோம்? சரி வேண்டாம். பழைய கதை.
இப்போது சர்விஸ் அஸிஸ்டண்ட்கள் அவனை அழைக்கிறார்கள்.
கீழே வா
ஒரே ஒரு முறைப் பார்க்கிறான்.
நான் கீழ வரணும்னா, கொஞ்சம் விஸ்கி வேணும்...
சரி கொடுக்கிறோம்
பொய்
நிஜமாப்பா...வேணும்னா, டாக்டர் கிட்ட வந்து கேளு....
இல்லை..உங்களை நம்ப மாட்டேன்....
இல்லப்பா....நம்பு...
இல்லை...
இப்போ என்ன செய்யலாம்?
வேற வழி இல்லை.....
இங்கு சேரும் போதே, பார்மில் கையெழுத்து வாங்கி விடுவார்கள். இங்கு நடக்கும் சிகிச்சைப் பற்றி, எந்த விதமான சட்ட ரீதியான வழக்குகளும் தொடுக்க முடியாது அவன் கீழே வரும் போது, கண்கள் சிவந்திருந்தன. அநேகமாய் அழுதிருக்க வேண்டும். நான் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி, வந்திருந்த கெஸ்ட்டைப் பார்க்கிறேன்.
லெக்ச்சர் மிக சீரியஸ் ஆக, பகவத் கீதையைப் பற்றி, பேசிக் கொண்டிருந்தார்.
"மூன்று குணங்களால் ஆன வஸ்துக்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய் உள்ளதால், இவைகளுக்கு மேலாகிய என்னை அறிகிறதில்லை."
நான் மீண்டும் பார்க்கிறேன். அவன் அழுது கொண்டிருக்கிறான்.
அன்றைய மாலை வரை தூக்கம். வேறு எதுவும் நினைவில் இல்லை. விசிட்டர் ஹவரில் கௌரி வந்திருந்தாள்.
எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கேன்
இன்னும் பத்து நாள்தான்...நீங்க முழுசா குணமான உடனே வீட்டிற்கு போயிடலாம்
எப்படியோ இந்த குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்தா போதும்....
எல்லாம் கெட்ட நேரம்தான்....
உனக்குத்தான் நன்றி சொல்லணும் கௌரி...நீ இல்லேன்னா நான் இங்க வந்திருக்க மாட்டேன்....அதுலயே மூழ்கி இருப்பேன்
சரி விடுங்க...
நான் இங்கு வந்தது தனிக்கதை. சிறு வயதில் பழக்கமான குடி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து, தினமும் ஒரு ஆப் இல்லெயென்றால், என்னால் தூங்க முடியாது சார்.
பணம் இல்லாத காலங்களில், கடையில் எச்சைக் குடியெல்லாம் குடித்திருக்கிறேன்..
சரி விடுங்கள். அதெல்லாம் கடந்த காலம். இந்த மறுவாழ்வு மையத்தில் என்னை சேர்த்தது என் மனைவி. யார் மூலமோ கேள்விப்பட்டு, முப்பது நாட்கள் ப்ரோக்ராமில் வந்திருக்கிறோம்.
பத்து நாட்களிலேயே நிறைய முன்னேற்றங்கள். கை நடுக்கம் குறைந்திருக்கிறது.
கௌரி கிளம்பியதும், நான் அறைக்கு வந்து தூங்க ஆரம்பித்து விட்டேன்.  நடு இரவில் அறை கதவை யாரோ தட்டினார்கள்.
கதவைத் திறந்தால், போலீஸ்.
என்னப்பா இப்படி ஒரு தூக்கம்? இங்க வந்து பாரு....
அடுத்த அறைக்கு அழைத்து செல்கிறார். முதல் முறையாக உள்ளே நுழைகிறேன்.
அவன் உத்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறான்.
"கீழே வந்து ஸ்டேட்மெண்ட்ல கையெழுத்து போட்டு கொடுங்க....மாசத்துக்கு ஒரு தற்கொலை கேசு...."
நாக்கு தொங்கி, கண்கள் பாதி திறந்த நிலையில்.....
நினைக்க பயந்து, கையெழுத்து போட்டு விட்டு, மீண்டும் ரூமிற்க்கு வந்து தூங்கினேன். ஆனால், தூக்கம் வரவில்லை. ஏதேதோ நினைவுகள். பக்கத்து ரூமில் போலீசின் பேச்சு குரல்கள். விடிகாலையில் தான் தூக்கம் வந்தது.
விடிந்து விட்டது. ஒன்பது மணி இருக்கும். இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்? நேற்றைய சம்பவங்கள் எல்லாம் மறந்து விட்டு, ஒரு புதிய நாளை தொடங்க வேண்டும்.
குளித்தேன். மார்னிங் அசெம்பிலி முடிந்திருக்கும்.
ஒரு முறை ஜன்னலை திறந்து பார்த்தேன்.
பரட்டை தலை, நீண்ட நாள் தாடி, கிழிந்த உடை, எங்கேயோ வெறித்த பார்வை.......இன்னொருவன்

No comments:

Post a Comment