Wednesday, June 15, 2016

சீனிவாசன் - சிறுகதை

டிசம்பர் இருபத்து நான்கு, எண்பத்து ஏழாம் வருடம் எனக்கு பரீட்சை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. காரணம் அன்று விடியற்காலையில் எம் ஜி ஆர் இறந்து விட்டார்.

ஐய்யா ..ஜாலி என்றேன்.

ரேடியோவும், டி வி  யும் யாழ் மீட்டியது. எதிர் வீட்டு மாமா, உன் பாடு கொண்டாட்டம்தான். இனி, கிரேகியம் முடிக்கும் ஸ்கூல் திறக்காது என்றார்.






சொன்ன மாதிரியே நடந்தது. அடுத்த நாளைக்கும், அதற்கடுத்த நாளைக்கும் பள்ளி விடுமுறை என அறிவித்தது.

அப்போதுதான் பள்ளி பேஸ்கட் பால்  மைதானத்தில் சீனிவாசனை முதலில்
கவனித்தேன்.




சீனிவாசன் என் வகுப்பு. கடைசி வரிசையிலும் இல்லாமல், முதல் வரிசையிலும் இல்லாமல் நடுவில் பாதுகாப்பாய் அமர்பவன்.

யாருக்கும் அவனைப் பற்றிய அபிப்ராயமே இருந்ததில்லை. 

திடீரென்று கிளாஸ் டீச்சரிடம் சீனிவாசனைப் பற்றிய அபிப்ராயத்தை கேட்டால் நிச்சயம் தடுமாறியிருப்பார். வாத்தியார்களை பொருத்தவரை, அவர்கள் கவனத்தில் இருப்பது, நன்றாக படிப்பவர்களோ, அல்லது சுத்தமாய் படிப்பு வராதவர்களோ.

என்ன, இன்னிக்கும் லீவா?

ஆமாம்.

நான் அவனுடன் பேசியதே அவனுக்கு அங்கீகாரமாய் இருந்திருக்க வேண்டும்.


அப்போதுதான் அவனுடைய கசங்கிய உடைகளை பார்க்க நேர்ந்தது. அக்குளில் மறைவாய் கிழிசல். 


வீட்டிற்கு போகலையா?

ம் ஹி ம் ....இந்த பைகளை பார்த்துக்கணும்.....

கீழே கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், இவனைக் காவலுக்கு வைத்து சென்றிருந்தனர். மொத்தம் இருபது பைகள் இருக்கும். தூரத்தில், கிரிக்கெட் விளையாட டீம் பிரித்து கொண்டு இருந்தது தெரிந்தது.

நீ போகலயா?

எனக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்காது....

 எனக்கும் என்றேன்.

பரஸ்பரம் பொது விருப்பில், நாங்கள் நெருங்குவதாக தோன்றியது. இது வரையில் மொத்தமே பத்து வார்த்தைகள் கூட பேசியதில்லை. நான் எல்லாம் முதல் வரிசை. சிவாவிடம் போட்டியிலேயே என் பொழுது போய் விடும்.

எப்ப எக்ஸாம் வைப்பாங்கன்னு தெரியல? தினமும் இந்த மாதி...

நான் எதிர்பாராமல்  அந்த சம்பவம் நடந்தது. பேசிக் கொண்டிருந்த சீனி, மடாலேன கீழே சரிந்தான். பேஸ்கட் பால் மைதானத்தில், நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.

விஜய்...சூரி....பிரபா....

நான் கத்தினது அவர்களுக்கு கேட்கவே இல்லை.

இப்போது சீனி மயக்கத்தில் இருந்தான். கண்கள் திறக்கவில்லை. நான் பையில் இருந்த, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து முகத்தில் அடித்தேன்.

பழக்கம் இல்லாததால், என் கால்கள் அனிச்சையாய் நடுங்கிக் கொண்டிருந்தன.

டேய்,டேய்...
என் மடியில் சரித்து, அவன் வாயில் கொஞ்சம் தண்ணீர் விட்டதும், இரண்டு நிமிடத்தில் கண் திறந்தான். போன உயிர் எனக்கு வந்தது.
என்னடா ஆச்சு...
மயக்கம் போட்டுட்டேனா?
ஆமாம்.....ஏன்?
இல்ல...நேத்திலேர்ந்து சாப்பிடல...அதான்

பளார் என்று யாரோ அறைந்தமாதிரி இருந்தது.

ஏன் உங்க வீட்டில யாருமே இல்ல?

இருக்காங்க.....ஆனா,

அவன் சொல்ல முற்படும் பொழுது, சையத் வந்து விட்டான்....

டேய்...சீனி, உனக்கு லீவுன்னு சொன்ன உடனே, உங்க சித்தி உன்னைய கூப்பிட்டாங்க....ஏதோ மாவு அறைக்கனுமாம்...இந்த பைய எல்லாம் நான் பார்த்துகிறேன்....நீ வீட்டுக்கு போ....நேத்து மாதிரி விறகுல அடி வாங்கி வாங்காதே....

அப்பொழுதுதான், அவன் காலில் இருந்த தழும்புகளுக்கு அர்த்தம் தெரிந்தது.

இருவரும் கிளம்பினோம். வாசல் வரை, ஒன்றும் பேசவில்லை. கிளம்பும் போது மெதுவாக, "யார் கிட்டயும் சொல்லாதே" என்றான்.


அப்புறம் அவனை தற்காலிகமாக மறந்து, சாயந்திரம் ட்யுஷனில் சிவாவிடம் கேட்டேன்.

அதுவா? அது ஒரு பெரிய சோகக்கதை. சீனி அம்மா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க...அவங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாறு.....சொத்து முழுவதும் இவன் பேர்ல இருக்கு....சித்தி தன் பேருக்கு மாற்ற கேக்குறாங்க...அவங்க அப்பா அதுக்கு ஒத்துக்கல...அந்த கோபத்த அவன் மேல காண்பிக்கிறாங்க...அவன் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடறான்...எல்லா வேலையும் அவன் தான் செய்றான்

மேற்கொண்டு கதையை கேட்க, மனது தைரியப்படவில்லை.

அடுத்த நாள் மீண்டும் எக்ஸாம் எழுத பள்ளிக்கு சென்ற பொழுது, அதே போல நாளை பரீட்சை என்கிற போர்ட் இருந்தது.

சீனி இன்றும் பைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டாயா? என்றேன்
திரும்பி புன்னகைத்தான்.
ஆச்சு......
இன்னிக்கும் எக்ஸாம் இல்லை....
இன்னும் எவ்வளவு நாளுன்னு தெரியல....

உங்க வீட்டில யாரெல்லாம் இருக்காங்க.....
அப்பா, சித்தி, தங்கை,

உன் தங்கையா?
ஆமாம்....சித்தியோட பொண்ணு...

நேத்து பயந்திட்டேன்.....

சாப்பிடல அதுதான்....அது அடிக்கடி நடக்கறதுதான்....

போலாமா? என்றேன்

நீ போ....நான் அப்புறமா வரேன்

ஏன்?

எங்க வீட்டில பணம் காணாம போயிடிச்சி...சித்தி நான்தான் எடுத்தேன்னு நினைச்சு, அடிச்சி அனுப்பிட்டாங்க......இப்ப வெறும் கையோடு போனா சோறு கிடைக்காது..யார் கிட்டயாவது சொல்லி வாங்கி போயிக்கறேன்...

நீதான் எடுக்கலையே? அப்புறம் ஏன் பயப்படனும்?

அவங்க நம்ப மாட்டாங்க....ஒவ்வொரு தடவையும் என் மேல, ஏதாவது ஒரு பிரச்சனை கிளப்பிகிட்டே இருப்பாங்க....சொத்து எழுதிக் கொடுத்துட்டா அவங்க உட்டுருவாங்க...

எழுதிக் கொடுத்துட வேண்டியதுதானே

அப்பா பயப்படறாரு....சித்தி சொந்தமெல்லாம் வந்துடும்....

நான் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன். அடுத்த நாள், என் வீடு தேடி வந்தான்.


எப்படி என் வீடு தெரியும்?
சிவா சொன்னான்...

உள்ளே வந்து என் அம்மாவின் காலில் விழுந்தான். தம்பியுடன் பேசினான்.

இருவரும் சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பினோம்.

உங்க அம்மா எவ்வளவு நல்லவங்க இல்ல?

ஹ்ம்ம்...படிக்கலேன்னா அடிச்சுடுவாங்க....

அப்படித்தான் இருக்கணும்....எனக்கும் அம்மா இருந்தா இப்படித்தான் இருப்பாங்க...இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்....

அடிக்கடி வா....

இனிமே எப்படி?

ஏன்?

மணல் மேட்டில், என்னோடு இன்னொரு சைக்கிளில் இணையாக வந்தவன், திடீரென்று புயல் வேகத்தில் கடலூர் பஸ்ஸை கடந்து, விமலா மெஸ் திருப்பத்தில், எதிர் வந்த லாரியின் உள்ளே புகுந்து....

 இன்று வரை எல்லாரும் விபத்து என்றுதான்  நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.







No comments:

Post a Comment