Tuesday, June 28, 2016

ஒரே ஒரு க்ளிக்

நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். நீண்ட நாள் என்னுடன் பரிச்சயம் உள்ளவர்.  நான் எழுதுவதை தொடர்ந்து ஓரளவிற்கு படித்து வருகிறார்.
"உனக்கு மனசுல பெரிய சுஜாதா, பாலகுமாரன்னு நினைப்பா?"
நான் என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
"அதாவது நீயும் ஒரு சுஜாதா....அவரை மாதிரியே நீயும் கம்ப்யூட்டர்ல இருக்கே...கதை எல்லாம் எழுதுவ....நீ ஏன் கவிதை எல்லாம் எழுதக் கூடாது"
அவரின் எள்ளல் தொனி எனக்கு புதிதல்ல என்றாலும், அவர் என் எழுத்தை நக்கல் அடிக்கிறாரா , அல்லது என்னையா என்கிற சந்தேகம் மட்டும் நீங்கவில்லை.
இந்த மாதிரியான மனிதர்களை மிக அரிதாக சந்தித்து இருக்கிறேன்.
இவர்கள் எல்லாம் கீழே இருந்த கொண்டு, மேடையைப் பார்த்து பரிகாசம் செய்கிறவர்கள்.
உனக்கு திறமை இருந்தா, நீயும் எழுது....யார் தடுத்தா? என்றெல்லாம் கேள்விகள் பிறந்தன. ஆனால், கேட்கவில்லை.
இலக்கியத்தில்  உங்களுக்கு தேவையானதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பும் சேனல் போல, நொடிக்கொரு முறை உங்களால் எதையும் படிக்கும் சுதந்திரம் உங்களிடம் உள்ளது. இதில் படைப்பாளியின் பங்கு ஒன்றுமே இல்லை.
நான் எழுத வந்த காரணம், எழுதவதற்கு நிறைய இருப்பதாகப் பட்டதால். நான் கொஞ்ச நாள் பாட முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், அதனை முழுவதுமாக பின் தொடரவில்லை. காரணம், அதற்க்கான மெனக்கெடல் என்னிடம் இல்லாததால்.
எனவே, என் எழுத்தை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. என் எழுத்தை காரி உமிழ உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், என்னைப் பற்றி?
அடுத்த முறை, நீங்கள் என் எழுத்துகளை படிப்பதற்கு பிளாகைத் திறக்கும் முன் யோசியுங்கள்.

No comments:

Post a Comment